குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் 24 பேருக்கு தண்டனை வழங்கியுள்ளது; 36 பேரை விடுவித்துள்ளது. ‘போதுமான சாட்சிகள் இல்லை’ என்று சொல்லி சதி வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு நீதிக்கான வேட்கையை தீர்க்காது. 2002 பிப்ரவரி 27, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகளில், குல்பர்க் சொசைட்டி படுகொலை மிகவும் கொடூரமான ஒன்று. விஸ்வ இந்து பரிசத்தைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்கள் இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளனர்; ஆனால், பாஜக கவுன்சிலரும் காவல் ஆய்வாளர் கேகே எர்டாவும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2002 பிப்ரவரி 28 அன்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் குல்பர்க் சொசைட்டியில் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். பலர் காணாமல் போயினர்; அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று பிறகு கருதப்பட்டது. தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர்கள் இந்தப் படுகொலையில் காவல்துறையும் அரசு நிர்வாகமும் கூட்டு சேர்ந்துகொண்டதாக குற்றம் சுமத்தினர். இந்த கலவர வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் 2008ல் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது. காவல்துறை, மாவட்ட நிர்வாகம், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆகியவை திட்டமிட்டே கடமையை ஆற்றத் தவறியதை மெய்ப்பிக்கக் கூடிய முக்கியமான கேள்விகளை இந்த விசாரணைக் குழு கேட்கவில்லை.
சதி வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தாக வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. குல்பர்க் சொசைட்டியில் இருந்து வெறும் 4 கி.மீ தொலைவில் உள்ள நரோடா பாட்டியாவில் நடந்த படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பாபு பஜ்ரங்கியும் அமைச்சர் மாயா கோத்னானியும்தான் சதித் திட்டம் தீட்டியவர்கள் என்று நிறுவப்பட்டது. பஜ்ரங்கியும் குல்பர்க் சொசைட்டி படுகொலையில் தண்டிக்கப்பட்டுள்ள விஸ்வ இந்து பரிசத் தலைவர் அதுல் வைத்யாவும் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளனர் என்பதை தொலைபேசி அழைப்பு பதிவேடுகள் காட்டுகின்றன.
படுகொலை நடப்பதற்கு முந்தைய நாள், பிப்ரவரி 27 அன்று குல்பர்க் சொசைட்டி அருகில் முதலமைச்சர் அலுவலகத்தைச் சேர்ந்த முக்கியமான நபர்கள் பலர் இருந்ததையும் அந்தப் பதிவேடுகள் காட்டுகின்றன. குல்பர்க் சொசைட்டியில் நடந்த படுகொலை பற்றி தங்களுக்குத் தெரியாது என்று அகமதாபாத் காவல் ஆணையரும் பிற முக்கிய காவல்துறை அதிகாரிகளும் சொன்னதும் பொய் என்பதையும் அந்தப் பதிவேடுகள் காட்டுகின்றன.
காவல்துறை உயரதிகாரிகள் குல்பர்க் சொசைட்டிக்குச் சென்றதையும் அங்கு ஒரு கும்பல் வன்முறைக்குத் தயாராகிக் கொண்டிருந்ததையும் அவர்கள் அறிவார்கள் என்பதையும் அந்த கும்பலை கட்டுப்படுத்த கூடுதல் காவலர்களை அழைக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டதையும் அந்தப் பதிவேடுகள் காட்டுகின்றன. இஷான் ஜாப்ரி உதவி கோரி, காவல்துறையினரையும் அப்போதைய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி உட்பட பல அரசியல்வாதிகளையும் நூறு முறைக்கும் மேல் தொலைபேசியில் அழைத்ததாகவும், அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்றும் சாட்சிகள் சாட்சியமளித்துள்ளனர். அந்த கும்பல் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க, இஷான் ஒன்றுகூடி ஜாப்ரியை படுகொலை செய்ய, இன்னும் 69 பேரை படுகொலை செய்ய அரசாங்கமும் காவல்துறையும் அனுமதித்தன.
தற்போது பிரதமராக இருக்கிற, அப்போது முதலமைச்சராக இருந்த மோடியின் நடவடிக்கைதான் 2002 படுகொலையில் அரசும் கூட்டு சேர்ந்திருந்தது என்பதற்கு மிக முக்கியமான சாட்சியாகும். 2002, பிப்ரவரி 28 அன்று நரோடா பாட்டியா படுகொலையும் குல்பர்க் சொசைட்டி படுகொலையும் நடந்து முடிந்த பிறகு, மாலையில் தூர்தர்ஷனில் பேசிய மோடி கோத்ரா சம்பவம் பற்றி மட்டும் பேசினார். மற்ற படுகொலைச் சம்பவங்கள் பற்றி பேசவில்லை. அன்று இரவுதான் அவருக்கு அந்தப் படுகொலைகள் பற்றிச் சொல்லப்பட்டது என்று சிறப்பு விசாரணைக் குழுவிடம் மோடி தெரிவித்தார். தலைநகரில் பட்டப்பகலில் பல மணி நேரங்கள் நடந்த படுகொலைகள் பற்றி மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் தகவலே தெரியவில்லை என்றால் அந்த அதிகாரிகள் ஏன் தண்டிக்கப்படவில்லை? மாறாக, அவர்களுக்கு ஏன் பதவி உயர்வு வழங்கப்பட்டது?
