வெ.ஜீவக்குமார்

ஐவகை நிலங்களில் தலையாய மருதமே எமது பிரதேசமாகும். ஊரின் பெயரே ஐந்து நதிகளைச் சுட்டிக்காட்டும் திருவையாறு எமது தொகுதியாகும். தன் பரிவாரங்களுடன் பட்டத்து யானையில் தினமும் பவனி வந்து பார்வை இட்டு கரிகாற் சோழன் கட்டிய கல்லணை இத்தொகுதியில்தான் உள்ளது. பொன்னியின் செல்வன் காலத்தில் வந்தியத் தேவன் ஓட்டிய குதிரையின் குளம்படி தடங்கள் ஆற்றங்கரைகளில் இப்போதும் ஒளிந்து கிடக்கலாம்.எனினும் திருவையாறு சட்டமன்ற பரப்பு காவிரிச் சமவெளி பகுதியை மட்டுமே உள்ளடக்கியது அல்ல. கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்குண்டான் நீட்டிப்பு வாய்க்கால் என்று ஆறுகள் பாயாத ஏரிப் பாசனமும் இங்கு உள்ளது. பாலைவனம் போல் பொட்டலாய் கிடக்கிற செங்கிப்பட்டி பகுதியின் வறண்ட நிலமும் இதில் அடங்கும்.
திருவையாறு தொகுதியின் சட்டமன்றத் தேர்தல் 16.5.2016ல் முடிந்துவிட்டது. திமுக, அதிமுக, மக்கள் நலக்கூட்டணி உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் இங்கு போட்டியிட்டனர். தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இந்த கட்டுரையாளர் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்டார். 19.5.2016ல் வாக்குகள் எண்ணப்பட்டன. திமுக வேட்பாளரின் வெற்றி இங்கு அறிவிக்கப்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்தில் ஊழல், டாஸ்மாக், இரு துருவ அரசியல், ஆட்சி மாற்றம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பேசப்பட்டன. இவற்றுடன் இணைத்து இந்த தொகுதியின் பிரத்யேக அடிப்படை பிரச்சனைகளும் பிரச்சாரத்தில் மையமாகின. வானம் பார்த்த பூமியாக கிடக்கிற ஆச்சாம்பட்டியின் பாசனப் பிரச்சனை துவக்கத்தில் தேர்தல் களத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த பகுதி சாகுபடிக்கு தண்ணீர் இன்றி வாடுகிற பகுதி ஆகும். அருகில் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளது. அங்கு மங்கனூர் என்ற ஊர் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் புங்கனூர் என்ற ஊர் உள்ளது. இடையில் சுமார் 30கி.மீ. இருக்கும் மங்கனூரில் மழை பெய்தால் புங்கனூரில் விளைந்துவிடும் என்ற சொலவடை இங்கு புழக்கத்தில் உண்டு. அய்யனார் அணைக்கட்டு என்ற பகுதி இங்கு உள்ளது. மங்கனூரின் தண்ணீர் ஆச்சான் ஏரி, மூலடி ஏரி, சூக்குடி ஏரி, பேய் வாரி வழியாக புங்கனூர் அய்யனாபுரம் வரை சென்றடையும். சுமார் 3000 ஏக்கர் பாசனப் பகுதியான இங்கு ஏரிகள், வாய்க்கால்கள் பல்லாண்டுகளாக தூர்ந்து போய் உள்ளன. மதகுகள் சீர் செய்யப்படாமல் உள்ளன. வசதியானவர்கள் குடிப்பதற்கு மினரல் தண்ணீரை பயன்படுத்துகிறார்கள்;சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்வு செய்தால் ஒரு ஆண்டிற்குள் பாசன பிரச்சனையை தீர்த்து சரி செய்வதாக மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் என்ற முறையில் ஊர் மந்தையில் நின்று வாக்குறுதி தந்தோம்.
