நாமக்கல்லில் சாதி மறுப்பு மற்றும் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.இது சாதி ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் தில்லைபுரம் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் சந்தோஷ். இவரது மனைவி சுமதி. இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகாதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது குடும்பத்தில் இத்தம்பதியினரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனிடையே தனியார் வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வந்த சந்தோஷ், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒசூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் மனைவி சுமதி (35) மட்டும் நாமக்கல்லில் வசித்து வந்தார்.
சந்தோஷ், திங்கட்கிழமை மாலை மனைவி சுமதியை செல்லிடப் பேசியில் அழைத்துள்ளார். பலமுறை அழைத்தும் அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால் நாமக்கல் வங்கி கிளையில் பணியாற்றும் தனது நண்பர் ஒருவரை அழைத்து வீட்டிற்கு சென்று பார்த்து வரும்படி கூறியுள்ளார். அவர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுமதி கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்.
இதுகுறித்து நாமக்கல் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அண்மையில் மகனை ஏற்றுக்கொண்ட சந்தோஷின் பெற்றோர், திருமண வரவேற்பு நடத்துவது என முடிவு செய்து வரும் 22-ஆம் தேதி நாமக்கல்லில் விழா நடத்த முடிவு செய்துள்ளனர். இதையொட்டி திங்கட்கிழமை மதியம் சந்தோஷின் தாய், சுமதியை பார்க்க வந்ததாக கூறப்படுகிறது. அவர் வீட்டிலிருந்து சென்ற பிறகுதான் சுமதி கொலை செய்யப்பட்டிருப் பதாக தெரியவந்துள்ளது.
தீக்கதிர் செய்தி
முகப்பில் கோப்புப் படம்