ஜூன் 1 விகடன் தடம் இதழில் வெளிவந்திருக்கும் “ புறக்கணிக்கப்படும் பெண் எழுத்து” என்ற கட்டுரையிலிருந்து சில வரிகள்.
”இன்று வரை இரு வழிகளில் நமது அறிவு சமூகத்தால் பெண் எழுத்துகள் மறுக்கப்பட்டு வருகின்றன. ஆண்கள் நோக்கில் அமைந்த அழகியல் மற்றும் உள்ளடக்கம் வழியாகப் பெண் எழுத்தை அளவிட்டு நிராகரிப்பது ஒரு வகை என்றால், மௌனத்தினூடாக அலட்சியப்படுத்துவது இன்னொரு வகை.”
கட்டுரையின் முக்கிய அம்சமே உடல் அரசியல் குறித்தும், விமர்சகர்களின் கள்ள மௌனத்தால், காரியார்த்தமான ஒதுக்கலால் பெண்ணெழுத்து எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது என்பதும் தான்..
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பெண்ணியம்,தலித்தியம், உடல்மொழி,உடலரசியல் குறித்து எழுதியும் பேசியும் செயல்பட்டுக்கொண்டும் வந்திருக்கிறேன்.பெண் எழுத்துகளை இந்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்ததற்கு நானும் சிறு பங்காற்றியிருக்கிறேன்.
’பெண்கவிஞர்களை மவுண்ட் ரோடில் நிற்க வைத்து பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும்’ என தொலைக்காட்சி நேரலையில் திருவாய் மலர்ந்தபோது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க களத்தில் நின்றவர்கள் மாலதி மைத்ரியும் நானும்.
இப்படி பல எதிர்ப்புகளை சந்த்தித்துக் கொண்டுதான் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.இதெல்லாம் கட்டுரையாளர் சு.தமிழ்ச்செல்விக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.
சூடாமணியில் தொடங்கி, தமிழ்நதி வரையிலான சமகால வரிசையில் சுகிர்தராணியின் பெயரோ லீனா மணிமேகலையின் பெயரோ மருந்துக்குக்கூட குறிப்பிடப்படவில்லை…
கட்டுரையாளர் தான் குறிப்பிட்ட “ஆண்கள் நோக்கில் அமைந்த அழகியல் மற்றும் உள்ளடக்கம் வழியாகப் பெண் எழுத்தை அளவிட்டு நிராகரிப்பது ஒரு வகை என்றால், மௌனத்தினூடாக அலட்சியப்படுத்துவது இன்னொரு வகை.” கருத்துக்கு ஏற்ப அறத்தொடு நிற்பது அழகியல்தான்.
இது நிராகரிப்பா.. கள்ள மௌனமா.. அலட்சியமா..?
எவ்வகையான புறக்கணிப்பு?
சுகிர்தராணி, கவிஞர். இவருடைய சமீபத்திய நூல் ‘இப்படிக்கு ஏவாள்‘, காலச்சுவடு பதிப்பக வெளியீடு.