குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ விமர்சனம்: வி. சபேசன்

வி. சபேசன்

வி.சபேசன்
வி.சபேசன்
 கடந்த வாரம் யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற குணா கவியழகனின் 3 நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வில் நான், ‘விடமேறிய கனவு’ நாவலுக்கான விமர்சனத்தை செய்திருந்தேன்.

அந்த விமர்சனத்தின் எழுத்து வடிவம் இது. சில குறிப்புக்களை வைத்துத்தான் பேசினேன். எழுதி வைத்து வாசிக்கவில்லை. ஏறக்குறைய இதைத்தான் பேசினேன்.

‘விடமேறிய கனவு’ நாவல் கதையின் நாயகன் தனது கதையை சொல்வதாக தன்னிலை வடிவத்தில் அமைந்திருப்பதை சொல்லி விமர்சனத்தை ஆரம்பித்தேன்.

…………………………………………………

தடுப்பு முகாம் அனுபவம்….

முள்ளிவாய்க்காலிற்குப் பின்னர் ஒரு போராளியின் தடுப்பு வாழ்க்கை பற்றிய கதை இது. எனது அறிதலுக்கு எட்டிய வரையில், ஈழப் போருக்குப் பின்னர் இதுவரை வெளிவந்த நாவல்களில் தடுப்பு வாழ்க்கை பற்றி ஆழமாக விபரித்த முதலாவது புத்தகம் இது என்று சொல்வேன்.

„விடமேறிய கனவு’ 3 வகையான முகாம்களைப் பற்றிப் பேசுகிறது. சித்திரவதை முகாம், விசாரணை முகாம், புனர்வாழ்வு முகாம் என்கின்ற 3 முகாம்களை நாம் இதில் பார்க்கிறோம்.

ஏதிரியைக் கேட்டால், இந்து மூன்றுமே புனர்வாழ்வு முகாம்கள்தான் என்று சொல்வான். பாதிக்கப்பட்ட எம்மவர்களைக் கேட்டால் மூன்றையும் சித்திரவதை முகாம்கள் என்றுதான் சொல்வார்கள்.

தடுப்பில் உள்ளவர்களை தாக்குவது, சித்திரவதை செய்வது மூன்று முகாம்களிலுமே நடக்கின்றது.

…………………………………………………

தத்துவார்த்தமானது…
.
இன்னொரு வகையில் பார்த்தால், இது ஒரு தத்துவார்த்தமான புத்தகம். தத்துவங்களும், அது சார்ந்த கேள்விகளும், பதில்களும் புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கின்றது.

பொதுவாக தத்துவம் சார்ந்த கதைகளில் கதையின் நாயகனுக்கு ஒரு குறிப்பிட்ட சம்பவத்தின் ஊடாகத்தான் தத்துவம் பிறக்கும். ஒரு சந்திப்பு, ஒரு கேள்வி என்பவைகள் அதற்குக் காரணமாக இருக்கும்.

அத்துடன் அந்தக் கதைகள் வாழ்க்கை நிலையற்றது’ என்பதை போதிக்கும் தத்துவத்தை முன்னிறுத்தும்.

‘விடமேறிய கனவு’ உயிர் வாழ்வதற்காக நடக்கும் போராட்டத்தின் ஊடாக தத்துவ விசாரணைகளை செய்ய முற்படுகிறது.

(இதன் போது ஆத்மா, உடல் பற்றியும் மனிதனின் குணவியல்பு பற்றியும், தர்மம் என்றால் என்னவென்று பற்றியும் நாவலில் இடம்பெற்றிருந்த சில வரிகளை வாசித்துக் காட்டினேன்)

…………………………………………………

கதை பரபரப்பாக நகர்வது எப்படி?….

இப்பொழுது ஒரு கேள்வி வருகிறது. நாவல் முழுவதும் தத்துவங்களால் விரவியிருந்தால், ஒரு வாசகனுக்கு ஒரு கட்டத்திற்குப் பிறகு அலுப்புத்தட்டதா? நாவலை எப்படி பரபரப்பாக நகர்த்திச் செல்வது?

தத்துவார்த்தமாக எழுதப்பட்டிருந்தாலும் „விடமேறிய கனவு’ மிக வேகமாகவும், பரபரப்பாகவும் நகர்கிறது.

கதையின் நாயகன் தனது கொடுப்புக்குள் ஒரு சைனட்டை ஒளித்து வைத்திருக்கின்றான். அதுதான் அவனது பலமாக இருக்கிறது. அந்த சைனட்டை அவன் இழக்க முடியாது.

