
இறைவியில் இதை கவனித்தீர்களா ? -1
அதில் ஒரு தயாரிப்பாளர் டைரக்டரை மன்னிப்பு கேட்கச் சொல்வார். டைரக்டர் மன்னிப்புக் கேட்டதும் காலை நீட்டி கேட்கச் சொல்வார்.
பின்னர் வருந்தி விளக்கம் கொடுக்கும் போது “சார் அவன் மன்னிப்பு கேட்டா போதும்ன்னுதான் நினைச்சேன். ஆனா அவன பாத்த உடனே சர்ருன்னு ஏறிகிச்சி காலைத் தொட்டு மன்னிப்பு கேட்கச் சொன்னேன்” என்பார்.
பாபியை சேதுபதி மன்னித்து பிரச்சனையில்லாமல்தான் செல்ல நினைக்கிறார் ஆனால் திடீரென்று அவருக்கு சர்ருன்னு ஏறிக்கொள்ள பாபியை கொன்றுவிடுகிறார்.
தயாரிப்பாளரை விஜய் சேதுபதி அப்படியேதான் “திடீரென்று சர்ரென்று ஏறிக்கொள்ள” சுத்தியால் அடித்து கொலை செய்கிறார்.
தம்பியைக் கொன்ற விஜய் சேதுபதியை எஸ்.ஜே சூர்யா மன்னிக்கத்தான் வருகிறார். ஆனால் “சர்ரென்று ஏறிக்கொள்ள” கொன்றுவிடுகிறார்.
ஆக இந்த சர்ரென்று ஏறிக்கொள்ளும் கோபம் ஆவேசம் பற்றி கார்த்திக் சுப்புராஜ் மிக நுட்பமான காட்சிகளை படம் நெடுக வைக்கிறார்.
திருதாஷ்டிர ஆலிங்கனமாக இப்படி சர்ரென்று ஏறிக்கொள்ளும் முன்கோபம், உணர்ச்சிவசப்படல் யாருக்கு அதிகம் வருகிறது.
ஆணுக்கா?
பெண்ணுக்கா?
இந்திய ஆணாதிக்க சூழ்நிலையில் ஆன் இப்படி அடிக்கடி சர்ரென்று ஏறிக்கொள்ளும் நிலையில் ஆண் பல குற்றங்களை செய்கிறான். இதனால் அவனுக்குள் அடக்கப்பட்ட (கவனிக்க திட்டமிட்டு அடக்கப்பட்ட) பெண்ணின் வாழ்க்கையும் குழந்தைகளின் வாழ்க்கையும் அடியோடு மாறிவிடுகின்றன.
இன்னும் இப்படி பெண்ணின் சுக துக்கங்கள் ஆணைச்சார்ந்து அவனுடைய உணர்ச்சிவசப்பட்ட நிலையை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்க வேண்டுமா?
அவளுக்கென்று ஒரு தனிப்பட்ட கம்பீரமான சுய முடிவு எடுக்கும் வாழ்க்கை இருக்கக்கூடாதா?
இறைவனை தொடங்குபவனாக பார்க்கிறோம். நம்மை, நம் வாழ்க்கையை செலுத்துபவனாக பார்க்கிறோம்.
இந்திய குடும்பங்களில் ஆணே செலுத்துபவனாக இருக்கிறான். அகையால் அவன் இறைவன் (அப்படியாக போற்றுகிறார்கள்)
அப்படியானால் ஏன் பெண் குடும்பத்தை செலுத்துபவளாக உருவாக முடியாதா? அது பற்றி பெண்கள் யோசிக்கலாமே?
அதற்கு பெண்களை “இறைவி” யாக சித்தரிக்கிறார்.
நான் டிராண்ஸ்போர்ட்டில் வேலை பார்க்கும் போது பார்த்திருக்கிறேன்.
கூட்டிப் பெருக்கும் வேலையை செய்யும் பல பெண்களின் கணவன், அல்லது மிக எளிமையான வேலையை வருமானம் குறைவாக வரும் வேலையைச் செய்யும் கணவன் நல்ல பதவியில் இருந்து திடீரென்று இறந்து போயிருப்பார். அவருக்கு பதிலாக குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்று வரும் போது மனைவி படித்திருக்காத காரணத்தால் எளிய வேலையை செய்யும் நிலமைக்கு வந்திருப்பார்.
அப்படியானால் கணவன் உயிரோடு இருந்தால் நல்ல வாழ்க்கை. இல்லாவிட்டால் ஏழை வாழ்க்கை.
கணவன் = இறைவன் ( இதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் யதார்த்தில் இப்படித்தான் இருக்கிறது)
கார்த்திக் சுப்புராஜ் என்ன சொல்ல வருகிறார் என்றால் ’கணவன் இறைவன்’ வேண்டாம் நீ “இறைவி”யாக ஆகு. நீ தனித்து இயங்கு என்கிறார்.
அவர் பெண்களை உயர்த்தி தெய்வஸ்தானத்துக்கு தூக்கவில்லை. ஆளுமை பெறும் காலத்தைத் தாழ்த்த வேண்டாம். உரிமையை யாராவது கொடுப்பார்கள் என்று காத்திருக்க வேண்டாம்.
தேவையில்லாத செண்டிமெண்டில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
அஞ்சலி மாதிரி ரயில் ஏறிப் போய்க் கொண்டே இருங்களேன் என்று ரேடிக்கலாக கோரிக்கை வைக்கிறார்.
இது பெண்ணிய படமில்லாமல் வேறு எது பெண்ணிய படம்.
ஒரு காட்டுக்குள் மாட்டிக் கொண்ட அப்பாவி மிருகத்தின் கஷ்டத்தை காட்ட வேண்டுமானால் அங்கே அக்காட்டில் இருக்கும் கொடூர மிருகத்தின் மிருகத்தனத்தை தத்ரூபமாக காட்டத்தான் வேண்டும். அப்படி காட்டும் போதுதான் அப்பாவி மிருகத்தின் பிரச்சனை பார்வையாளருக்குப் புரியும்.
ஆண்களைப் பற்றியே காட்டுவதால் அது பெண்ணியப் படம் இல்லை என்பது தவறான புரிதல் ஆகும்.
ஒவ்வொரு பெண்ணும் இறைவியை திரும்ப திரும்ப பார்த்து விவாதிக்க வேண்டும்.
அதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.
இறைவி நல்லப் படம்.
அதைப் பாருங்கள்.