#புத்தகம்2016: சர்ச்சையை ஏற்படுத்திய புத்தகங்கள்!

புத்தக திருவிழாவை ஒட்டி இந்த ஆண்டு வெளியான சர்ச்சைக்குரிய நூல்கள் இங்கே…

1. ஒரு கூர்வாளின் நிழலில்

இந்த ஆண்டு வெளியான புத்தகங்களிலேயே அதிகம் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கும் நூல். விடுதலை புலிகள் அமைப்பின் மகளிரணி தலைவர்களுள் ஒருவரான தமிழினி எழுதிய தன்வரலாறு இந்த நூல். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  தமிழினி நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு, அவரது விருப்பத்தின் பேரில் அவருடைய கணவர் ஜெயன் தேவா வெளியிட்டிருக்கிறார்.  இந்த நூல் தமிழினி எழுதியதே அல்ல என்று ஒரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.

நஞ்சுண்ட காடு குணா கவியழகன் முக நூலில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்:

‪#‎தமிழினியின்‬ “கூர்வாளின் நிழலில்” புத்தகத்தை விமர்சனம் செய்பவர்கள் மற்றும் வாதப் பிரதிவாதம் செய்பவர்கள் முதலில் தவறான ஒரு சொல்லாடலை தவிர்த்து விடுங்கள். தமிழினி விடுதலை புலிகளின் மகளிர் அணித்தலைவி அல்ல. அவர் விடுதலை புலிகள் இயக்கத்தின் ஒரு துறையான அரசியல் துறையின் மகளிர் பிரிவின் பொறுப்பாளர் மட்டுமே. இவ்வாறு பல்வேறு பிரிவுகள் அமைப்பில் இருந்தன. அதில் ஒன்றிற்கு சிலகாலம் பொறுப்பு வகித்தவரே தமிழினி. அவரை மகளிர் அணித்தலைவி என்றடையாளப்படுத்துவதன் மூலம் பதிப்பகத்தார் அவர்கருத்தை ஒருவகை அதிகார பூர்வக் கருத்தாக்கி கனதியூட்டுவது சதிகார தனமானது. உள்நோக்கம் கொண்டது.#

இதற்கு காலச்சுவடு கண்ணனின் முகநூல் பதிவு:

என் கேள்வியும் சில விளக்கங்களும்.

1. ‘புலிகளின் மகளிரணித் தலைவியின் தன்வரலாறு’ என்பது உப தலைப்பு. மூன்று அல்லது நான்கு வார்த்தைகளுக்குள் தமிழக வாசகருக்கு அவரை அறிமுகம் செய்யும் முயற்சி. “விடுதலை புலிகள் இயக்கத்தின் ஒரு துறையான அரசியல் துறையின் மகளிர் பிரிவின் பொறுப்பாளர்”-இது விளக்கம், உப தலைப்பு அல்ல.

2. நூலின் முதல் பக்கத்தில் தமிழினியின் நீண்ட வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு உள்ளது. அதில் அவர் ” பின்னாட்களில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவு பொறுப்பாளராகச் செயல்பட்டவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3. அவர் அரசியல் துறையில் பணியாற்றினார் என்பது இந்நூலைப் பொறுத்த வரையில் கூடுதல் மதிப்பை வழங்குவதாகும். இந்நூல் அவரது போர்கால சாகசங்களின் தொகுப்பு அல்ல. மாறாக இதில் அவர் வெளிப்படுத்தும் பல அனுபவங்கள் அரசியல் அணியில் இருந்ததால் மட்டுமே அவருக்கு சாத்தியப்பட்டவை.

4. தலைவர் என்பது இங்கு உச்சப்பொறுப்பில் இருப்பவரையும் தலைமை அணியில் இருப்பவர்களையும் குறிப்பதாகும். சிதம்பரம் காங்கரஸ் தலைவர். பொன் ராதாகிருஷ்ணன் பாஜக தலைவர். கனிமொழி திமுகவின் மகளிர் அணித்தலைவி என்பதால் அவரை திமுக தலைவர் என்று குறிப்பிடுவதில் முரண் ஏதும் இல்லை.

5. தமிழினி தன் நூலில் சொல்லி இருப்பவை உடன்பாடானதாக இருந்தால் இக்கேள்வி எழுந்திருக்குமா ? grasping at the straws என்ற மரபுத் தொடருக்கு உதாரணமாக இருக்கின்றன இத்தகைய பதிவுகள்.

