வன்னியர் சாதி பெண்ணை காதலித்து, மணந்தார் என்பதற்காக அலைக்கழிக்கப்பட்ட அந்த இளைஞர் தருமபுரி ரயில் தண்டவாளத்தில் உடல் துண்டாகிக் கிடந்தார். அவர் இளவரசன். தற்கொலை வழக்காக சொல்லப்பட்டு கொலை வழக்காக விசாரணை நடந்து வரும் நிலையில் இளவரசனின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனையும் நீதியும் எந்த திசையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. இந்நிலையில் திருச்செங்கோடில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த கோகுல்ராஜின் கொலை நடந்தேறியது. இதுவும் தண்டவாளத்தில் நடந்த கொலைதான். இந்த முறை கவுண்டர் சாதி அவரைக் கொன்றதில் பெருமைத் தேடிக் கொண்டது.
“அவனுக்கு இப்படியொரு சாவு வரும்னு நாங்க எதிர்ப்பார்க்கலை. காலேஜுக்குப் போனவன், இப்படி பொணமா திரும்பி வந்தான். தம்பியைக் கொன்னது முழுக்க முழுக்க பப்ளிசிட்டி தேடிக்கத்தான். எங்களுக்கும் சரி அவனுக்கும் சரி விரோதிங்கன்னு யாரும் கிடையாது. அவங்க கம்யூனிடி காரங்ககிட்ட நான்தான் இந்த கம்யூனிடியைக் காப்பாத்தறேன்னு பேர் எடுக்கணும். அதன் மூலமா பணமும் அரசியல் அதிகாரத்தையும் சம்பாதிக்கணுங்கிறதுதான் தம்பி கொலைக்குக் காரணம். இப்ப வரைக்கும் அவங்க அதிகாரம், செல்வாக்கைப் பயன்படுத்தித்தான் தப்பிச்சுட்டு வர்றாங்க. அவங்களுக்கு எல்லா அதிகாரமும் இருக்கும். எங்களுக்கு ஒன்னும் இல்லை. அவங்க அடிச்சா, நாங்க வாங்கித்தானே ஆகணும்” விரக்தியுடன் பேசினார் கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன். சற்றே இடைவெளி விட்டுத் தொடர்ந்த அவர்,
“இவங்க உண்மையை வெளியே கொண்டுவரமாட்டாங்கன்னு தெரிஞ்சுப்போச்சு. மீடியாவே குற்றவாளியை ஹீரோ மாதிரி காமிக்குது. குற்றம் செஞ்ச சாதாரண மனுஷன், இப்படி மீசை முறுக்கிக்கிட்டு பேச முடியுமா? அதிகாரத்தோட துணையில்லாம இதெல்லாம் முடியாது” என்று கோகுல்ராஜ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான யுவராஜ் தலைமறைவாகி, ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த தருணத்தில் இப்படி குறிப்பிட்டார். அந்த சமயத்தில் சிபிஐ விசாரிக்கக் கோரி வழக்குத் தொடுக்க முயற்சித்து வருவதாக கலைச்செல்வன் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்தடுத்த நகர்வுகளாக யுவராஜ் சரணடைந்ததும், ஆறு மாத சிறைவாசத்துக்குப் பின் ஜாமீன் பெற்று வெளியே வந்ததும் நடந்தேறியது. இப்போதும் ஊடகங்கள் யுவராஜின் பேட்டிகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தது அவருடைய குடும்பம். இந்த வழக்கு சென்ற வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கோகுல்ராஜின் தாயார் சித்ரா தாக்கல் செய்துள்ள மனுவில், வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால், தலித் பிரிவைச் சேர்ந்த தமது மகன் கோகுல்ராஜை, யுவராஜ் என்பவர் கொலை செய்துள்ளார். இந்நிலையில் யுவராஜ் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால், சிறையில் ராஜ மரியாதையுடன் சிபிசிஐடி போலீசார் அவரை நடத்துகிறார்கள்
மேலும் இந்த வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணத்திற்கும், யுவராஜ் தான் காரணமாக இருப்பார். எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் இருவரின் மரணத்திற்கு உண்மையான காரணம் தெரிய வரும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.என். பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது 725 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், யுவராஜ் உட்பட 17 பேரும், வரும் 28 ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து வரும் 28ம் தேதி கோகுல்ராஜ் கொலை தொடர்பாக தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவித்திருக்கிறார்.