தனிமனிதனென்னும் அரசியல் விலங்கு: அ. ராமசாமி

அ. ராமசாமி

அ.ராமசாமி
அ.ராமசாமி

ஒரு நிகழ்வு : பலபார்வை என்பது அறிவுச் சமூகத்தின் பண்பாடு. இன்னொரு விதத்தில் அது பன்னாட்டு மூலதனத்தின் தேவையும் கூட. அமெரிக்காவில் பன்னாட்டு மூலதனக் குழுமங்கள் தான் ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றன. கல்விக்கூடங்களை நடத்துகின்றன. ஆய்வுகளுக்கு நிதி வழங்குகின்றன. 2000 -க்குப் பின்னர் உலகமெங்கும் உருவாகிவரும் அடையாள அரசியல் சொல்லாடல்கள் கூடத் தன்னெழுச்சியாகத்தோன்றுகின்றனவா? பன்னாட்டுக் குழுமங்களின் மறைமுகத்தூண்டுதலால் உருவாக்கப்படுகின்றனவா? என்ற ஐயங்களும் முன்வைக்கப்படுகின்றன. பன்னாட்டுக் குழுமங்களின் அதிகார அமைப்புகளும் வலைப்பின்னல்களும் எப்போதும் அடையாள அரசியலை அனுமதிப்பதுபோலக் காட்டிக்கொண்டே, பொதுவெளியில் அதற்கெதிரான மனநிலையை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகின்றன. இந்தியச் சூழலில் அணு உலை எதிர்ப்புக்கு ஆதரவு, சுற்றுச்சூழல் இயக்கங்களுக்கு ஆதரவு, மிருகவதைத் தடுப்புச் சட்ட ஆதரவு போன்றன சில உதாரணங்கள். இதற்குக் கல்வித்துறை சார்ந்த, சாராத அறிவுஜீவிகளும் ஆய்வாளர்களும் அறிந்தும் அறியாமலும் உதவுகிறார்கள்.

நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் ஆர்லண்டோவில் நடந்த கண்மூடித்தனமான கொலைச்சம்பவத்தில் 50 பேர் கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளப்பட்டார்கள். மேலும் 50 பேருக்கு மேல் காயம் அடைந்திருக்கிறார்கள் இந்த நிகழ்வும் இருவிதமான தையொட்டியும் பலவிதமான சொல்லாடல்களை அமெரிக்காவில் உருவாக்கியிருக்கிறது. ஒரு சொல்லாடல் கொலைச் சம்பவம் நடந்த தனித்துவமான வெளி அடையாளத்தோடு இணைத்து உருவாக்கப்படுகிறது. இன்னொன்று கொலையில் ஈடுபட்ட பாத்திர அடையாளத்தை இணைத்துக் கட்டமைக்கப்படுகிறது.

நடந்த இடம் இருந்த இரவுக்கேளிக்கைவிடுதி. இரவுகேளிக்கை விடுதி பொதுவெளிதான். ஆனால் ஒருபால் புணர்ச்சியை ஆதரிப்பவர்கள் சந்திக்கும் கொண்டாட்ட விடுதி, பொதுவெளி அல்ல. அடையாள அரசியலோடு இணைந்த சிறப்புவெளி. இதன் வழியாக உருவாக்கப்படும் சொல்லாடல் தனிமனித உளவியல்X மாற்றம்கோரும் புதிய அடையாளம் என்ற எதிர்வால் கட்டமைக்கப்படுகிறது. ஒருபால் புணர்ச்சியைச் சட்டங்களும் அரசு நிர்வாகமும் ஏற்றுக்கொண்டாலும் தனிமனித உளவியல் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் நிகழ்ந்தது இந்தப் பெருங்குற்ற நிகழ்வு. எனவே இத்தகைய தனி அடையாள உரிமைகள் மறுபரிசீலனைக்குரியவை என்ற முடிவை நோக்கி பொதுப்புத்தி உருவாக்கப்படும். தனிநபர் ஒருவரின் வெளிப்பாட்டை முன்வைத்து பேச்சை உருவாக்கிவிட்டன ஊடகங்கள். கொலையாளி நிகழ்வு நடந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதால், சுட்டுக்கொண்டவனின் தந்தை அளித்த பேட்டி பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாவது அடையாளம் கொலையாளியின் இசுலாமிய அடையாளம். ஒரு தனிமனிதனின் கண்மூடித்தனமான கொலைவெறி என்றவுடன் உலகு தழுவிய இசுலாமிய தீவிரவாதத்தோடு இணைத்துப் பேச்சு கிளம்பியிருக்கிறது. ஜிகாதி, ஐஎஸ்ஐ போன்றனவற்றை அந்நபரோடு இணைக்கும் சான்றுகள் தேடப்படுகின்றன. இதுவும் ஒருவிதத்தில் அடையாள அரசியலை மறுக்கும் பொதுப்புத்தி உருவாக்கம் தான்.

அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இதற்கான கருத்தியல் உருவாக்கம் நடக்கிறது. எல்லோரையும் அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதின் வழியாகத் தனது பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்ளும் வாதத்தை எப்போதும் ஆதரித்து வந்த அமெரிக்காவில் இப்போது அதற்கெதிரான கருத்துகள் உருவாகிவருகின்றன. சொந்த நாட்டு மக்களுக்கு முன்னுரிமை என்ற கருத்தியல் – ஒருவிதத்தில் பாசிசம் என்று வரையறுக்கத்தக்க கருத்தியல் இது. அமெரிக்காவில் உருவாவதற்கு முன்பே ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியில் தொடங்கப்பட்டது.

கொஞ்சம்கொஞ்சமாக மற்ற நாடுகளுக்கும் பரவிவருகிறது. போன நூற்றாண்டில் உலகம் முழுக்கப் பயணம் செய்து, வணிகத்தில் ஈடுபட்டு, அரசதிகாரத்தைக் கைப்பற்றி அந்நாட்டு வளங்களைச் சுரண்டிக் கொளுத்த இந்நாடுகளின் சிறுகும்பல்கள் அந்நியர்களுக்கெதிரான பேச்சு மூலம் மாற்றிப் பேசுகின்றன. ஜனநாயகக் கட்சி, குடியரசுக்கட்சி என்ற இருகட்சி ஜனநாயகத்தில் திளைக்கும் அமெரிக்க மக்கள் எட்டாண்டுக்கொருமுறை/ இருமுறைக்கொரு தடவை ஆளும் கட்சியை மாற்றிப் பார்க்கிறார்கள். இப்போது ஜனநாயகக்கட்சி எட்டாண்டுகள் முடிந்துவிட்டது. அதனால் அடுத்த வாய்ப்பு குடியரசுக்கட்சிக்குப் போகலாம்.
குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப். அந்நியர்களுக்கெதிரான குரலை வலுவாக உயர்த்திவரும் நபர். அத்தோடு அடையாள அரசியல்களை மறுபரிசீலனை செய்யவேண்டுமென வலியுறுத்தும் பழைமைவாதத்தின் ஆதரவாளரும்கூட. நேற்றைய நிகழ்வு ட்ரம்பிற்கு ஆதரவை வலுப்புப்படுத்தும் நிகழ்வு எனப் பார்க்கப்படுகிறது. வன்முறை, கலவரம், கொலைகள் என எவையும் தேர்தல் அரசியலில் தற்செயல் நிகழ்வுகளாக இருப்பதில்லை. இந்தியாவில் மட்டுமல்ல; உலகெங்கிலும் அதுதான் நிலை. தனிமனிதர்கள் ஒருநிகழ்வின் வழியே அரசியல் விலங்காக ஆகிவிடுகிறார்கள்.

அ. ராமசாமி, பேராசிரியர்; எழுத்தாளர். இவருடைய சமீபத்திய நூல் தமிழ் சினிமா காண்பதும் காட்டப்படுவதும், உயிர்மை வெளியீடு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.