அடுத்து நூல் பின்னட்டைக் குறிப்பு பற்றிய சர்ச்சை வந்தது…

இதற்கு காலச்சுவடு பதிப்பகத்தின் தரப்பில் தரப்பட்ட விளக்கம்:

  1. நவம்பர் மாதம் ஜெயகுமாரன் இந்த நூல் வெளியீடு தொடர்பாக என்னைத் தொடர்பு கொண்டார். பிரதியை அனுப்பக் கேட்டுப் படித்துப் பார்த்து ஒரு வார காலத்தில் வெளியிடுவதாக ஒப்புக்கொண்டோம். இலங்கைத் தீவுக்கான உரிமை ஜெயகுமாரனுக்கு உரியது என்று குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்தோம். நூல் பிரதி அவர் அனுப்பிக் கொடுத்த படியே வெளிவந்துள்ளது. பிழைதிருத்தம் மட்டுமே காலச்சுவடு மேற்கொண்டது. பின்னட்டை குறிப்பும் அவர் அனுப்பி வைத்த படியே வெளிவந்துள்ளது. தமிழினி பெயரை காலச்சுவடு சேர்க்கவில்லை. பின்னட்டை வரிகளை நாங்கள் தேர்வுசெய்யவும் இல்லை. நூல் அச்சுக்குப் போகும் வரை ஒவ்வொரு சிறு விடயமும் நூலின் இறுதி வடிவமும் ஜெயகுமரன் அவர்களின் ஒப்புதல் பெற்றே வெளிவந்தது. நவம்பரில் இருந்து தொடர்ந்த மின்னஞ்சல்களை முழுவதுமாகப் பார்வையிட்ட பிறகே இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.

2. நூல் வெளிவந்ததுதம் பின்னட்டை குறிப்பு தன்னுடையது என்பதை பிரேமா ரேவதி சுட்டிக்காட்டினார் என்பது உண்மை. மேலும் அவர் இரண்டு விஷயங்களை சொன்னார். ஓன்று தன்னுடைய வரிகளை பின்னட்டைக் குறிப்பாக தமிழினி தேர்வு செய்தது தனக்கு மகிழ்ச்சி. இரண்டாவது, அதில் உள்ள சில சொற்களுக்காக தமிழினி தாகப்படக்கூடும் என்ற கவலை. இதை நான் இவ்வாறு விளக்கிக் கொண்டேன். பின்னட்டைக் குறிப்பில் தன் பெயரை வைத்தது தமிழினி. அதை நான் மாற்ற முடியாது. இரண்டாவது அதை எழுதியவருக்கு அதில் மறுப்பில்லை. இதை நான் தமிழினியின் பிழையாக ஒரு கணமும் யோசிக்கவில்லை. மாறாக தனக்கு பிடித்த வரிகளை அனுமதி பெற்று சுவீகரித்துக் கொண்டார் என்றும் அது அவர்தம் நட்பின் பாற்பட்டது என்றும் எடுத்துக் கொண்டேன். எனவே பிழையைத் திருத்த வேண்டும் என்று கருதவில்லை. அந்த முடிவுக்கு நான் மட்டுமே பொறுப்பு.

3. இந்த முடிவுக்கு பிழை திருத்துவதில் உள்ள தயக்கமோ நடைமுறைகளோ காரணம் அல்ல. நூல் அச்சுக் சென்ற பின்னர் அதன் மென் பிரதியை நூல் வெளியீட்டில் வாசிப்பு நிகழ்த்துவதற்காக பிரேமா ரேவதிக்கு அனுப்பி இருந்தோம். அதில் ஒரு சிறிய ஆனால் முக்கியமான எழுத்துப் பிழையை அவர் சுட்டிக்காட்டினார். உடன் அந்த 16 பக்கங்களை மீண்டும் அச்சடித்தோம். இந்த நூலின் முக்கியத்துவத்தை உணர்ந்தே செயல்பட்டோம் என்பதற்கு இது ஒரு சான்று.

4. இன்றைய நிலையில் மின் நூலில் பெயர் மாற்றத்தை விரைவில் செய்து விடலாம். மீதி அச்சுப் பிரதிகளிலும் இப்போதே திருத்திவிடுவோம்.