அவனை தலைகீழாக கட்டி தொங்கி விடுகிறார்கள். பின்னர் தலையை நிலத்தோடு மோதச் செய்கிறார்கள். அப்படியான நேரங்களில் சைனட்டும் நொறுங்கி விடும் வாய்ப்பு இருக்கிறது.

அவனை விசாரணை செய்கின்ற போது கேள்விகளால் துளைத்து எடுக்கிறார்கள். எந்த ஒரு பதிலின் போதும், அவனது கன்னத்தில் ஓங்கி அறை விழலாம். சைனட் உள்ளே சிதறி விடலாம்.

சைனட் வெடித்தால் அது அவனுக்கு மட்டும் பாதிப்பு அல்ல. அவனோடு இருந்த எல்லோருக்கும் அது ஆபத்து. நாவலின் முன்பகுதி இப்படி வேகமாக நகர்கிறது. பின் பகுதி தடுப்பில் இருந்து தப்பித்துச் செல்லும் சாகசம் நிறைந்த திட்டமிடுதல்களோடு மேலும் வேகம் எடுக்கின்றது.

…………………………………………………

வித்தியாசமானது…..

„விடமேறிய கனவு’ தொடக்கத்திலேயே இது ஒரு வித்தியாசமான கதை என்று சொல்ல வைத்து விடுகிறது.

பொதுவாக இயக்கத்திற்கு போவதற்கான காரணங்களாக ஏதாவது ஒரு இழப்பு இருக்கும். ஒரு அழிவும், பாதிப்பும் காரணங்களாக இருக்கும்.

ஆனால் இங்கே பாலர் வகுப்பில் தவறி விழுந்து விட்ட சிறுமியை தூக்கி விட்டதை ஒரு காரணமாக கதையின் நாயகன் சொல்கிறான். அம்மாவை காப்பாற்ற ஒடியது, பாடசாலையில் சக மாணவன் செய்த தவறை தானே ஏற்று தண்டனையை பெற்றது, இரத்தம் கொடுக்க முடியாமல் போனதால் ஏற்பட்ட மனவருத்தம் என்று கதையின் நாயகன் சொல்கின்ற காரணங்கள் இதை ‘வித்தியாசமான நாவல்’ என்று எடுத்த எடுப்பிலேயே சொல்ல வைத்து விடுகிறது.

…………………………………………………

கதையின் முக்கிய பாத்திரங்கள்…

கதையில் வருகின்ற எல்லாப் பாத்திரங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பைக் கொண்டிருக்கின்றன. இதில் ராசு அண்ணர், சஞ்சயன் போன்ற பாத்திரங்கள் முக்கியமானவை. வெடிபாலன் என்கின்ற ஒரு சுவாரஸ்யமான பாத்திரமும் வருகிறது.

‘விடமேறிய கனவில்’ தடுப்பு முகாமில் இருந்தபடி எதிரிக்கு திருப்பியடிக்கும் முதலாவது போராளியாக ராசு அண்ணர் வருகிறார். இடதுசாரிச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட ராசு அண்ணர் நாவல் முழுவதும் ஒரு போராளியாகவே வாழ்கிறார்.

சஞ்சயன் ஒரு முக்கிய பாத்திரம். என்னைக் கேட்டால் கதையின் நாயகன் சஞ்சயன்தான் என்று சொல்வேன். மிகவும் புத்திக்கூர்மையுடன் எதிரியை அணுகுகிறார். எதிரியின் ஒவ்வொரு நகர்வையும் அவர் சரியாகக் கணிக்கிறார். திட்டங்களை அபாரமாகப் போடுகிறார்.

இதைப் படிக்கின்ற போது இன்றைக்கு இந்த ‘சஞ்சயன்கள்’ எங்கே என்கின்ற ஓலம் அடிமனதில் இருந்து எழுகின்றது. இவரைப் போன்றவர்கள் அல்லவா எமது அடுத்த கட்டப் போராட்டத்தை வழி நடத்திச் செல்ல வேண்டும்?

வெடிபாலன் என்கின்ற பாத்திரம் வருகிறது. தடுப்பு முகாமில் சமையலுக்கு அவர்தான் பொறுப்பு. அவர் இயக்கத்தில் இருந்தவர் அல்ல. ஆனால் இயக்கத்தில் இருந்ததாக காட்டிக் கொள்வார். எல்லா தளபதிகளையும் தெரியும் என்று வெடிப்பார். தடுப்பு முகாமிலும் தனக்கு எல்லா இராணுவ அதிகாரிகளையும் தெரியும் என்று புழுகித் தள்ளுவார். ஆகவே பாலன் என்கின்ற அவர் வெடிபாலனாக ஆகிப் போனார்.

