பத்தி: பூவரசி எனும் இறைவியின் வாழ்க்கையைப் படமாக்க தைரியமிருக்கிறதா?

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜி. கார்ல் மார்க்ஸ்
கீழே இருப்பது தினத்தந்தி செய்தி. இதை அப்படியே படமாக எடுப்பதற்கு யாருக்காவது தைரியம் இருக்கிறதா? நமது நிஜ வாழ்க்கை எவ்வளவு ராவாக இருக்கிறது பாருங்கள்.

தன்னைக் காதலித்தவளை ‘வேறொருவனைக் கல்யாணம் செய்துகொள்’ என்று அறிவுரை சொல்லும் ஒருவன். அவன் மீதுள்ள கோபத்தில் அவனது நான்கு வயது மகனைக் கொலைசெய்யும் இறைவியான காதலி.

அன்பும், காமமும் துரோகமாக மாறும் புள்ளி அரூபமானது. நாம் கலையெனக் கொண்டாடுவதெல்லாம் எவ்வளவு போலியானவை என்று முகத்திலறைந்து உணர்த்துகிறாள் பூவரசி!!

”சைக்கோ காதலி” என்னும் பதத்தில் எனக்கு உடன்பாடில்லை. அந்த நான்கு வயது சிறுவனைக் கொன்றதற்குப் பின்னால், அவள் எதிர்கொண்ட கருக்கலைப்பின் வன்மம் இருக்கிறது. இங்கு காதல் என்றும் தாய்மை என்றும் பெண்மை என்றும் சொல்லப்படுவதன் பின்னுள்ள அழுத்தங்களைப் புரிந்துகொள்ள இதுவொரு வாய்ப்பும் கூட!

———————————————————————————-

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர். இவரது மனைவி அனந்தலட்சுமி. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2000–ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களது மகள் நிவேதிதா (வயது 8). மகன் ஆதித்யா (4).

ஜெயக்குமார் பணியாற்றிய நிறுவனத்தில், ஆரணியை சேர்ந்த பூவரசி என்பவரும் பணியாற்றினார். அப்போது இருவருக்குள் நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியது. பூவரசியுடன் ஜெயக்குமார் அடிக்கடி உடல் உறவு கொண்டுள்ளார். இதனால், ஏற்பட்ட கர்ப்பத்தை பூவரசி இரு முறை கலைக்கவும் செய்துள்ளார்.

அதேநேரம், ஜெயக்குமாரின் மகன் ஆதித்யாவிடம், பூவரசி மிகவும் நெருக்கமாக இருந்தார். அவ்வப்போது ஆதித்யாவை கடைகளுக்கும் அழைத்து செல்வார்.

இந்த நிலையில், கடந்த 2010–ம் ஆண்டு பூவரசிக்கு திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தனர்.

இந்த விவரத்தை ஜெயக்குமாரிடம் சொல்லி, தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பூவரசி வற்புறுத்தினார். ஆனால், பூவரசியின் கோரிக்கையை ஜெயக்குமார் ஏற்கவில்லை. ‘உன் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொள்’ என்று அறிவுரை கூறினார். இதனால், அவர் மீது பூவரசிக்கு கோபம் ஏற்பட்டது.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் விடுதியில் பூவரசி தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அந்த விடுதியில் விழா ஒன்று நடப்பதாகவும், ஆதித்யாவை தன்னுடன் அனுப்பவேண்டும் என்றும் ஜெயக்குமாரிடம் பூவரசி கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட ஜெயக்குமார், தன் மகனை கடந்த 2010–ம் ஆண்டு ஜூலை 17–ந் தேதி பூவரசியுடன் அனுப்பி வைத்தார். ஆதித்யாவை தன் விடுதிக்கு அழைத்து சென்ற பூவரசி, ஜெயக்குமார் மீதுள்ள கோபத்தில், அந்த சிறுவனை கழுத்தை நெறித்து கொலை செய்தார். பின்னர், சிறுவனின் உடலை ‘சூட்கேசில்’ வைத்து, நாகப்பட்டினம் செல்லும் பஸ்சில் வைத்துவிட்டார்.

அதேநேரம், இந்த கொலையை மறைக்க பூவரசி நாடகம் ஒன்றை அரங்கேற்றினார். ஆதித்யாவை ஐகோர்ட்டு எதிரே உள்ள அரண்மனைக்காரன் தெருவில் உள்ள தேவாலயத்துக்கு அழைத்து சென்றதாகவும், அப்போது மர்ம நபர்கள் சிலர் சிறுவனை காரில் கடத்திச்சென்றுவிட்டதாகவும் கூறினார்.

இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் பஸ்சில் சென்ற சிறுவனின் உடல், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்கப்பட்டது.

இதுகுறித்து பத்திரிகைகளில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. அந்த உடலை பார்த்து தன் மகன்தான் என்பதை ஜெயக்குமாரும், அவரது மனைவி ஆனந்தலட்சுமியும் அடையாளம் காட்டினார்கள். இதையடுத்து பூவரசியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், சிறுவன் ஆதித்யாவை கொலை செய்த சம்பவம் அம்பலமானது. அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை 6–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேதுமாதவன், பூவரசிக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 13–ந் தேதி தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பூவரசி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர்.

அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:–

சிறுவனை பூவரசி தான் கொலை செய்துள்ளார் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி போலீசார் நிரூபித்துள்ளனர். எனவே, அவருக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனை சரியானதுதான். அதேநேரம், பூவரசிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரது பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, அந்த அபராத தொகையை ரூ.50 ஆயிரமாக குறைக்கிறோம். பூவரசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம்.

ஜி. கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்; அரசியல் விமர்சகர்.

வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள். இரண்டும்எதிர் வெளியீடுகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.