ஹைதராபாத் பல்கலைக் கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா(26) கடந்த ஜனவரி 17-ஆம் தேதி, பல்கலைக் கழகம் கொடுத்த தொடர் நெருக்கடி காரணமாக பல்கலைக் கழக விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தலித் மாணவர் என்பதாலேயே ரோஹித் வெமுலா பல நெருக்கடிகளைச் சந்தித்ததும் அதை எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தியதும் அதற்காக பல்கலைக் கழக விடுதியிலிருந்து இன்னும் சில தலித் மாணவர்களுடன் வெளியேற்றப்பட்டதும் நிகழ்ந்தவை.
ரோஹித் வெமுலா இறப்புக்குப் பின், அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பது குறித்து சர்ச்சைகளைக் கிளப்பினர். ரோஹித்தின் தந்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்தச் சர்ச்சை எழுந்தது. ஆறு மாதங்களுக்குப் பின் இந்தச் சர்ச்சைகளுக்கு அரசு ரீதியான விளக்கத்தை அளித்துள்ள குண்டூர் மாவட்ட நிர்வாகம்.
குண்டூர் ஆட்சியர், தேசிய ஆதி திராவிடர் ஆணையத்துக்கு அளித்துள்ள அறிக்கையில்,
“குண்டூர் தாசில்தாரிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் ரோஹித் சக்ரவர்த்தி வெமுலா, ஹிந்து மாலா சாதியைச் சார்ந்தவர், இந்தச் சாதி ஆந்திர மாநிலத்தில் ஆதி திராவிடர் எனும் பகுப்பின் கீழ் வருகிறது. வறுமை கோட்டிற்குக் கீழே உள்ளதாக இவர்களுடைய குடும்பம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல்கள் ரோஹித் சக்ரவர்த்தி வெமுலாவின் தாய்வழிப் பாட்டி சொன்னதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் ஆணையம், ரோஹித்தின் தற்கொலைக் காரணமான துணைவேந்தர் அப்பா ராவ், மத்திய இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்ட ஐவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆட்சியர் தரும் சாதி சான்றிதழை வைத்து வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தரப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில் இது சாத்தியம் என்றும் ரோஹித்துக்காக வாதாடும் வழக்கறிஞர் குன்ரதன் தெரிவித்திருக்கிறார்.
ரோஹித்தின் தாயார் ராதிகா வெமுலா, விவகாரத்து ஆனவர். தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் மலா சாதியினர் வசிக்கும் கிராமத்தில் வசித்து வருவதாகத் தெரிவித்திருந்தார். அதோடு தான் வதேரா என்ற பிற்படுத்தப்பட்ட சாதி குடும்பத்தால் வளர்க்கப்பட்டவர் என்றும் ராதிகா தெரிவித்திருந்தார்.
தி இந்து (ஆ) வந்த செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டது.