அதற்கான வாய்ப்புகளையும் சொன்னோம். 1967 முதல் கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி நாட்டை ஆளும் திமுக, அதிமுக ஆட்சிகள் ஏரிகளை தூர்வாரிக்கூட தரவில்லை என்று பேசினோம். இவ்வளவு காலமாக அவர்களால் தீர்வுகாணப்படாத ஒரு பிரச்சனையை முடிப்பதாக மேலும் கால அவகாசம் கோர அவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை என்றும் கூறினோம். இந்த பிரச்சாரத்திற்கு பிறகு அதே கிராமத்திற்கு திமுக, அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு சென்றனர். இந்த பிரச்சனையை அவர்கள் துளியும் கண்டுகொள்ளவில்லை. தேர்தலில் வாக்காளர்கள் தீர்ப்பு இந்த பகுதியில் பின்வருமாறு அமைந்தது; இந்த பகுதி வாக்குச்சாவடி எண்கள் 283, 284 ஆகும்.
கட்சி வாரியாக வாக்குகள் விபரம்:
பதிவான வாக்குகள் – 1106,
திமுக – 545
அதிமுக – 493
மக்கள் நலக் கூட்டணி – 48
பிரச்சாரத்தின்போது சிறிது ஈர்ப்பு தெரிந்தாலும் வாக்காளர்கள் இந்த பாசனப் பிரச்சனை பற்றி கவலைப்பட்டதை தேர்தல் முடிவு பிரதிபலிக்கவில்லை. திருவையாறு தேர்தலில் மக்கள் மேடையில் மையமாக்கப்பட்ட மற்றொரு பிரச்சனை தொகுதி தலைநகரின் வசதிகள் குறித்ததாகும். தியாகராஜ உற்சவம் திருவையாறில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடக்கிறது. குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் விழாவிற்கு வந்து போகின்றனர். இங்கு சாலை போக்குவரத்து வசதி இல்லை. திருவையாறு பேருந்து நிலையம் அருகில் எதிரெதிரே இரண்டு பெரிய லாரிகள் வந்துவிட்டால் கூட போதும் பீரங்கி படைகள் மோதி கொள்வது போல் சாலைகள் சின்னாபின்னமாகி விடுகின்றன. இதேபோல் நதிக்கரையில் நாகரிகம் பிறந்தது என்று பொதுவாக கூறினாலும் இங்கு சாக்கடை வசதி இல்லை.
மக்கள் நலக் கூட்டணி சார்பில் என்னை வெற்றி பெற வைத்தால் திருவையாறில் புறவழிச்சாலை அமைப்பு மற்றும் பாதாளச் சாக்கடை வசதி அமைத்து தருவதாக குறிப்பிட்ட காலக்கெடுவுடன் வாக்குறுதி தந்தோம். இந்த கோரிக்கைகள் குறித்தும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை. இங்கு வாக்காளர்கள் வாக்களிப்பு விவரம் வருமாறு:(வாக்குச்சாவடிகள் 53 முதல் 65 வரை)
பதிவான வாக்குகள் – 9098
திமுக – 4535
அதிமுக – 3692
மக்கள் நலக் கூட்டணி – 553
தேர்தல் துவக்கத்தில் இந்த பிரச்சனை பற்றி வாக்காளர்கள் ஆர்வமாக கேட்டனர். முடிவில் இந்த பிரச்சனை குறித்தும் வாக்காளர்களிடம் பெருத்த சலனம் இல்லை. திருவையாறு தொகுதியில் நெல் சாகுபடி மட்டும் அல்ல கரும்பு, வாழை, வெற்றிலை, வெங்காயம் உள்ளிட்ட நவ தானியங்கள் விளைகின்றன. வளப்பக்குடி, நடுப்படுகை, பகுதியில் ஒரு வாழை கிட்டங்கி மட்டும் உள்ளது. அதுவும் செயல்படாமல் உள்ளது. சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்தால் 12 மாதத்தில் குளிர்சாதன வசதி உள்ள கிட்டங்கியும் மேலும் இரண்டு ஆண்டுகளில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலையும் நிறுவுவதாக மக்கள் நலக் கூட்டணி சார்பில் கூறினேன். இவற்றை செய்ய முடியும் என்பதற்கு சான்றாக சில களப்போராட்ட அனுபவங்களை கூறினேன்.
