கவிஞர் குமரகுருபரன் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருடைய அகால மரணத்துக்கு இலக்கியவாதிகள், வாசகர்கள், அன்பர்கள் செலுத்திய அஞ்சலிகள் இங்கே…
குமரகுருபரன் இறந்த தகவல் சற்று முன் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். 1999ல் என்னுடன் விண் நாயகன் இதழில் பணியாற்றியபோதே அவருடைய படைப்பாற்றலை நான் நன்கு அறிந்திருந்தேன். இன்னும் நிறைய சாதிக்கும் ஆற்றலுடன் இருந்தவர். என்றைக்காவது அவர் சினிமாவிலும் வித்யாசமான முயற்சியை செய்வார் என்று நம்பியிருந்தேன். குமாருக்கு என் அஞ்சலிகள். என்னை விட இளையவர்களின் மரணம் என்னை எப்போதும் வருத்தப்படுத்துகிறது. இளம் படைப்பாளிகள் உடலைப் பேணுவது, அதற்கேற்ற உணவு, இதர பழக்க வழக்கங்களை சபலங்களுக்கு உட்படாமல் கறராகப் பின்பற்றுவது என்ற நிலையை இனியும் மேற்கொள்ளாவிட்டால், மேலும் பல குமரகுருபரன்களை இழந்துவிட்டு புலம்பிக் கொண்டேஇருக்கும் நிலையில்தான் இருப்போம்.
நேரில் சந்தித்ததேயில்லை இதுவரை. இரண்டொருமுறை தொலைபேசியில் பேசியதோடு சரி. சீக்கிரம் கவிதைப் புத்தகம் போடுங்கள் என்று முகநூலில் சொல்லிக்கொண்டே இருப்பேன். ஆனால் அவர் இரண்டு புத்தகங்கள் வெளியிட்டும் வெளியீட்டு விழாவுக்கு செல்ல இயலவில்லை.
சென்றவாரம் பிறந்தநாளுக்காக பேசியபோது செல்லை அணைத்து வைத்திருந்தார். முந்தாநாள் முகநூலில் அவரது பதிவு பார்த்து மீண்டும் அழைத்து தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறினேன். நீங்களும் பி.ஜி.எஸ்.சும் எப்போதிலிருந்து என்கூடவே இருக்கிறீர்கள் என்று மகிழ்ந்தார். சீக்கிரம் சந்திப்போம் மதி என்றார்.
இனி சந்திக்கவே முடியாதா குமார்?
இப்போது தோன்றுவது ஒன்றுதான்… நண்பர்களின் சந்திப்பைத் தள்ளிப்போடக் கூடாது… அல்லது நண்பர்களுக்கு அஞ்சலி எழுதும் வாய்ப்பு இனி வரவே கூடாது.
சமீபத்தில் தான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று கவிதாவிடம் சொன்னேன். அவளிடம் இருந்து பதில் வரும் முன் அவர் இப்படி ஒரேடியாக விடைபெற்றுவிடுவார் என்று நினைக்கவேயில்லை.
இன்னுமொரு இருண்ட தினமாக இந்த ஞாயிறு விடியுமென்று நினைக்கவில்லை……. காலையில் இப்படி ஒரு செய்தி வரும் என துளியில் நினைக்கவில்லை. தகவல் சொன்ன குரலில் தெரிந்த லேசான நடுக்கம் என்னையும் பற்றிக் கொண்டது.
அவரை கவிதாவின் குரல் வழியே தான் அதிகம் அறிந்திருக்கிறேன். அவரைச் சிலாகித்து என்னிடம் பேசுவாள். அவளுடைய கவிதை, அவளுடைய காதல், அவளுடைய வாழ்க்கை எல்லாமே அவரைச் சுற்றித் தான் இயங்கிக் கொண்டிருந்தது. அவருடைய மரணச் செய்தியைக் கேட்டதும் இவள் முகம் தான் நினைவுக்கு வந்தது. ஏனிப்படி என்ற கேள்வியை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். பதில் இல்லை. கவிதாவுக்கான ஒரு ஆறுதல் வார்த்தையும் என்னிடம் இல்லை. குமரகுருபரனுடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக் கொண்டே இருக்கிறேன்.
