சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 2006-ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், ரமேஷ்நாதன் ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில், “நகராட்சி நிர்வாக சட்ட விதிகளின் படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தி உள்ளபடியும், தலித் மக்கள் அதிகமுள்ள மாநகராட்சியில், அந்த மேயர் பதவியை தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்க வேண்டும். கடந்த 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13.7 சதவீதம் தலித் மக்கள் சென்னையில் வசிக்கின்றனர்.
எனவே, சென்னை மாநகராட்சி மேயர் பதவி தலித் மக்களுக்குத்தான் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டுகளில் இதற்கு முரண்பாடாக நடைபெற்று வந்துள்ளது.
இதேபோல் சேலம் மாநகராட்சி மேயர் பதவியானது, தலித்துகள், பெண்கள் என சேர்த்து ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த மாநகராட்சியிலும், துணை மேயர் பதவியில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.
இவை அனைத்தும் சட்டத்துக்கு புறம்பானவை. எனவே, வரும் உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவியை தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும். சேலம் மாநகராட்சியில் உள்ள பெண்கள் என்ற இடஒதுக்கீட்டை ரத்து செய்து, அதை தலித்துகளுக்காக மட்டும் அறிவிக்க வேண்டும்.
அதேபோல, துணை மேயர் பதவிகளில் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் சுழற்சி முறையில் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.