உண்மையில் இன்றைக்கு சஞ்சயன்கள் இருக்க வேண்டிய இடத்தில் அதிகமான வெடிபாலன்கள் வந்து உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது வேதனையான தனிக் கதை.

ரஹீம் என்கின்ற புலனாய்வு அதிகாரியின் பாத்திரம் வருகிறது. ராகவன் என்று தடுப்பில் உள்ளவர்கள் அவனை அழைப்பார்கள். முகாமில் உள்ள இராணுவு அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவார்கள். ரஹீம் மட்டும் மாற்றப்படுவதில்லை. அங்கேயே இருப்பான். கைதிகள் பற்றிய அவனது அறிக்கை முக்கியமானது.

இராணுவ அதிகாரிகளில் மனிதம் மிக்க சிலரையும் „விடமேறிய கனவு’ தொட்டுச் செல்கிறது. புதிதாக அந்த முகாமுக்கு மாற்றலாக வரும் இராணுவ அதிகாரி சொல்வான், „நாங்கள் ரெண்டுபேரும் வீரர்கள்தான். களத்தில் உங்கட சண்டைத் திறமையை பார்த்திருக்கிறன்…. இப்படியான கேவலமான சூழ்நிலையில் உங்களை வைச்சிருக்கிறதுக்கு மனம் வருந்திறன். எனக்கு அரசியல் தெரியாது’ என்று.

போராளிகளை பார்க்க வரும் உறவினர்களின் கதறலைப் பார்த்து கண்ணீர் விடும் சர்ஜனும் கதையில் வருகிறான்.

பெண் சிப்பாயாக வரும் நிசானிக்கு கதையில் முக்கிய இடம் உண்டு.

…………………………………………………

கதையின் அரசியல்….

கதையின் அரசியல் என்ன என்பது ஒரு முக்கிய கேள்வி. அதை நாவலில் வருகின்ற பின்வரும் இடங்களில் தேட முடியும் என்று நம்புகிறேன்.

தடுப்புமுகாமில் வைத்து இராணுவத்தை திருப்பித் தாக்குகின்ற ராசு அண்ணர் ஒரு இடதுசாரி சிந்தனையுள்ளவராக வருகின்றார். கதையின் முடிவில் கதையின் நாயகன் அடைக்கலம் தேடிப் போய் சேர்கின்ற இடம் ஒரு சிங்கள இடதுசாரிப் போராளியினுடையதாக இருக்கின்றது.

கதை முழுவதும் ‘சந்தேகம்’ என்பது ஒரு பாத்திரம் போல தொடர்ந்து வருகின்றது. அது ஏற்படுத்துகின்ற சேதம் பெரிதாக இருக்கின்றது. இன்றைக்கு எமது அரசியலிலும் ‘சந்தேகம்’ என்பது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது.

இந்த ‘சந்தேகம்’ ஆபத்தானது என்று கதை சொல்கின்றது. சந்தேக அரசியல் செய்வதை கதை எதிர்க்கின்றது.

முள்ளிவாய்க்கால் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னரேயே முடிவு பெரும்பாலும் தெரிந்து விடுகிறது. ஆனால் போராளிகளும், மக்களும் வெளியேறவில்லை. கடைசி வரை ஒன்றாகவே செல்கிறார்கள். இதை „விடமேறிய கனவு’ கூட்டுச் செயற்பாடு, சமூகத்தின் கூடி வாழும் தன்மை’ என்பதாக விபரிக்கின்றது.

தோற்றுப் போனதற்கான காரணங்களாக பலவற்றை கதை ஆங்காங்கே சொல்கிறது. தவறுகளுக்கான வரலாற்றின் தண்டனை என்று சொல்கிறது. வஞ்சிக்கப்பட்ட மக்களின் சாபம் என்று சொல்கிறது.

(மிக முக்கியமாக அனுபவவாதம் அறிவுவாதமாக மாறாததை கதை சுட்டிக்காட்டுகிறது. இதைக் குறிப்பெடுத்துக் கொண்டு போயிருந்தும், நிகழ்ச்சியில் குறிப்பிட மறந்து விட்டேன் என்று நினைக்கிறேன். மிக முக்கியமான இதை எப்படி மறந்தேன் என்று வருத்தமாகவும் இருக்கிறது)

„ஓரு கூட்டுவெற்றியில் தனிமனிதப் பங்காளர்களுக்கு உரித்தான பங்கு கிடைப்பதில்லை. ஆனால் கூட்டுத்தோல்வியில் தனிமனிதனுக்கு உரித்தானதுக்கும் அதிகமான பங்கின் விளைவை அவன் சுமக்கு நேர்கிறது’ என்று சொல்லப்படுவது முக்கியமானது.

