
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்கிற புத்தகம் பற்றி ஓராண்டுகளாக தொடர்ந்து எழுதி வருகிறேன். அந்த புத்தகம் வெறுமனே திரைக்கதை வசனம் அடங்கிய ஒன்று என்கிற கூற்றை ஒட்டியே இன்றுவரை விவாதம் நடந்து வருகிறது. ஒரு இயக்குனர் ஒவ்வொரு ஷாட்டுக்கும் அதன் தொழில் நுட்பக்காரணம், அதன் தேவை, என முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்தும், திரைக்கதையின் அமைப்புக் குறித்தும் வாசகர்களுக்கு விளக்கும் மிக முக்கியமான நூல். தமிழ் சினிமா வரலாற்றில் இதுதான் முதல்முயற்சி. உலக அளவில் புகழ்பெற்ற சினிமா புத்தகமான டேவிட் மேமட்டின் On Directing என்கிற நூலுக்கு எவ்விதத்திலும் சளைத்தது அல்ல மிஷ்கினின் இந்த நூல். இதை மிஷ்கின் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் நான் அப்படி சொல்வதில் ஆச்சயர்மேதும் இல்லை என்பதை நூலை படித்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
தமிழின் சாபக்கேடு எதையும் ஆழமாக தெரிந்துக்கொள்ளாமல் எதுப் பற்றி விவாதிக்கிறோமோ அது பற்றிய துளி அறிவுக் கூட இல்லாமல் பொதுவெளியில் விவாதிக்க முடியும் என்கிற எண்ணம்தான். பொதுவெளியில் ஒன்றை பதிவு செய்யும் முன்னர் அல்லது விவாதிக்கும் முன்னர் அது பற்றி முன்னம் வந்த பதிவுகளையாவது ஒருமுறை வாசித்திருக்க வேண்டும். நேற்று எங்கோ ஒரு பதிவில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைக்கதை வசனம் புத்தகம் 600 ரூபாயா ஒருவர் ஆச்ச்சயர்ப்பட்டிருந்தார். இரண்டு லட்சம் மின்னஞ்சல், பல ஆயிரக்கணக்கானோர் படிக்கும் முகநூல், தமிழ் ஸ்டுடியோ இணையத்தளம் என எல்லாவற்றிலும் இது பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன். விகடனின் தடம் என்கிற புத்தகத்திலும் இதுகுறித்து சிறியதொரு விமர்சனமும் வெளிவந்திருக்கிறது. இது எதையும் படிக்காமல் அது என்ன நூல் என்றே தெரியாமல் அல்லது குறைந்தபட்சம் புத்தகக் காட்சியில் ப்யூர் சினிமா அரங்கிற்கோ, வடபழனியில் உள்ள புத்தகக் கடைக்கோ ஒருமுறைக்கூட வருகை புரியாத நண்பர்கள் இன்று இந்த புத்தகத்தின் விலை குறித்து பேசுவது பெரும் அயர்ச்சியை தருகிறது. எனக்கு பல வேலைகள் இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டு பகுதி நேரமாக முகநூளில் எழுதி தள்ளும் சராசரி அல்ல நான்.
நான் முன்னமே சொன்ன டேவிட் மேமட்டின் நூல் மொத்தப்பக்கம் நூத்தி சொச்சம் தான். அதன் விலை அறுநூறு ரூபாய்க்கும் மேல். பல ஆங்கிலப் புத்தகங்கள் நூறு பக்கங்களுக்கு குறைவுதான் ஆனால் அதன் விலை ஆயிரங்களில் இருக்கும். ஆங்கில புத்தகங்களுக்கு ஏன் செல்ல வேண்டும், தமிழில் சினிமாவைப் பற்றி ஒன்றுமே அறியாத எழுத்தாளர்கள் எழுதித் தள்ளியிருக்கும் நூலின் விலை 900, 1000 என்று இருப்பது நண்பர்களுக்கு தெரியாதா? தமிழின் எத்தனை நாவல்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை வைத்து விற்கப்படுகிறது. தமிழில் சினிமாவின் மொழியறிந்த ஒரு இயக்குனர் நல்ல சினிமா பரவலாக போய் சேர ஓராண்டுக் காலம் உழைத்து ஒரு நூலை எழுதிக் கொடுக்கிறார். அந்த நூல் ஆங்கில நூல்களுக்கு இணையாக வரவேண்டும் என்பதற்காக உயர்தர தாள், அச்சிடும் தொழில்நுட்பம் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து நான் செதுக்கியிருக்கிறேன். இந்த நூலின் தரம் வேறெந்த தமிழ் புத்தகங்களிலாவது இருக்கிறதா என்று புத்தகத்தை படித்த நண்பர்கள் கூறலாம். நியாயப்படி ஓநாயும் ஆட்டுக்குட்டியும் புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் விலை வைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழில் எல்லா உதவி இயக்குனர்களுக்கும், சினிமா ஆர்வலர்களுக்கும் போய் சேர வேண்டும் என்கிற நோக்கில்தான் 600 ரூபாய் என்று விலை வைத்துள்ளோம். மிஷ்கின் இந்த