தமிழினியின் கணவர் ஜெயன் தேவா அளித்த விளக்கம்: 

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட எனது மனைவி தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூலின் பின் அட்டைக் குறிப்பு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து எனது பதில்:

தமிழினி இறப்பதற்கு முன்னராகவே தனது நூலின் வடிவம் குறித்து தீர்மானித்திருந்தார். பின் அட்டைக் குறிப்புக்காக சில மேற்கோள்களையும் பத்திகளையும் தெரிவு செய்திருந்தார். ஆனால் அது யாருடைய கூற்று என்பதை அவர் அப்பட்டியலில் பதியவில்லை. அவற்றில், தற்போது நூலின் பின் அட்டையில் உள்ள குறிப்பும் ஒன்று. பதிப்பகத்தினர் என்னிடம் பின் அட்டைக் குறிப்பு கேட்ட போது, நான் அந்தக் குறிப்பை அவர்களுக்கு அனுப்பினேன். நூல் அச்சுக்குப் போக முன்னர் அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த பிரதியின் அட்டையில் அக்குறிப்பு இடம் பெற்றிருந்த போதும் நான் அது தமிழினியின் குறிப்பென்றே நம்பினேன். தமிழினியின் நினைவு மலரிலும் நான் அக்குறிப்பை பின் அட்டையில் வெளியிட்டிருந்தேன். தீபச் செல்வனும், பிரேமா ரேவதியும் சுட்டிக் காட்டும் வரை அது தமிழினியின் குறிப்பென்றே நம்பினேன். தவறைத் திருத்திய தீபச் செல்வனுக்கும், பிரேமா ரேவதிக்கும் எனது நன்றி. எதிர்காலப் பதிப்புக்களில் இத் தவறு திருத்தப்படும் என உறுதியளிக்கிறேன்.இத்தவறினால் ஏற்பட்ட குழப்பங்களுக்கும், அசெளகரியங்களுக்கும் வாசகர்களுக்கும், காலச்சுவடு பதிப்பகத்தினருக்கும் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்தாளர் அகரமுதல்வன் தமிழினியை மையப்படுத்திய கதை எழுதியதாக அடுத்த சர்ச்சையும் கிளம்பியது. இது குறித்து எழுத்தாளர் த. கலையரசனின் பதிவு இங்கே:

அகரமுதல்வனின் கதையும் தமிழினியை புணரும் மேட்டுக்குடித் திமிரும்: த. கலையரசன்

2. இடக்கை

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதி உயிர்மை பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்ட நாவல் இடக்கை.

இந்த நாவலில் பல இலக்கண பிழைகள் உள்ளதாக எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன்  “எழுத்தாளன் என்னும் பெயர் கொண்ட எலி” என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

3. இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு -வெண்டி டோனிகர்

வெண்டி டோனிகர் ஆங்கில நூல் தடை செய்யப்பட்டு, விற்பனையிலிருந்து திரும்பப் பெறப்பட்டது. காரணம் இந்துவ அமைப்புகள் ஏற்படுத்திய சர்ச்சை. இந்நூலில் தமிழாக்கத்தை வெளியிட்டிருக்கிறது எதிர் வெளியீடு. தமிழில்: க. பூரணச்சந்திரன்

அமெரிக்க சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் 83 வயதான வெண்டி டோனிகர்(Wendy Doniger), கடந்த 40 வருடங்களாக இந்துத்துவம் குறித்து ஆய்வு செய்து வருபவர். சமஸ்கிருதத்தைக் கற்ற இவர் ரிக், மனு வேதங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவர் எழுதி சமீபத்தில் வெளியான புத்தகம், The Hindus: An Alternative History. இது வெளியாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தப் புத்தகம் இந்துக்களுக்கு எதிரானதாகவும் இந்துக்கள் மனதை புண்படுத்தும் கருத்துக்கள் உள்ளதாகவும் தவறான வரலாற்று தகவல்கள் உள்ளனவாகவும் கூறி இந்தப் புத்தகத்தை தடை செய்ய வழக்குத் தொடர்ந்திருந்தது ஒரு இந்து அமைப்பு. இதையடுத்து தொடர்ந்து வந்த அச்சுறுத்தல்கள் காரணமாக  இந்த புத்தகத்தை வெளியிட்ட பென்குயின் பதிப்பகம் தானாகவே முன்வந்து இனி இந்தப் புத்தகத்தை பதிப்பிக்கப் போவதில்லை என்றும், விற்பனையில் இருக்கும் புத்தகங்களையும் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தது. இந்த முடிவு ஆய்வறிஞர்கள், சமூகவியலாளர், சிந்தனையாளர்களிடையே பெறும் விவாதத்தைக் கிளப்பியது. மேலதிக தகவல்கள் இங்கே:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.