பிறகு இதே பகுதிக்கு வாக்குச் சேகரிக்க திமுக, அதிமுக வேட்பாளர்கள் வந்தனர். அவர்கள் இந்த கோரிக்கைகள் பற்றி மூச்சுவிடவில்லை. இந்த பகுதியில் வாக்குப்பதிவின் விவரம் வருமாறு:
வாக்குச்சாவடிகள் எண் 23-24பதிவான வாக்குகள் – 2116
திமுக – 1022
அதிமுக -986
மக்கள் நலக் கூட்டணி -57
இவை அன்னியில் அரசர்கள் காலத்தில் வெட்டப்பட்ட வரலாற்றுத் தொன்மையான கள்ளப்பெரம்பூர், அல்லூர், அரசகுடி ஏரிகள் இங்கு உள்ளன. நெய்வேலி காட்டாமணக்கும் ஆகாயத்தாமரையும் முள்வேலி பத்தைகளும் இவற்றில் அடர்ந்துள்ளன. அவை சீர்ப்படுத்தப்பட்டு தொன்மை மீட்கப்பட்டு சுற்றுலாத்தளமாக உருவாக்கப்படும் என்ற கோணத்திலும் மக்கள் நலக் கூட்டணி வாக்குறுதிகளை வழங்கினோம். திருக்காட்டுப்பள்ளி அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்க ஆவன செய்வதாகவும் கூறினோம். அதிமுக, திமுகவின் வேட்பாளர்கள் இந்த கோரிக்கைகள் குறித்து மேடைகளில் எதுவும் சொல்லவில்லை. திமுக, அதிமுகவினருக்கு இவை தெரியாத கோரிக்கைகள் அல்ல. அவற்றின் வேட்பாளர்கள் முன்பு சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்தான். எனினும் இந்த கோரிக்கைகள் குறித்து விவாதங்களை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. ஒரு வரி கூட இவற்றைப் பற்றி பேசாமல் கடந்து சென்றனர். எனினும் அதிக வாக்குகளை அவர்கள் அள்ளினர். மக்களின் வலியினை, வேதனையை, அவற்றிற்கான தீர்வினை மக்கள் நலக் கூட்டணி மட்டுமே பேசியது.
கஞ்சிக்கு இல்லை என்பதைவிட அதன் காரணங்கள் ஏன் என்று தெரியாமலே வாழ்வோர் பாரதி காலத்துக்கு முன்பும் பின்பும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர்.தேர்தல் வெறும் திருவிழா பொழுதுபோக்கு மொய்ச்சடங்கு என்று மக்கள் கருதுகிறார்களா? திராவிட இயக்கங்கள் எவ்வாறு இவர்களின் மனங்களை கட்டிப்போட்டுள்ளன? நல்ல கல்வியை, குடிநீரை, பாசனத்தை, சாலை வசதியை தேர்தல் களம் முடிவு செய்ய முடியும் என்பதை வாக்காளர்கள் உணர எவ்வளவு காலம் பிடிக்கும்? திருமணம் என்றால் மொய் இயல்பானதாகிறது. தேர்தலில் வாக்குகளுக்கு பணம் தருவதும் அதனைப்போல் என திராவிட பேரியக்கங்கள் மாற்றி உள்ளன. வெற்றி பெற்றவர்கள் கழுத்துக்களில் மாலைகளோடு ஊர்வலம் போகின்றனர். பாம்புகள் ஊர்ந்து செல்லும் எமது கட்டாந்தரை ஏரிகளோ பெருமூச்சுவிடக்கூட ஜீவனின்றி அனாதைகளாக கிடக்கின்றன.
நன்றி: தீக்கதிர்.