தாம் ராஜா இல்லை என்பதை அவர்கள் அறிவர்: ஜி. கார்ல் மார்க்ஸ் பத்தி

ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜி. கார்ல் மார்க்ஸ்

இளையராஜாவின் பையை விமானநிலையத்தில் சோதனையிடுகிறார்கள். தேங்காய் உள்ளிட்ட பிரசாதப் பொருட்கள் அதில் இருந்திருக்கிறது. சோதனை முடிந்தவுடன் அனுப்பி வைக்கிறார்கள். அவ்வளவு தான். உடனே ஒரு பெரிய அமளி நடந்து முடிந்துவிட்டது சோஷியல் மீடியாக்களில்.

நீங்கள் விமானத்தில் பயணிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் -இதற்கு நீங்கள் தொழிலதிபராக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை- எதாவது ஒரு மத்தியக்கிழக்கு நாட்டில் வேலை செய்யும் தொழிலாளியாகக் கூட இருக்கலாம், அந்த சோதனை எப்படி நடக்கும் என்று தெரியும்.

அவர்களது வேலை என்ன என்று புரிந்துகொண்டால் நீங்கள் எரிச்சல் அடையவே மாட்டீர்கள். சோதனைக்காக வரிசையில் நிற்கும் கொஞ்ச நேரத்தில், அவர்கள் எத்தனை பேரால் எரிச்சலூட்டப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது பரிதாபமாகக் கூட இருக்கும்.

‘மெட்டல் டிடெக்டரில்’ எந்த பொருளால் சத்தம் வருகிறது என்று சோதனைக்கு உட்படுபவராலேயே புரிந்து கொள்ள முடியாது. ஆனால் சோதிப்பவர் அதைக் கண்டுபிடித்த பிறகு தான் உங்களை அனுப்ப முடியும். காத்திருப்பவர்களின் நீண்ட வரிசை வேறு அவர்களை எரிச்சலாக்கும். ஒருவரது சோதனைக்கு ஆகும் நேரம் என்பது வரிசையின் நீளத்தை கூட்டக் கூடியது அல்லவா?

இத்தனைக்கும் இந்தெந்த பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று நிறைய அறிவுறுத்தல்களை எல்லா இடங்களிலும் ஒட்டி வைத்திருப்பார்கள். ‘போர்டிங் பாஸ்’ வாங்கும் இடத்திலும் கூட மீண்டும் சொல்வார்கள்.

எல்லாவற்றையும் மீறி அரணா கயிற்றில் தாயத்தைக் கட்டிக்கொண்டு போவது, சிகரெட் லைட்டரை ஜீன்ஸ் பேண்டின் உள்பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பதட்டத்தில் எடுக்க முடியாமல் வேறெதையாவது எடுப்பது, குழந்தைகள் அணியும் ஷூவை அணிந்து கொண்டு கிரீச்.. கிரீச்.. சத்தத்தோடு போய் சோதிப்பவரைக் குழப்புவது, சோதனை முடிந்தவுடன் பரிட்சையில் ஜெயித்தது போல புளகாங்கிதம் அடைந்து, போர்டிங் பாஸ் மற்றும் பாஸ்போர்ட்டை கூட அங்கேயே விட்டுவிட்டு விமானத்துக்கு விரைவது, அவசரத்தில் ஒரே கலரில் இருக்கும் அடுத்தவன் பையை லாவுவது என்று நமது ஆட்களின் களேபரங்கள் சொல்லி மாளாது.

இவற்றையெல்லாம் தினமும் பார்த்துக்கொண்டே இருக்கும் சோதனை அதிகாரிகளுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போகும்தான். நாம் தான் அவர்களைக் கொஞ்சம் கனிவாகப் பார்க்கப் பழகவேண்டும்.

இளையராஜாவை சோதித்தவர் ஏதோ ரஹ்மான் ரசிகர் என்கிற ரேஞ்சுக்கு அவரது அபிமானிகள் கொந்தளிக்கிறார்கள். ‘’இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் எதற்காக உங்களது நேரத்தையும் சக்தியையும் வீணாக்குகிறீர்கள்’’ என்று ராஜாவே ஆதங்கப்படும் அளவுக்கு ரசிகர்களின் கொதிநிலை உச்சத்தில் இருக்கிறது.

நல்லவேளை ரஹ்மான் இது போன்ற சோதனைக்கு உள்ளாக்கப்படவில்லை. அப்படி நடந்திருந்தால் அவரது மதம் கூட கணக்கிலெடுக்கப்பட்டு இந்த அவமதிப்பிற்காக தீக்குளித்திருப்பார்கள் அவரது ரசிகர்கள்.

“என்னை சோதிப்பதால் அவன் ஒன்றும் பெரியவன் ஆகப்போவதும் இல்லை, நான் ஒன்றும் சிறுமையில் ஆழ்ந்துவிடப்போவதும் இல்லை, நான் எப்போதும் ராஜாதான்” என்கிறார் இளையராஜா. அது அவ்வளவு உண்மை. அவரது ரசிகர்களின் போலிப் பொங்கலுக்கு எதிரான ராஜாவின் இந்த பிரகடனத்தை நான் ரொம்பவும் ரசித்தேன்.

இதையெல்லாம் செய்தியாக்காதீர்கள் என்று பத்திரிகையாளர்களுக்கும் கூட கோரிக்கை வைத்திருக்கிறார். பெரிய மனிதர்கள் எப்போதும் இதையெல்லாம் நாசூக்காக கடந்துபோகவே விரும்புவார்கள். “நான் எப்போதுமே ராஜாதான்” என்று சொல்லும் அளவுக்கு அவர்களை நெருக்குவது ரசிகர்கள்தான்.

இந்த விவகாரத்தில் மிகவும் சுவராஸ்யமான ஒன்று வைகோ இதற்கு தெரிவித்திருக்கும் கண்டனம். இளையராஜாவை அவமதித்த அந்த அதிகாரி மீது மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடுமையான தொனியில் கோரிக்கை வைத்திருக்கிறார். தேர்தல் வேலைகள் எல்லாம் முடிந்து புலி பொந்தில் இருந்து புறப்படுகிறது. இதைவிட வேறு நல்ல சந்தர்ப்பம் அதற்குக் கிடைக்காது.

தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் விமான நிலையங்களில் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதில் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களில் இருந்து, உடலுழைப்புக்காக செல்லும் ஆண்கள் வரை உண்டு. தாம் ராஜா இல்லை என்று அவர்களுக்குத் தெரியும். செய்யப்போகும் வேலையை ஒப்பிடும்போது, இந்த சோதனையெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்றும் அவர்களுக்குத் தெரியும்.

ஜி. கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்; அரசியல் விமர்சகர்.

வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள். இரண்டும்எதிர் வெளியீடுகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.