மறுநாளே, 2002 மார்ச் 1 அன்று, தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் பேசிய மோடி, குல்பர்க் படுகொலைக்கும், உண்மையில் எல்லா கலகங்களுக்கும், ‘வினை, எதிர்வினை சங்கிலி’ என்று காரணம் சொன்னார். ஜாப்ரி கும்பலை நோக்கி சுட்டதால்தான் படுகொலை என்ற ‘எதிர்வினை’ தூண்டப்பட்டது என்று சொன்னார். ஜாப்ரி பதறிப் போய் செய்த தொலைபேசி அழைப்புகளுக்கு காவல்துறையோ, அரசாங்கமோ பதில் அளித்திருந்தால், ஒரு கொலைகார கும்பலிடம் இருந்து குல்பர்ச் சொசைட்டியைப் பாதுகாக்க, தனது துப்பாக்கியை எடுக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டிருக்காது. ஜாப்ரி சுட்டதால்தான் வன்முறை வெடித்தது என்று இந்த வழக்கில் காவல்துறையின் குற்றச்சாட்டு குறிப்பாணை துவக்கத்தில் சொன்னது. இந்த குற்றச்சாட்டு குறிப்பாணை, முதல் தகவல் அறிக்கையுடன் ஒத்துப்போகவில்லை என்று சொன்ன காவல்துறை அதிகாரி ராகுல் சர்மா, பணியிட மாற்றம் செய்யப்பட்டு அப்போது முதல் துன்புறுத்தல்களுக்கும் பழிவாங்குதல்களுக்கும் ஆளாகி வருகிறார்.
இன்றும் மோடி தலைமையிலான மத்திய அரசு, நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் வந்தத் தீர்ப்பும் இப்போது குல்பர்க் சொசைட்டி வழக்கில் வந்துள்ள பகுதி நீதியும் கிடைக்க முயற்சிகள் மேற்கொண்ட டீஸ்டா செதல்வாத், மோடிக்கும் அவரது தளபதி அமித் ஷாவுக்கும் எதிராக இயங்குகிற இந்திரா ஜெய்சிங் போன்ற நீதிக்கான போராளிகளை துன்புறுத்த, பழிவாங்க தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது.
ராணா அய்யூப் என்ற பத்திரிகையாளர் சமீபத்தில் வெளியிட்ட குஜராத் கோப்புகள் என்ற புத்தகம், காவல்துறை உயரதிகாரிகளுடன் அவர் பேசியபோது ரகசியமாக பதிவு செய்த உரையாடல்களை விரிவாகச் சொல்கிறது; அந்தப் புத்தகமும் 2002 படுகொலையில் அரசு உடந்தையாக இருந்ததை உறுதி செய்கிறது. படுகொலை நடந்தபோது உள்துறை செயலராக இருந்த அசோக் நாராயண், மோடி தனக்கு விருப்பமான, நம்பகமான காவல்துறை அதிகாரிகளுக்கு, கலவரத்தில் விஸ்வ இந்து பரிசத்துக்கு ஆதரவளிக்குமாறு வாய்மொழி உத்தரவிட்டார் என்றும், இதை மோடி ‘இந்து வாக்குகளுக்காகச்’ செய்தார் என்றும் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட அந்த உரையாடல்களில் சொல்கிறார். படுகொலை நடந்தபோது அகமதாபாத் காவல் ஆணையராக இருந்த பிசி பாண்டே, வரலாற்றில் இசுலாமியர்கள் மேலோங்கிய நிலையில் இருந்தபோது நடத்திய கலவரங்களுக்கு இந்துக்கள் பழிவாங்குவதுதான் இந்த மதவெறி வன்முறை என்று நியாயப்படுத்தியதும் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட அந்த உரையாடல்களில் உள்ளது.
காங்கிரசின் ஆதரவுடன் நடந்த 1984 சீக்கியர் படுகொலையோ, மோடி தலைமையிலான குஜராத் அரசாங்கம் 2002ல் நடத்திய மனிதப் படுகொலையோ எதுவாக இருந்தாலும், விசாரணை கமிசன்களும் நீதிமன்றங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தப்பிப் பிழைத்தவர்களுக்கும் நீதி வழங்கவில்லை. அரசியல் தலைவர்கள் தப்பித்துவிடுகிறார்கள்; முக்கியமான சாட்சிகள் புறந்தள்ளப்படுகின்றன; பொம்மைகளாக இருக்கும் சிலர் மட்டும் தண்டிக்கப்படுகிறார்கள்.
2002 படுகொலைக்குக் காரணமான அரசியல் தலைவர்கள் இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள்; நீதியை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், வன்முறையில் தப்பிப் பிழைத்த சாக்கியா ஜாப்ரி உள்ளிட்டோரும் நீதி கோரும் பிற போராளிகளும் தங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை. இந்தப் போராட்டம் இந்தியாவின் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரளும் ஒரு புள்ளியாகும்.