நம் மனதின் ஒரு பகுதி இறக்கிறது.
குமரனின் உடல் அருகே காலையிலிருந்து அமர்ந்திருக்கிறேன்.
சாவின் வெய்யில் கணத்திற்கு கணம் உக்கிரமாகிக்கொண்டே இருக்கிறது.
கவிஞர் குமரகுருபரனின் ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ நூலுக்கு மூன்று நாட்களுக்கு முன் கனடா இலக்கியத் தோட்டத்தின் விருது கிடைத்திருக்கும் செய்தி வந்தது.
இன்று காலை குமரகுருபரன் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று இப்போது செய்தி வந்திருக்கிறது.
குமரகுருபரன் தனது முகநூல் பக்கத்தில் தனது அபிமான வாசகமாக சொல்லியிருப்பது:
‘காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்த தெல்லாம் காண்பமன்றோ’.
இயல் விருது பெற்றமைக்கு நேற்று குமரகுருபரன் அண்ணனுக்கு வாழ்த்துகள் தெரிவித்தேன்.இன்று மரணச்செய்தி வருகிறது.
அற்புத மனிதனை,வியக்கவைக்கிற கவிஞனை ஏன் இத்தனை வேகமாக பறித்துக்கொள்கிறது இயற்கை.
மீளமுடியாத துயரமாக இருக்கிறது.ஆன்மா சாந்தியடையட்டும்.
ஒரு அபத்தக் காட்சி
கவி குமரகுருபரன் இறந்துவிட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. நேரில் சந்தித்ததில்லை.கொஞ்சம் கசப்பு உண்டு.நான் சுஜாதா விருது பெறுகையில் சில விமர்சனங்கள் எழுந்தன.ஜெயமோகன் கடுமையாகத் தாக்கி எழுதினார்.தொடர்பாக எழுந்த விவாதங்களில் கவி ராஜ சுந்தரராஜனிடம் கடும் பிணக்கம் ஏற்பட்டது.அப்போது குமரகுருபரன் ராஜசுந்தர ராஜனை ஆதரித்து என்னைக் கடுமையாக விமர்சித்தார்.பிறகு சக்கரம் சுழன்று ராஜ சுந்தர ராஜனின் புதிய தொகுப்பை வெளியிடுகிறவர்களில் நானே ஒருவராக மாறினேன்.பலரைப் பிரித்த சென்னை வெள்ளம் எங்களை மீண்டும் பிணைத்தது
பிறகு ஒரு பதிவில் குமரகுருபரன் ராஜ சுந்தர ராஜனை கடும் கொச்சையாகப் பேச நான் அவருக்கு ஆதரவாகப் பேசினேன்.பிறகு குமரகுருபரன் அவர் கடுமையாக் விமர்சித்துக்கொண்டிருந்த மனுஷ்யபுத்திரனிடமே போய்ச் சேர்ந்தார்.அவரது புத்தகத்தை உயிர்மை வெளியீடாக ஜெயமோகன் வெளியிட்டார்.அதற்குத்தான் இப்போது இயல் விருது கிடைத்திருக்கிறது.அது பற்றி விமர்சனங்கள் அவர் இறந்துபோன இன்று காலை கூட யாரோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.இவையெல்லாம் இந்த ஒரே ஒரு வருடத்துக்குள் நிகழ்ந்தவை.இன்றைக்கு அவரது சரமச் செய்தியை மனுஷ்யபுத்திரன் மூலமாகவே தெரிந்துகொண்டேன்.
நான் இப்போது ஜெயமோகனுடன் பழைய கசப்புகளின்றி மாலை நடைகள் போய்க்கொண்டிருக்கிறேன்.விஷயங்கள் ஒரு முடிவுக்கு வராவிட்டாலும் ஒரு சுற்று வந்துவிட்டன
கடைசியாக அல்லது முதலாக குமரகுருபரனைப் பார்த்தது ஏப்ரல் மாதம் உயிர்மையில் என்னுடைய கவிதை நூல் வெளியீட்டுவிழாவில்.
