ஒரு நீதிபதியின் கையில் வழக்குரைஞரின் பணியை தொடரும் அதிகாரம் வழங்குவது சர்வாதிகாரத்தனமானது: ச.பாலமுருகன்

ச.பாலமுருகன்

ச. பாலமுருகன்
ச. பாலமுருகன்
சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் வழக்குரைஞர்கள் சட்டத்தில் பிறப்பித்த சட்டத்திருத்தத்தின் படி நீதிமன்றத்தில் போராட்டம் நடத்துவது, பதாகைகளை பிடிப்பது மற்றும் நீதிபதி பெயரைச்சொல்லி பணம் பெறுவது, நீதிபதிகளை ஆதாரமற்று விமர்சிப்பது மற்றும் குடி போதையில் நீதிமன்றத்திற்கு வருவது உள்ளிட்ட காரணங்களுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது மாவட்ட நீதிபதியானவர் வழக்குரைஞர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். உடனடியாக குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நபர் வழக்குரைஞராக தொழில் செய்வதை தடுத்து உத்திரவிடலாம். இது உடனடியாக தமிழக அரசிதழில் வெளியாகி நடைமுறைக்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டிலிருந்து நீதிமன்றம் வழக்குரைஞர்கள் மீது தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் இது போன்ற தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்ககோரி சில வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்றத்தில் உட்கார்ந்து போராடினர். அவர்கள் கைது செய்யப்பட்டு சிறை படுத்தப்பட்டனர், அவர்கள் வழக்குரைஞர்களாக பணி புரிய தடைவிதிக்கப்பட்டது. பின் சில வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் ஆர்பாட்டம் செயதனர் என அவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தில் நீதிபதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது நீதிமன்ற விசாரணை.
ஆக வழக்குரைஞர்கள் வழக்குரைஞர்களாக பணி செய்ய முடியாது வெளியே நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் சாமானியர்கள் வழக்குரைஞர் தொழில் வருவாயை நம்பி குடும்பம் நடத்துபவர்கள்.பொது சமூக செயல்பாடுகளுடன் தொடர்புடையவர்கள்.பல சமூக பிரட்சனைகளுக்கு வழக்கமாக போராட ஒன்று சேரும் வழக்குரைஞர்கள் இந்த நீதிமன்றத்தின் உத்திரவுக்கு பின் தங்களின் உரிமைக்கு கூட போராட தயங்கினர். மதுரை வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் மீது நடவட்க்கை எடுக்கப்பட்டதால், அது போல தங்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை வந்துவிடும் என அஞ்சினர். திருச்சியில் வழக்குரைஞர்கள் சங்கமாக சேர்ந்து இந்த நிலைகளுக்கு எதிராக குரல் கொடுக்க முயன்றபோது, அது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கூட்டத்தில் கலந்து கொண்ட எல்லோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்குரைஞர்களை கட்டுபடுத்தும் பார் கவுன்சில் எச்சரித்தது. எல்லோரும் மெளனமாயினர். வழக்குரைஞர் தொழில் புரிய விடாமல் வெளியே நிறுத்தப்பட்ட வழக்குரைஞர்களை பிற வழக்குரைஞர்கள் மறந்தனர். இந்த பயத்தை பயன்படுத்திக்கொண்டது நீதிமன்றம். இதற்கு முன் வழக்குரைஞர்கள் பல போராட்டங்களை உயர்நீதிமன்றத்திற்கு எதிராக நடத்திய போது இருந்தது போன்று இல்லாத ஒரு நிலை உருவானது. அது வழக்குரைஞர்களை பணி நீக்கம் செய்து பணிய வைக்கும் புது யுக்தி. வழக்குரைஞர்கள் ஒன்று சேர முடியாத நிலையில் தனித்தே நின்றனர். தொடர்ந்து வழக்குரைஞர்கள் மீது புதுப்புது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டது உள்ளிட்ட பல புதிய வழிமுறைகள் பின் பற்றப்பட்டது.
கடந்த இருபத்தி மூன்று வருடங்களாக நான் வழக்குரஞராக பணி புரிகின்றேன். நீதிமன்றத்தில் குடித்துவிட்டு வருபவர்கள் அல்லது நீதிபதியிடம் அவதூறாக பேசுபவர்கள் எனது அனுபவத்தில் அறிதிலும் அறிதாய் நடந்ததாகவே கருதுகின்றேன். அது போன்று ஒன்று நிகழும் சூழலில் சக வழக்குரைஞர்கள் குறிப்பிட்ட வழக்குரைஞர் செயலை அதனை அனுமதிக்கவே மாட்டார்கள். நீதிமன்றத்தில் பணி புரியும் பெரும்பாலான வழக்குரைஞர்கள் அதன் புனிதத்தன்மையையும், மரியாதையையும் பாதுகாப்பவர்களே . இது வரை நீதிபதிகளுக்கு பாதுகாப்பாய் வழக்குரைஞர்களே இருந்து வந்திருக்கின்றார்கள். நீபதிகளும் ,வழக்குரைஞர்களும் சேர்ந்ததாகவே நீதிமன்றம் இருந்துவந்துள்ளது. அவர்கள் சம பொருப்புணர்வு உள்ளவர்களாகவே நடந்து வந்துள்ளனர்.
