2016-ஆம் ஆண்டு வெளியாகியிருக்கும் சூழலியல் சார்ந்த புத்தகங்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. பதிப்பகங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது பத்துக்கும் குறைவான சூழலியல் நூல்களே வெளிவந்துள்ளது கவலை கொள்ளக்கூடியதாக உள்ளது. இந்த ஆண்டு வெளியான விடுபட்ட சூழலியல் நூல்கள் இருந்தால் தெரிவிக்கலாம்.
1. அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை
கிளாட் ஆல்வாரஸ் தமிழில்: ஆயிஷா இரா. நடாராஜன்
எதிர் வெளியீடு
2. செர்னோபிலின் குரல்கள்
ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்
எதிர் வெளியீடு
“இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் முக்கியமான நூல்களில் ஒன்றாக இதை முன்மொழிகிறேன். ‘செர்னோபில் அணுஉலை பேரழிவு’ குறித்த வாய்மொழி வரலாற்று நூல். இதன் ஆசிரியர் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் இந்நூலுக்காக நோபல் பரிசுபெற்றார். நோபல்பரிசு பெற்ற முதல் ஊடகவியலாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.” என்கிறார் குட்டி ரேவதி.
3. சுற்றுச் சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு
ராமச்சந்திர குஹா தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
எதிர் வெளியீடு
4. வீசிஎறி சமூகமும் குப்பை உருவாக்கமும்
(நன்கொடை;ரூ. 5)
தண்ணீருக்கான பொது மேடை
இன்றைய 2016 ஆம் ஆண்டில்,பேனா எழுதவில்லையா வீசிஎறி புதிதாக மற்றொன்று வாங்கு, கைக்கடிகாரம் ஓடவில்லையா வீசி எறி புதிதாக மற்றொன்று வாங்கு,துணிப்பைகள் இல்லையா, கவலையில்லை பிளாஸ்டிக் பை கடையில் உள்ளது, பிளாஸ்டிக் பாத்திரங்கள் உடைந்துவிட்டதா வீசி எறி புதிதாக மற்றொன்று வாங்கு, தொலைகாட்சிப் பழுதா, வீசி எறி புதிதாக மற்றொன்று வாங்கு, கைபேசி பழுதா, வீசி எறி புதிதாக மற்றொன்று வாங்கு, பயணம் மேற்கொள்கிறோமா, அம்மா புட்டி நீர் உள்ளது, அக்குவபீனா உள்ளது, விலை கொடுத்து வாங்கு காலி புட்டியை வீசி எறி, என புதிய “வீசிஎறி சமூகத்தை” இன்றைய முதலாளிய உற்பத்தி முறை உருவாக்கிவிட்டது. இந்த வீசிஎறி பண்பாடு கெடுவாய்ப்பாக தமிழ்ச்சமூகத்தில் ஆழமாக ஊடுருவிவிட்டது.
இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வீசி எறிந்த பிளாஸ்டிக்,மின்பொருள் குப்பைகள் வீட்டில் இருந்து தெருவுக்கும்,தெருவிலிருந்து குப்பை மேட்டிற்கும்,குப்பை மேட்டிலிருந்து குப்பை கிடங்கிற்கும் வருகிறது,ஆனால் இக்குப்பை நமது புவியை விட்டு எங்கும் வீசி எறியப்படவில்லை!
(நூலில் இருந்து சில பத்திகள் …)
தொடர்புக்கு: 9884311988/9940468968
5. நிலைத்த பொருளாதாரம்
ஜே.சி.குமரப்பா
இயல்வாகை பதிப்பகம்
“அடுத்த மனிதன் வீழ்ச்சியடையும்படியாக அமையக் கூடிய தவறை ஒருபோதும் செய்யாதீர்”
” எந்தப் பணியை ஒருவன் செய்தாலும் தன்னுடைய செயலால் ஏற்படக்கூடிய சமூக விளைவை எண்ணிப்பார்க்க வேண்டும்”
போன்ற ஆழமான படிப்பினையின் விளைவாக ஜே.சி.குமரப்பா’வின் பொருளாதார கொள்கைகள் அரசியல், சமூகம், அறம் , ஆன்மீகம் பொதிந்த எளிமையும் வலிமையுமான “நிலைத்த பொருளாதாரத்தை” வழங்கியுள்ளார்.
மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழும் நெறியையும் , அன்பும் அறமும் ஆன்மீகமுமாய் வாழும் உன்னதத்தையும்.. மகிழ்வையும்.. மறந்து போன தற்கால சமூகத்தின் நெருக்கடி மிகுதியான நுகர்வு வெறியால் வேட்டையாடப்பட்ட சமூகத்தை அப் பிணியிலிருந்து பக்குவமாய் குணப்படுத்தும் அருமருந்தாக “நிலைத்த பொருளாதாரம்” இன்று தேவைப்படுகிறது. மகாத்மா காந்தியின் வார்த்தைகளிளே சொல்லுமாயின் ஜே.சி.குமரப்பா “தெய்வீக தன்மையின் மருத்துவர்” எனவும் “கிராமக் கைத்தொழில் மருத்துவர்” எனவும் பட்டம் சூட்டி பெருமிதப்பட்டார் .
“மனிதன் என்பவன் செல்வத்தை மட்டுமே உற்பத்தி செய்யும் வெறும் இடைத்தரகன் அல்ல ; தான் வாழும் சமூகத்தின் அரசியல், சமுதாய, அற, ஆன்மீகப் பொருப்புகளை உள்ளடக்கிய ஒரு முக்கிய உறுப்பினன் என்ற வலிய கருத்துகளின் வழியே
இன்று பொருளாதார சிக்கலில் புரையோடிப்போன இச்சமூகத்தின் அறியாமையை நீக்கிட… தற்சார்பை நோக்கி நகர்ந்திட… வாழ்ந்திட…. தக்க சமயத்தில் “நிலைத்த பொருளாதாரம்” என்னும் படைப்பை தன் சகாக்களின் துணையோடு அயராத உழைப்பின் மூலமும் வேட்கையின் வழியே சமர்பித்திருக்கிறார் என் சத்தியத்தின் சமமான நண்பன் “பூபாலன்”.
‘பனை’ பூபாலனின் பயணம் ” ஐயா நம்மாழ்வாரால் ” அசீர்வதிக்கப்பட்டது… “குக்கூ சிவராஜ்” அண்ணாவாலும் “இயல்வாகை அழகேஸ்வரி” அக்காவாலுமு அரவனைக்கப்பட்டது… சபர்மதி’யில் அண்ணலை சந்தித்து அரவனைக்கப்பட்ட ‘ஆயத்த மனிதன்’ ஜே.சி.குமரப்பா’வை போல்.
– இரா.வெற்றிமாறன்
6. தட்டான், ஊசித்தட்டான்கள் (அறிமுகக் கையேடு)
ப. ஜெகநாதன், ஆர். பானுமதி
க்ரியா பதிப்பகம்
பறவைகள், பட்டாம்பூச்சிகள் பற்றிய கையேடுகளுக்குப் பிறகு க்ரியா வெளியிட்டுருக்கும் கையேடு.
7. மலை முகடு: வனப்பயணியின் நினைவலைகள்
சின்ன சாத்தன்
சந்தியா பதிப்பகம்
“பல ரகஸ்யங்களை உள்ளடக்கிய வனத்துக்குள் போக, கனவுடன் இருப்பவர்களை, தான் அனுபவித்த வனப்பயணங்களை எழுத்துக்களால் கைப்பிடித்து வனத்துக்குள் நடத்திச் செல்கிறார் சின்ன சாத்தன்”.
8. பூமிக்கான பிரார்த்தனை
போப் பிரான்சிஸ்
இயல்வாகை, பூவுலகின் நண்பர்கள்
சூழலைக் காக்க தொடர்ந்து குரல் கொடுத்து வரும் போப் பிரான்சிஸ் எழுதிய மடலின் சுருக்கப்பட்ட வடிவம் “பூமிக்கான பிரார்த்தனை” என்ற நூல்.