தமிழகத்தில் நடைபெறும் கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்கு புதிய சட்டத்தை இயற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மக்கள் மன்றத்தின் நிறுவனத் தலைவர் வாராகி தாக்கல் செய்த மனுவில் ,
“தமிழகத்தில் மாறி மாறி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால், இந்தக் கட்சிகள் கௌரவக் கொலைகளை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுயநலப் போக்குடன்தான் திராவிட கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில், விருத்தாச்சலம் முருகேசன்- கண்ணகி, தூத்துக்குடி வினோத்குமார், சேலம் இளவரசன், திருச்செங்கோடு கோகுல்ராஜ், மன்னார்குடி அமிர்தவள்ளி- பழனியப்பன் என ஏராளமானோர் அடுத்தடுத்து கலப்புத் திருமணம் செய்ததற்காக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசையில், அண்மையில் உடுமலைப்பேட்டை சங்கரை ஒரு கும்பல் நடுரோட்டில் கொடூரமாகக் கொலை செய்தது. கடந்த 3 ஆண்டுகளில், கலப்புத் திருமணம் செய்ததற்காக 81 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தக் கொலைகளைத் தடுப்பதற்கு, உச்சநீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பும் பிறப்பித்துள்ளது. இதில், இதுபோன்று கொலைகள் நடந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே, தமிழகத்தில் நடைபெறும் சாதி மறுப்பு திருமணம் தொடர்பாக நடைபெறும் கொலைகளைத் தடுப்பதற்கு புதிதாக சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அதே போல் வன்கொடுமை அதிகமாக நடைபெறும் இடங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும் ” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 27-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
தினமணி செய்தி
முகப்புப் படத்தில் : திருச்சி லால்குடியில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி இளையராஜா, ஆனந்தி. இளையராஜா ஆனந்தியின் உறவினர்களால் சமீபத்தில் அடித்துக்கொல்லப்பட்டார்.