ஆனால் தற்போதைய நிலை அசாதாரணமானது. நீதிபதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நீதிமன்ற ஊழியர்களைப்போல வழக்குரைஞர்களை மாற்றும் முயற்சி தற்போது துவங்கி விட்டது. புதிய சட்டத்திருத்தம் வழக்குரைஞர்கள் நீதிபதிகளை ஆதாரமின்றி விமர்சிப்பது ,தொழிலை இழக்கவேண்டியது என மாறியுள்ளது . நீதிபதி அதிகாரப்படியில் கடவுளாக மாறிவிட்டார்.. நமது நீதிமன்ற அமைப்பு நடைமுறையில் முழு சனநாயகக்கூறுகள் கொண்டது என கூற இயலாது. அது இன்னமும் காலணிய ஆட்சியின் எச்சங்களை வைத்துள்ளது. நீதிமன்ற ஊழியர்களை மீன் குழம்பு சரியாக வைக்கவில்லை என்றும் ,உள்ளாடை துவைக்கவில்லை எனவும் பிற சிறிய காரணங்களுக்கு ஊழியர்கள் மிரட்டப்படுவதற்கு கீழமை நீதிபதிகளின் கையில் உள்ள ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரமே.
வழக்குரைஞர்கள் மீது பார் கவுன்சிலே நடவடிக்கை உரிய விசாரணை செய்து எடுக்க முடியும் என்ற நிலையிலிருந்து மாற்றி நீதிபதிகளுக்கு அந்த அதிகாரம் வழங்குவது, வழக்குரைஞர்களின் சுதந்திரத்தில் தலையீடு செய்வதாகும். கட்டற்ற அதிகாரம் சனநாயக சுதந்திரத் தன்மையினை அழித்துவிடும்.
நீதிபதி அரிபரந்தாமன் தனது பிரிவு விழாவில் பேசும் போது வழக்குரைஞர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் செயல்கள் பாகுபாடுள்ளதாக சுட்டிக்காட்டினார். டெல்லியில் பாட்டியாலா நீதிமன்றத்தில் கண்ணையா குமாரை தாக்கிய வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பார் கவுன்சில் தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள் மீது சில போராட்டங்களுக்காக நடவடிக்கை எடுத்து அவர்களை தொழில் செய்ய தடைவிதித்தததை விமர்சித்தார். அரசு ஊழியர்கள் ஒன்று திரண்டு போராடுவது போல தங்களின் உரிமைகளுக்காக வழக்குரைஞர்களும் போராடவேண்டும் என்றார்.
சமூகத்தில் புரையோடியிருக்கும் ஊழல், , பாதக பார்வை( prejudice), விருப்பு வெறுப்பு உள்ளிட்டவைக்கு நீதிமன்றங்களும் விதிவிலக்கல்ல. இந் நிலையில் அச்சமின்றி வழக்குரைஞர் தொழில் புரியும் எல்லா சூழல்களையும் மாற்றி ஒரு நீதிபதியின் கையில் வழக்குரைஞரின் பணியை தொடரும் அதிகாரம் வழங்குவது சர்வாதிகாரத்தனமானது. சனநாயகத்திற்கு இந்த சட்டதிருத்தம் வலு சேர்க்கப்போவதில்லை. மேலோட்டமாக பார்க்கும் போது நீதிமன்றத்தின் மாண்பை குலைக்கும் வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை என்ற புரிதல் வரும் . ஆனால் பல சனநாயக விரோத சட்டங்கள் இதுபோன்ற ஒன்றை க்கூறிகொண்டே வந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இது . இந்த சட்ட திருத்தம் நியாயமற்றது. வழக்குரைஞர்களுக்கு வாய்ப் பூட்டு போடுவது. சுதந்திரத்தன்மைக்கு எதிரானது. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ள பார் கவுசில் அதிகாரமே போதுமானது.இ ந்த புதிய விதி திரும்பப்பெறப்படவேண்டும்.
ச.பாலமுருகன்,  மக்கள் சிவில் உரிமைக்கழகம்PUCL மாநிலச்செயலர்.
முகப்புப் படம்: பிரதாபன் ஜெயராமன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.