நான் மேடையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.குமரகுருபரன் விழாவின் நடுவில் நுழைந்தவர் அரங்கில் அமர்ந்திருந்த ராஜசுந்தர ராஜனை முகமன் செய்துவிட்டு கடந்துபோய்க்கொண்டிருந்தார்.
என்ன அண்ணே அவசரம்?
ஒரு முறை தானே உங்களோடு பேசியிருக்கிறேன்.. “மீண்டும் சந்திப்போம்”ன்னு சொன்னிங்களேன்னே…
பயணம், புத்தகம், கவிதை, இசை, இலக்கியம் இல்லா உலகில் எப்பிடின்னே இருக்கப் போறீங்க?…
Please .. திரும்ப வந்துருங்கன்னே…
குமரகுருபரன் என்றால் கொண்டாட்டம் மட்டுமே நினைவுக்கு வருமளவிற்கு கொண்டாட்டமாய் வாழ்ந்த மனிதன், இன்று உறங்க சென்றுவிட்டாரோ!
எனது உற்ற நண்பர் கவிஞர் தம்பி குமரகுருபரனின் மரணச் செய்தியை நம்புவதா இல்லையா என்று குழம்பிப்போய் கிடக்கிறேன், மரணம் கொடியது வன்மமானது.
மிகவும் பதட்டமாக இருக்கிறது.. குமரகுருபரன் பெரிய அறிமுகமில்லை ஓரு கூட்டத்தில் கலந்துகொண்டதோடு சரி இன்னொரு முறை வாங்க பாலா. அவ்வளவுதான்.. மதிப்புமிக்க இயல் விருது பெற்றகையோடு மறு நாள் வெளியேறிப்போவது பெருந்துயரம்.. பதட்டமாக இருக்கிறது
இந்த முறை
நான் அமைதியாக அதனை
அணைத்துக் கொண்டேன்.
கவிஞர் குமரகுருபரனின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இத்தனைக்கும் அவரை நான் நேரில் பார்த்ததில்லை. ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பையும் இணையத்தில் எழுதும் கவிதைகளையும் வாசித்திருக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் சர்ச்சைகளின் வழியாகவே அவரை அதிகமும் அறிந்திருக்கிறேன். ஒரேநேரத்தில் ஜெயமோகனின் சீடராகவும் தீவிர திமுக ஆதரவாளராகவும் அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது ஆச்சர்யமளித்தது. கவிஞர்கள் அப்படித்தான் இருப்பார்கள். புகைப்படங்களில் அவரது தோற்றம் ஆளுமையுடையதாய் இருக்கும். இளம் கவிஞராகவும் பத்திரிகையாளராகவும் இருந்த குமரகுருபரனின் மரணம் வருத்தமடையச் செய்கிறது. அவரது அன்புக்கு உரியவர்களாக இருந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
மரணம்
விமர்சனங்களின் மீதான கொடிய புன்னகை
மனம் சுயவெறுப்பிலும் கசப்பிலும் ஊறுகிறது
இனி இந்த நாள்மனதில் முள்ளாய் தைக்கும்
கடந்தவர் இல்லை
வாழ்தலையும் மரணித்தலையும்
குற்றம் புரிதலையும் அதனைக் கடத்தலையும்
சென்று வா நண்ப
ஆம், நண்ப என அழைக்கிறேன்..
திரளும் கண்ணீர்
சிந்தவில்லை..
பெருங்குரலெடுத்து
அழவில்லை..
உடைந்து உடைந்து
உடைந்துகொண்டே
இருக்கிறேன்……
அய்யோ கவி….
எப்படி தேற்றப்போகிறேன்..
ஒரு கூட்டத்தில் அவரின் பேச்சைக் கேட்டிருக்கிறேன்.
திரைப்பட உருவாக்கம் குறித்து பேசினார்.
ஒரு மூன்றாம் தரப்படம் என்றாலும் பட உருவாக்கத்திலும் மெனக்கெடுபவர்களின் உழைப்பை பேசினார்.
கவிதை சன்னத நிலையில் தோன்றும் என்றும்
சன்னதம் என்ற சொல்லை மிக அமைதியாகவும் அதிகமாகவும் பயன்படுத்தினார்.
