சேலத்தில் வசித்துவருபவர் பிரபல இசையமைப்பாளர் கோவர்த்தன் (88). இவர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா உள்ளிட்ட புகழ்பெற்ற இசையமைப்பாளர்களிடம் உதவி இசையமைப்பாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் கைராசி, பூவும் பொட்டும், பட்டணத்தில் பூதம் (அந்த சிவகாமி மகனிடம் என்ற பாடல்) உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
வயது முதிர்வு, செவித்திறன் குறைபாடு போன்றவற்றால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். எந்தவித வருவாயும் இல்லாமல் வறுமைச் சூழலில் வாழ்ந்து வருவதால் வாழ்க்கையை நடத்துவதற்கு நிதியுதவி வழங்கி காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு வார இதழ் மூலம் கோவர்த்தன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையேற்று, கோவர்த்தனுக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் இந்த நிதியானது தமிழ்நாடு மின்விசை நிதி-அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதிலிருந்து வட்டியாக மாதந்தோறும் ரூ.8,125 கிடைக்கப் பெற வழிவகை செய்யப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதவிர, கோவர்த்தனின் செவித்திறன் குறைபாட்டை நீக்கும் வகையில் அவருக்கு அரசு பொது மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை அளித்து, காதொலிக் கருவி வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.