தப்பித்த பின்னரும் போராளிகளாக தொடர்ந்து இணைந்து இயங்குவது என்று எடுக்கின்ற முடிவில் உள்ள செய்தியையும் இங்கே கவனிக்க வேண்டும்.

…………………………………………………

கதையின் குறைகள், பலவீனங்கள்….

குறைகள் என்பது குறைகளாக இருக்க வேண்டியது இல்லை. எனக்கு குறைகளாக தெரிந்தவைகள்தான் இவைகள்.

கதையின் நாயகன் பேசுகின்ற போதும், சிந்திக்கின்ற போதும் அடிக்கடி „ச்சா’ என்று சொல்கின்றான். வாசிக்கின்ற போது எனக்கு இது இடைஞ்சலாக இருந்தது. மிக ஆழமாக செல்கின்ற சொற்களுக்கு இடையில் ச்சா’ என்று வருகின்ற போது, தொந்தரவாக உணர்ந்தேன். கதையின் பற்பகுதியில் ச்சா’ குறைந்து விட்டது. அத்துடன் அது எனக்கு பழகி விட்டது.

ராசு அண்ணர் பாடுவதாக வருகின்ற காட்சிகள் நீண்டு விட்டன. இதை ஒரு சினிமாவில் காட்சியாக எடுத்திருந்தால், நிச்சயம் உணர்ச்சிபூர்வமான ஒன்றாக வந்திருக்கும். கதையில் அப்படி வரவில்லை.

முகாம் அமைப்பு பற்றியும் 3 பக்கங்கள் நீண்டு விட்டது. தப்பித்துச் செல்லும் திட்டத்திற்கு இந்த விபரிப்பு அவசியமாக இருந்தாலும், உண்மையில் அது நீண்டுதான் போய் விட்டது.

கருத்தியல்ரீதியாக கழுவிகள்’ என்கின்ற வகைப்படுத்தலோடு என்னால் முற்றுமுழதாக உடன்பட முடியவில்லை.

எதிரியோடு தமது தேவைக்காக ஒட்டி உறவாடும் கைதிகளை நாவல் „கழுவிகள்’ என்று வர்ணிக்கிறது.

ஒரு நேரத்தில் ராசு அண்ணர் இராணுவ அதிகாரிக்களுக்கும் போராளிகளுக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளராக செயற்படுவார். உதவுவதற்காக ராசு அண்ணர் இந்த வேலையை செய்வார். இந்த உறவின் ஊடாக பல நன்மைகளை செய்து தருவார்.

ஆனால் சிலருக்கு ராசு அண்ணரும் ஒரு கழுவியாக’ தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொருவருக்கும் தாம் செய்கின்ற செயல்களுக்கு ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

சிங்கள இராணுவத்தினரையும், அதன் அதிகாரிகளையும் முட்டாள்கள் போன்று சித்தரித்ததை கதையின் முக்கிய பலவீனமாக பார்க்கிறேன்.

விசாரணை முகாமில் கொழும்பில் இருந்து வருகின்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவன் அதிகாரி மட்டும்தான் கதையில் வந்த புத்திசாலியான சிங்களவனாக இருக்கின்றான். அவனது விசாரணை முறை மிரள வைக்கிறது.

மற்றையபடி எல்லோரும் முட்டாள்களாக இருக்கின்றார்கள். சைனட் கொடுப்புக்குள் இருப்பதைக் கூட அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. சைனட்தான் கதையை ஆரம்பத்தில் பரபரப்பாக நகர்த்தினாலும், இந்தக் கேள்வியும் கூடவே வந்து கொண்டிருந்தது.

…………………………………………………

முடிவாக….

இப்படி சில குறைகள் கதையில் இருந்தாலும் மொத்தத்தில் ‘விடமேறிய கனவு’ தமிழ் இலக்கியச் சூழலில் முதன்மையான படைப்புக்களில் ஒன்று.

வீரம், சோகம், துன்பம், காதல், துணிவு, சாகசம், தத்துவம் என்று எல்லாவற்றைம் ஒன்றாய் அனுபவிக்க விருமபுகின்ற வாசகன் படிக்க வேண்டிய படைப்புக்களில் „விடமேறிய கனவு’ முக்கியமானது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.