அவரின் பேச்சு தான் என்னளவில்
அன்றைக்கு சிறந்த உரை.
பின்பு முகப்புத்தகத்தில் பிறந்த நாள் வாழ்த்து சமீபத்தில் கூறினேன்
அவர் 99 நாட்கள் ஃப்ரீடமென்று போய் வந்தவர்
ஒரு விருதோடு திரும்பியிருக்கிறார்
குமரகுருபரன்
அவர்களுக்கு அஞ்சலி
ஒரே ஒரு வாரம் என் கைப்பிடித்து நடந்த பெருங்கனவுக்காரன் (ஆனந்த விகடனின் மாணவ எடிட்டர்கள் போட்டியில் குமரகுருபரன் கலந்து கொண்டபோது)! பேச்சு.. எழுத்து.. எதிலும் நம்பிக்கையே பிரதானமாக இருக்கும். அதற்குள் என்ன அவசரம் குமார்? இன்னும் கொஞ்சம் இருந்து சாதித்துவிட்டுப் போயிருந்தால், கனவுகளைத் துரத்தும் வாழ்க்கைகள் குறித்தான நம்பிக்கைகள் பலப்பட்டிருக்கும்! கிருஷ்ணா(டாவின்சி)யின் இழப்புக்குப் பின்னர், அதிர வைத்திருக்கும் அடுத்த இழப்பு! கடந்துவிட முடியாத காயங்களுக்கு காலம்தான் மருந்திட வேண்டும்.. இடியைத் தாங்கிக் கொண்டிருக்கும் கவிதாவுக்கு துளிர்க்கும் கண்ணீருடன் என் ஆறுதல்கள்!
கடைசி வரை உங்களோடு ஒரு பகார்டி விருந்தில் சந்திக்க முடியாமல் போகிற அளவுக்கு என்ன அவசரமய்யா உமக்கு? மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கவே முடியாதா?
கவிதாக்கா அவரை ரொம்பவே கொண்டாடுவாங்க….இன்று உயிர்துறந்த அவர், ரசித்துணர்ந்து வாழ்ந்திருக்க வேண்டிய கவிதாக்காவின் அன்புதான்..அதற்காகவேனும் மேலும் பல்லாண்டு வாழ்ந்திருக்கலாம்..
கவிதாக்கா மேலயும் அவருக்கு நிறைய அன்பு….. ’உங்கக்கா சட்டுனு கோபப்பட்டாலும், நிறைய அன்புடா அவளுக்கு”ம்பார்…
அவரது உடலை பார்க்கச் சென்றுவிட்டு, கவிதாக்காவின் பக்கம் செல்லாமலேயே வந்துவிட்டேன்…அவரது அன்பே உங்களை மீட்டெடுக்கும் அக்கா….
=============================================
மரணம் சர்வநிச்சயம் என்பதை நவீன அறிவியல் கண்டுபிடித்து தரவில்லை.
என்றாவது ஒருநாள் நன்றாக வாழ்ந்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தோடு, ஓடிக் கொண்டேயிருக்கும் ஏழை, நடுத்தர வர்க்கம், சிறுக, சிறுக சேமித்து….நிம்மதி பெருமூச்சு விடும் போது…..கடைசி மூச்சாக இருந்துவிடுவது இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பொதுவிதியாகவே இருக்கிறது…
அர்த்தம் பொதிந்த வாழ்க்கை வாழ, வாழ்க்கை குறித்த கண்ணோட்டமும், மகிழ்ச்சி எது என்ற புரிதலும் மேம்பட வேண்டும்.
அஃதில்லையேல், எவனுக்கோ உழைச்சு, எதுக்கோ வாழ்ந்துட்டு….போய்ச்சேர்ற சில்லரைத்தனமான வாழ்க்கையை தவிர எதையும் நாம் வாழ இயலாது
கவிஞர் குமரகுருபரனின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. எனக்கும் அவருக்கும் அறிமுகம் எதுவும் இல்லை ஒரு மன்ஸதாபஸ்தினூடே அந்த நட்பு உருவாகமல் போய் விட்டது. இழப்புகள் குறித்து என்ன எழுதுவதென்று தெரியவில்லை. அவரை கேரக்டர் அஷானிஷன் செய்யவோ அதை வைத்து பிரச்சாரம் செய்யவோ எனக்கு உரிமை இல்லை. அவரை இழந்து வாடும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள். ரொம்பவே உணர்வு பூர்வமாக அவரை நேசித்த கவிதா சொர்ணவள்ளியோடு இந்த துயரை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஆனால், இன்னொரு நாள், பனி போல மென்மையாக இருப்பார். அவருடன் பாடல்கள் போட்டு நானும் விளையாடி இருக்கிறேன்.
மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசும் ஒரு கேரக்டர். யாரென்றும் பார்க்கமாட்டார். அதனால், அவருடன் மனத்தாங்கல் இருக்கும் நண்பர்களும் இருப்பார்கள். ஒரு முறை திட்டினால், இன்னொரு முறை அன்பினால் நனையவும் வைத்துவிடுவார்!
அவரது முதல் கவிதை தொகுப்பை, சாருவின் வலைதளத்தில் வந்த அறிமுகம் கொண்டே வாங்கினேன். அந்த அட்டைப்படமே சொல்லிவிடும்.. இவர் எப்படிப்பட்ட மனிதர் என்று.. புத்தகத்தின் தலைப்பு “ஞானம் நுரைக்கும் போத்தல்”. பலராலும் கொண்டாடப்பட்ட கவிதைகள் அவருடையது. வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்ந்தவர் அவர்!
முகநூலில் எனக்கு கிடைத்த அருமையான நட்பில் கவிதா சொர்ணவல்லியும் ஒருவர். அவரது ” பொசல் ” சிறுகதை தொகுப்பை படித்து மகிழ்ந்திருக்கிறேன். கவிதா ஒரு வகையில் எனக்கு இன்ஸ்பிரேசன். செம கேரக்டர். செம கூல் ஆட்டிடுட். அதே நேரத்தில், கோபம் வந்தால் பொரிந்து தள்ளிவிடுவார். அப்படிப்பட்ட கவிதா கொண்டாடும் நபராக கவிஞர் குமரகுருபரன் இருந்தார். கவிதாவின் எழுத்துக்கும் வாழ்வுக்கும் இன்ஸ்பிரேசன் குமரகுருபரன்! ஒவ்வொரு முறையும் கவிதா.. குமார் என்று விளிக்கும் போதும்.. அந்த எழுத்திலே அன்பு தெறிக்கும்.
குமார் அண்ணனை நான் பார்த்ததில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னால் அவருக்கு கனடா நாட்டின் இலக்கிய விருதான “இயல் விருது” கிடைத்து இருக்கிறது என்ற செய்தியை பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இன்று காலை இப்படியொரு செய்தி. முகநூல் தரும் நட்புகள் ஒரு லைக், ஒரு கமெண்ட்டுடன் முடிவடைவதில்லை. ஏனென்றால், லைக்கும் கமெண்டும் நாம் வெறுமனே கொடுப்பதில்லை. எழுத்துக்கும், அதில் மறைந்து இருக்கும் மனிதத்திற்கும், அன்புக்குமே நாம் கட்டுப்பட்டு இருக்கிறோம்.
என்ன சொல்லி முடிப்பது என்று தெரியவில்லை!
ஆகப்பெரிய உலகில், ஒரு உயிரின் தோற்றமும் மறைவும் பெரிதில்லை. ஆனால், வாழும் காலத்தில் நீங்கள் “தொட்டு” சென்ற மனிதர்களே.. நீங்கள் வாழ்ந்ததற்கான சாட்சியாக இருக்கிறார்கள்.
நீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள் அண்ணே
அவர்க்கும் கவிஞர் ராஜசுந்தர்ராஜனுக்கும் ,பின்னே சாருவுக்குமான விவாதங்களில் அவரின் சித்திரம் ஓரளவுக்கு அறிய முடிந்திருந்தது.
கவிதா சொர்ணவல்லியின் வழியே அவரின் ஆளுமை சித்திரங்கள் உருமாறியிருந்தது.
