“தோற்றுப்போனவர்கள்” அறிக்கை விடக்கூடாதாம் ஒரு பத்திரிகையாளர் சொல்கிறார்!

மோகன்

மோகன்
மோகன்

தேர்தலில் முற்றிலும் மக்களால் நிராகரிக்கப் பட்ட கட்சித் தலைவர்கள் கொஞ்சமும் கூச்சமில்லாமல் தினந்தோறும் அறிக்கை விடுவது , பேட்டி கொடுப்பது என்று பொழுதுபோக்குகிறார்கள்.. சிலகாலம் அமைதி காப்போம்.. சுயபரிசோதனை செய்வோம் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு இல்லை . அவர்களை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சில காலம் காத்திருப்போர் பட்டியலில் வைப்பதே சரியானதாக இருக்கும் — பத்திரிகையாளர் லோகநாதனின் கருத்து

அரசியல்வாதிகளை பத்திரிகையாளர்கள் அவரவர் விருப்பத்துக்கு விமர்சிக்கிறோம். ஒரு அரசியல்வாதி பத்திரிகையாளர்களை விமர்சித்துவிட்டால் கோபம் கொள்கிறோம். பத்திரிகையாளர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா என்ன? பத்திரிகை துறையில் பணியாற்றுபவர்கள் எல்லோரும் மகாத்மாக்களும், பரமாத்மாக்களுமா என்ன? நாம் செய்யும் ஒவ்வொரு விமர்சனத்துக்கும் அரசியல்வாதிகள் கோபப்பட்டால் என்னவாகும்?

தோற்றுப்போனவன் அறிக்கை விடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம். வெற்றியும் தோல்வியும் எல்லோருக்கும் பொதுவானது. அரசியலில் தோற்றுப்போகாதவர்கள் யார்? அண்ணாதுரை தோற்கவில்லையா, காமராஜ் தோற்கவில்லையா? இவர்களைப் போன்ற மக்களால் மதிக்கப்பட்டவர்கள், மக்களுடன் நெருக்கமாக பழகியவர்கள், மக்கள் தலைவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் தோற்றுப்போன வரலாறு இருக்கும்போது. ஏதோ ஒரு சிறு கூட்டத்துக்கு தலைவர்களாக இருப்பவர்கள் தோற்றுப்போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

அரசியல் கட்சிகளில் தொண்டர்கள் அரசியல் அடிமைகளாக உள்ளனர். ஊடக நிறுவன அடிமைகளாக பத்திரிகையாளர்கள் உள்ளனர். அரசியலில் தலைமை மேற்கொள்ளும் தவறான முடிவுகளை எதிர்த்து கருத்து சொல்ல முடியாமல் தொண்டர்கள் ஊமைகளாக இருப்பதைப்போல், ஊடக உரிமையாளர்கள் ஊழியர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் கொடுமைகள், அடக்குமுறைகளுக்கு எதிராக எவரும் வாய்திறக்காமல் ஊமைகளாக இருக்கிறோம். உலக விஷயங்களையும், ஊலக தொழிலாளர் விஷயங்களை வாய்வலிக்க பேசுகிறோம். நாம் பணியாற்றும் நிறுவனத்தில் நமக்கு அருகில் அமர்ந்திருக்கும் சக ஊழியருக்கு நிர்வாகத்தால் பாதிப்பு ஏற்பட்டால் வாய் திறக்கிறோமா? குறைந்த பட்சம் பாதிக்கப்பட்ட நபரின் பக்கமாவது திரும்பி பார்கிறோமா?

ரயில்வே தொழிலாளர் போனஸ், போக்குவரத்து தொழிலாளர் போனஸ், துறைமுக தொழிலாளர் போனஸ் என பல நிறுவனங்கள் வழங்கும் போனசை வெளியிடும் ஊடகங்கள், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு வழங்க இருக்கும் போனஸ் குறித்து இதுவரை எந்த நிறுவனமாவது வெளியிட்டிருக்கிறதா? அப்படி ஒரு நிறுவனம் இருந்தால் அந்த நிறுவன முதலாளிக்கு பாராட்டு விழாவே நடத்தலாம்.
சில ஊடக நிறுவனங்கள் பத்திரிகையாளர்களை உருவாக்குவதற்கு பதிலாக, பிச்சைகாரர்களை உருவாக்கி வருகிறதே அதைப்பற்றி விமர்சனம் செய்கிறோமா? பத்திரிகையாளர்களுக்கு மரியாதை இல்லை, மரியாதை இல்லை என்று வாய்கிழிய பேசுகிறோமே, எந்த நாட்டிலும் உழைப்பவனுக்குதான் மரியாதை அளிக்கப்படுகிறது. பிச்சை காரர்களுக்கு மரியாதை அளிக்கப்படுவதில்லை. பத்திரிகை துறையில் நிலவும் இந்த சூழலுக்காக நாம் வருத்தப்படவேண்டும். இச்சூழலை மாற்றி அமைக்க நாம் பாடுபட வேண்டும். நம்மால் இவற்றை செய்ய முடியாமல் நாம் தோற்றுப் போயிருக்கிறோமா இல்லையா?
மக்களால் அவர்கள் நிராகரிக்கப்படவில்லை. தவறான முடிவால் தோற்றுப்போனார்கள் .

தோற்றுப்போனவர்களை நாம் விமர்சிக்க கூச்சப்படவேண்டும். வெற்றி பெற்றவர்கள் செய்த(எந்த கட்சியாக இருந்தாலும்) தில்லு முல்லு வேலைகளைப் பற்றி, அதிகார துஷ்பிரயோகம் பற்றி விமர்சிப்பதுதான் சரியான விமர்சனமாக இருக்கும்.

மோகன், சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.