விலையைக் கூட குறைத்து 500 ரூபாய் வைக்கலாம் என்றார். ஆனால் புத்தகத்தின் அச்சு செலவு, அதற்கான தாள் செலவு என எல்லாமும் சேர்த்து 500 ரூபாய் என்று வைத்தால், மற்றக் கடைகளுக்கு 30 சதவீதம் கழிவு என்று வைத்துக்கொண்டாலும் எனக்கு சல்லிக்காசு மிஞ்சாது. அதனால் நூறு ரூபாய்க் கூட்டி நான்தான் 600 ரூபாய் என்று முடிவு செய்தேன். தமிழில் பக்கங்களுக்கு விலை வைத்து எழுத்தாளர்களுக்கு நாம் பெரும் துரோகம் செய்திருக்கிறோம். புத்தகங்களில் இருக்கும் உள்ளடக்கத்திற்குதான் நாம் விலை வைக்கவேண்டும். அதனால்தான் டேவிட் மேமட்டின் நூறு பக்கங்களிலான புத்தகம் அறுநூறு ரூபாய்க்கு மேல் விலை வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு புத்தகத்தை வாங்கிப் படிக்காமல், அதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல், அதன் பின்னியில் எத்தனை பேர் உழைத்திருக்கிறார்கள், எத்தனை ஆண்டுக் காலம் உழைப்பு என்று தெரியாமல் போகிற போக்கில் விலை அதிகம் என்று சொல்லிசெல்வது எல்லாம் நல்ல புத்தகங்களை பதிப்பிக்க பெரும் சிரத்தை எடுத்து செயலாற்றி வரும் பேசாமொழி பதிப்பகத்தை செருப்பால் அடிப்பதற்கு சமம்.
இன்று விலை அதிகம் என்று சொல்பவர்கள் எல்லாம், ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள்தான். நான் நன்கொடை கேட்டக் காலத்தில் ஒரு நூறு ரூபாய் கூட இவர்களின் கையில் இருந்து எனக் கைக்கு வந்ததில்லை. தமிழ் ஸ்டுடியோவின் எவ்வித செயல்பாட்டிலும் ஒரு தன்னார்வலராகக் கூட, அல்லது அதன் செயல்பாட்டை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு ஊடகமாக கூட செயல்பட்டவர்கள் கிடையாது. இன்று நானாகவே, இந்த இயக்கத்திற்கு பெரும் நிதி தேவை என்று அதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறேன். இங்கேயும் வந்து நியாயமான விலை என்று கூட தெரியாமல் விலை அதிகம் என்று அவதூறு பேசினால் என்ன செய்வது. நான் தொடர்ந்து பிச்சை எடுக்க வேண்டும், அப்போதும் நீங்கள் பிச்சைக் கொடுக்க மாட்டீர்கள். வசவு சொற்களால் காயப்படுத்துவீர்கள். நானாக ஒரு சேவையோடுக் கூடிய தொழிலை நடத்தி வந்தால் அதிலும் அவதூறு செய்வீர்கள் என்றால் என்னதான் ஐயா செய்வது? இப்போது விலை அதிகம் என்று கூறும் யாராவது படச்சுருள் என்று ஒரு மாத இதழ் வருகிறதே, நூறு பக்கங்கள் கொண்ட ஒரு ஆய்விதழ் அதன் விலை வெறும் இருபது ரூபாய்தான் என்பதை எப்போதாவது மலைப்புடன் பேசியிருக்கிறீர்களா?
இப்போதும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விலை அதிகம் என்று கூறும், உண்மையிலேயே நல்ல புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள், படச்சுருள் இதுவரை வெளியான அனைத்து புத்தகங்களையும் படித்துவிட்டு, அதுக் குறித்த உங்கள் விமர்சனத்தை முகநூளில் எழுதிவிட்டு நேராக சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் 109க்கு வாருங்கள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் புத்தகத்தை பாதி விலைக்கு தருகிறேன். அல்லது சென்னை புத்தகக் காட்சியல் ப்யூர் சினிமா அரங்கில் வந்து தன்னார்வலராக வேலை செய்யுங்கள். புத்தகத்தை அதற்கு அன்பளிப்பாக தருகிறேன். படிக்க வேண்டும் என்று நினைக்கும் அத்துனை நண்பர்களுக்கும் படிக்க இந்த புத்தகத்தை கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இனி தமிழ் ஸ்டுடியோவின் எதுவும் இலவசம் இல்லை. நீங்கள் ஒன்றைக் கொடுத்து இங்கிருந்து இன்னொன்றை பெற்று செல்லலாம். உங்களிடம் பணமில்லை என்றால் வந்து தமிழ் ஸ்டுடியோவோடு சேர்ந்து பணியாற்றுங்கள். படிக்க புத்தகங்களை நான் கொடுக்கிறேன். இனியும் விலை அதிகம் என்றால், உங்களை எதிர்காலம் சமூகம் மிக அசிங்கமான வார்த்தைகளால் வசை பாடும். நான் எதுவும் சொல்லமாட்டேன். நன்றி.