ஒருவரின் மரணம் மிகுந்த பதட்டத்தை நம்மிடையே ஏற்படுத்தி நம்மை நொடிந்து நோய்மைக்கொள்ளும் தருணங்களை நாம் எப்படி எதிர்கொள்வது.
இப்போதைக்கு அவர்க்கு குடியை/ நல்வாழ்வை பற்றியெல்லாம் வகுப்பெடுக்காமல் இருப்பதே அவர்க்கு செய்யும் அஞ்சலி என்று எனக்குப்படுகிறது.
மரணங்கள் பலதை பெயர்த்து விடுகிறது, பலரை உருமாற்றி வைக்கிறது. சிலரால் மட்டுமே அதையெல்லாம் தாண்டி வரும் மனம் கிடைத்திருக்கிறது.
கவிதாவுக்கு அந்த மனம் கிடைத்திட வேண்டுகிறேன்.
நியாயமொன்றை நிறைவேற்றுகின்றன.
சில சமயங்களில் நினைவுறுத்துகின்றன.
அச்சுறுத்துகிற நியாயத் தீர்ப்பொன்றில்
கடைசிக்கணம் அறிந்தவர் யாருமில்லை
இறப்பு கொஞ்சமாகவேனும் தினமும் நிகழ்கிறது.
நெஞ்சமுடைந்து இறப்போர் குறித்து
ஒரு உரை நிகழ்த்துகையில்
நிகழ்த்துபவரின் இதயத்திலிருந்து
சில துளிகள் வாயோரம் கசிகின்றன.
மெல்லத் துடைத்து விட்டுகாலை
புகைப்படம் ஒன்றிற்கு முகமளித்து
மேலும் பேச ஆரம்பிக்கையில்
நம்பிக்கையின் கடைசி தீர்ப்பைத்
தவறாக எழுதுகிறார்கள் அறியாமலேயே
இதயமிருக்கிறவர்கள் அத்துடன்
பேச்சை நிறுத்திக் கொள்கிறார்கள்
இது சில நாட்களுக்கு முன் பகிர்ந்த குமரகுருபரனின் கவிதை இது. அவருடைய இதயம் இன்று காலை செயல்பாட்டை நிறுத்தி விட்டது. மீள முடியாத துயரில் நண்பர்கள் இருக்கிறோம். நேற்று 8 மணிக்கு என்னிடம் போனில் பேசியவர். இன்று இல்லை. மிக உற்சாகமாக பேசினார். இந்த கவிதையை காட்டி நண்பர்கள் வேல் கண்ணனும், விநாயக முருகனும் கலங்கினார்கள். இனி ஒன்றும் செய்வதற்கில்லை. அவரது உடல் திருநெல்வேலிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. போய் வாருங்கள் குமார்.
மறைந்த கவிஞர்
குமரகுருபரணின்
கவிதை ஒன்றை பிரசுரிப்பதே அவருக்கு நீங்கள் செய்யும் ஆத்மார்த்தமான அஞ்சலி. படிக்கிற எல்லோரும் அஞ்சலியில் இணைந்துகொள்வோம்.
குமார் மச்சி நீ சாகல … எங்களை பொறுத்தவரை உறங்கிக்கொண்டுதான் இறுக்கிறாய் …. ஆனால் இது நிரந்தர உறக்கம் …. 😦 உன் பிரிவு கொடுந்துயரம் …. இன்னமும் கனவாகதான் உணர்கிறோம்.
“பாட்டு போட்டு நாளாச்சு …pgs”
இந்தக் குரல் இனி எந்தத் திசையில் கேட்கும் குமரா?
உன் மரணச் செய்தி கேட்ட இந்த ஞாயிற்றுக் கிழமை காலை விடிந்திருக்கவே கூடாது.
செவிப்பறை மோதி எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது உன் குரலும் சிரிப்பும்.
இசையில் தொடங்கி கவிதையில் விளைந்து நீ இயலில் நிமிர்ந்தபோது மரணம் உன் வாழ்கையை நாடகமாக்கி விட்டதே நண்பா! 😦
வாழ்தல் இனிது, அது போல மரணமும் இனிது தான் நண்பா. போய் வா!
என்றும் நீ உன் கவிதைகளில் வாழ்வாய்!
