இந்து ஆண்கள் மத்தியில் ஆண்மைக் குறைபாடு அதிகரித்து வருவது, நாட்டில் இந்துக்களின் ஜனத்தொகையை குறைத்து வருகிறது. எனவே, வீட்டிற்கு போய் உங்கள் ஆண்மையைத் துதியுங்கள் என விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஜம்புசார் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் பேசிய பிரவீன் தொகாடியா,
“இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது அதிகரிக்கும் முஸ்லீம்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். லவ் ஜிகாத்தும் கிறித்துவ மத மாற்றமும் இந்துக்களின் எண்ணிக்கை குறைய காரணங்கள்.
இனி, இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மதமாற்றத்துக்கு தடை சொல்லி; தாய் மதத்துக்குத் திரும்புங்கள். லவ் ஜிகாத்துக்கு எதிர்ப்பு சொல்லி; பொது சட்டத்துக்கு ஆதரவு சொல்லுங்கள். பங்களாதேஷ் முஸ்லிம்களுக்கு எதிர்ப்பு சொல்லுங்கள்; அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அறைகூவல் விடுத்தார் தொகாடியா.
“புகைப்பதுதான் ஆண்மை குறைவுக்குக் காரணம். எனவே அதை விட்டுவிடுங்கள்” என்ற தொகாடியா கையில் ஒரு பொருளைத் தூக்கிப் பிடித்து (தொகாடியா மருத்துவரும்கூட) “இதோ இந்தப் பொருளின் விலை ரூ. 600. உங்களுக்காக நான் ரூ. 500க்குத் தருகிறேன். இதைக் கொண்டு போய் உங்கள் மனைவியிடம் கொடுங்கள். நீங்கள் உண்ணும் உணவுடன் சேர்த்து கலந்து கொடுக்கச் சொல்லுங்கள். இதை உண்பதால் நீங்கள் விருத்தியுடன் அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பீர்கள்” என்றார்.
ஜம்புசார் நகரத்தில் 30 சதவீதம் முஸ்லீம் மக்கள் தொகை உள்ளது. இதைச் சொல்லி, இங்கு இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, மாட்டை யாராவது வெட்டுவார்களா? என்றார்.
“இந்துக்களின் எண்ணிக்கை உயராமல் முன்னேற்றம் கண்டு என்ன பயன்? புல்லட் ரயில், ஸ்மார்ட் நகரங்கள் இருந்தாலும் அதில் பயணம் செய்ய இந்து இருக்க வேண்டுமல்லவா?” என்றும் பேசினார்.
இந்த கூட்டத்தில் 50க்கும் மேலான இளைஞர்கள் த்ரிசூலத்தைப் பெற்றுக்கொண்டு, தர்மத்தைக் காப்பாற்ற பயன்படுத்துவேன் என்றும் சக இந்துவுக்கு எதிராக த்ரிசூலத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஆங்கில செய்தித்தாள்களில் வந்த செய்திகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.