உன் கவிதைகளுக்கு என்றைக்கும் மரணமில்லை குமரா.
உறங்குவதைப் போலவே மரணித்திருந்தாய் குமார். இரண்டு மணிநேரம் உன்னருகில் அமர்ந்து நீ தூங்கிக்கொண்டிருந்ததைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் குமார்.நீ மரணித்ததை அல்ல. என் துயரங்களை தாலாட்டி மருந்திட்டவன் நீ. உன்னைப் பற்றியான துயரங்களோடு இருக்கும்படி விட்டுச் சென்றுவிட்டாயே குமார். உன் மரணத்தை ஒருநாளும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.என் தந்தையின் இழப்பிற்கு பின் என் வாழ்வின் மிகப்பெரிய இழப்பு நீ. ஒரு ஆத்ம நண்பனை இழந்த மனம் அத்தனை எளிதில் ஆறுதல் அடைய முடியாது.
அஞ்சலி
குமரகுருபரனின் கவிதைகளின் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது -அவர் தோற்றம் எனக்குப் பிடித்திருந்தது – ஞானம் நுரைக்கும் போத்தல் கவிதைத் தொகுப்பிற்கு ராஜமார்த்தாண்டன் விருது வழங்க நான் பரிந்துரைத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டது- அவர் முதலில் ஏற்றுக்கொண்டு பின்னர் மறுத்துவிட்டார் – முருகேசபாண்டியன் மகள் திருமணத்தில் குமரகுருபரனைச் சந்தித்தபோது சமீபத்தில் வந்த கவிதைத்தொகுப்பை என்னிடம் கொடுக்கச் சொல்லி தேவேந்திர பூபதியிடம் கூறினார் -நவீன தமிழ் இலக்கியத்தின் புதிய வரவாக அவரை நினைத்திருந்தேன் -அவர் மறைவு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தந்து கொண்டிருக்கிறது.
குமரகுருபரன்.
என் சமகால பத்திரிகையுலகப் பயணி. எனக்கு அவ்வளவு நெருக்கமான பழக்கமில்லை. ஆனால் நெருங்கிய நண்பர்களின் நண்பர். விண் நாயகன் பத்திரிகையில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்தோம்.
எப்போதும் அவரைப் பற்றிய தகவல்கள் வந்துகொண்டேயிருக்கும். அண்மையில் அவர் எழுதிய இரு கவிதைத் தொகுப்புகள் படைப்புலகில் பெரும் கவனம் பெற்றன. இயல் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளிவரும்போது, அதைப் பார்த்து மகிழ அவரில்லை.
புதுச்சேரியில் நடந்த கவிதை விமர்சனக் கூட்டத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். முதல் மாடியில் இருந்த அந்த ஹாலில் பரபரவென வந்து உட்கார்ந்தார். பின்னர் சிகரெட் பிடிக்க வெளியே சென்று ஆசுவாசமானார். ஏற்புரையில், “ஒவ்வொருவரும் வீடுகளில் ஆண்டுதோறும் தூசு தட்டுவோம். அப்படியொரு தூசு தட்டல்தான் இந்தக் கவிதைகள். இன்னும் நிறைய தூசு தட்டவேண்டியிருக்கிறது” என்றார் சுருக்கமாக.
தினசரி பத்திரிகை அலுவலக வேலைகளின் சுமையை விலக்கி மனம் விரும்பிய பணிகளைச் செய்தவர் குமரகுருபரன். இதுவரையிலான அவரது வாழ்வின் அனுபவங்களைத் தேக்கிய வார்த்தைகள் கவிதைகளில் வெளிப்பட்டன. கவித்துவம் கைவரப் பெற்று தமிழ் எழுத்தில் உயரும் காலத்தில் நினைவாகிவிட்டார்.
வாழ்க்கையை ஒரு செலிபிரேஷனாக கொண்டாடிய கவிமனம். வாழவேண்டிய வயதில் சென்றுவிட்டது. வருத்தமாக இருக்கிறது.
வாழ்க்கை மரணத்திற்கு ஏதும் கற்பிப்பதில்லை
மரணம் வாழ்க்கைக்கு நிறைய கற்பிக்கிறது.
குமரா… போய் வா நண்பா.