என் அப்பா, இஸான் ஜஃப்ரி கொலை செய்யப்பட்டபோது மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நாராயண் தேசாய், அன் பிரான்க், கார்ல் மார்க்ஸ், தாஸ்தாவெஸ்கி, ஏ. எம். ஸெய்தி, ஆஸ்கர் ஒய்ல்டு, ஜஃபர் இக்பால் மற்றும் பலர் சாட்சிகளாக இருந்தனர்.
ஆமாம், 14 வருடங்களுக்கு முன் அவர்கள், புத்தக அலமாரிகளில் இருந்தபடியே அவரும் அவருடைய அண்டை வீட்டில் வாழ்ந்த முஸ்லீம்களும் பிப்ரவரி 28, 2002-ஆம் ஆண்டு பட்டப் பகலில் இந்துத்துவ குண்டர்களால், பாஜக அரசு ஆட்சியின் போது கொல்லப்பட்டார்கள்.
மிக மோசமான நாளில் அவர் கொலையானதின் நிர்வாண நடனத்தை பார்த்தபடி இருந்த இந்தப் புத்தகங்கள், சூரத்தில் உள்ள என் சகோதரரின் வீட்டின் இரண்டாவது அடுக்கில், அமைதியாக கிடக்கின்றன, சில புத்தகங்கள் அந்த தினத்தின் சாம்பலையும் தூசிகளையும் இன்னமும் தாங்கியிருக்கின்றன.
என் சக இந்தியர்களே,
இன்று நான் அவற்றை நினைவுகூர்கிறேன்…
இந்த நீண்ட பதிவைப் படிக்க உங்களுக்கு நேரமிருக்குமா என்று எனக்குத் தெரியாது.
அது பிப்ரவரி 28, 2002 ஆம் ஆண்டு, கோத்ரா ரயில் கர சேவகர்கள் எரிக்கப்பட்டதற்காக பழிவாங்கும் நோக்கில் ஆயிரக் கணக்கான குண்டர்கள் கைகளில் வாள்களுடன் குல்பர்க் சொசைட்டி குடியிருப்பை சூழ்ந்துகொண்டார்கள். அக்தரையும் அவருடைய மகனையும் அவர்களுடைய வீட்டு முற்றத்தில் கழுத்தை வெட்டிக் கொன்றார்கள். மக்கள் என் அப்பாவின் வீட்டை நோக்கி ஓடிவந்தார்கள், காரணம் எங்கள் வீடு குடியிருப்பின் நடுவே இருந்ததுதான்.
குண்டர்கள் வீடுகளை எரிக்க ஆரம்பித்தனர், எங்கள் அண்டை வீடுகளில் இருந்த பெண்களை இழுத்து, அவர்களிடம் மிக மோசமாக நடந்துகொண்டார்கள். தங்களுடைய மகள்களை இறுகப் பற்றிக்கொண்டார்கள் தாயானவர்கள். மேலே பட்ட கெரசின் பற்றி எரிய அலறலோடு சில சிறுவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். இதே இடத்தில் கிரிக்கெட் விளையாடி, உணவு உண்டு களித்தவர்கள் அவர்கள். அம்மி (என்னுடைய தாயார் ஜாக்கிய நஸிம் ஜஃப்ரி) சில பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் இரண்டாவது மாடியில் ஒளிந்துகொண்டிருந்தார்கள்.
நாலா புறத்திலிருந்தும் எங்கள் வீட்டை நோக்கி கற்கள் வீசப்பட்டுக்கொண்டிருந்தன. எங்கள் அண்டை வீடுகளில் இருந்த பெரும்பாலான முஸ்லீம்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள், காயங்களோடு அப்படியே கிடந்தார்கள், சில எங்கள் வீட்டில் அடைக்கலமாயினர். எங்கள் வீடு இப்போது குண்டர்களால் சூழப்பட்டுவிட்டது. நெருப்பு பந்துகளை வீச ஆரம்பித்தனர். போதாதென்று வீட்டுக்குள்ளிருக்கும் கேஸ் சிலிண்டர்களை வெளியே இழுத்து வரத் தொடங்கினர்.
அப்பா (அஸான் ஜஃப்ரி) எங்கள் வீட்டு வாசலுக்குச் சென்று குழந்தைகள், பெண்களை மட்டுமாவது விட்டுவிடுங்கள் என்று குண்டர்களிடம் கெஞ்சினார். அந்த நேரத்தில்தான் அவர் இழுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும், இனி உயிரோடு திரும்பப் போவதில்லை என அவர் நினைத்திருப்பார்.
அதே நேரத்தில் அம்மி, ஒரு விஷயத்தை கவனித்தார், லீலா பென், வீட்டில் உதவியாக இருந்த பெண். அவர் ஏன் தங்களுடன் மடிய வேண்டும் என்று நினைத்த அம்மி, அவரை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார், குண்டர்களைப் பார்த்து கை எடுத்து கும்பிட்டு “இவள் இந்து பெண், இவளை போக விடுங்கள்” என்று கேட்டார். லீலா பென்னுடன் நான்கு பெண்களை அனுப்பிவைத்தார். அந்த நேரத்தில் குண்டர் வீசிய கல் ஒன்று அம்மியின் நெற்றியில் பட்டது. அம்மி அறைக்குள் சென்று இரும்புக் கதவைப் பூட்டிக் கொண்டார்.
இரண்டாம் தளத்தில் சிலர் இருப்பதை அறிந்த குண்டர்கள், தீ வைத்து கொளுத்தினர், அங்கிருந்து தப்பிக்க ஒரு வழியும் இல்லாமல் போனது.
அம்மியைப் போல நல்லிதயம் படைத்தோர் இந்தியாவில் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அம்மி அதில் ஒருவர்.
வெறுப்பை விதைத்து அதிகாரத்தைப் பிடித்திருக்கும் தற்போதைய அரசு தலைமையின், வெற்றிகரமான பரிசோதனை முயற்சி இது.
படுகொலை தாக்குதலில் கொல்லப்பட்ட இஸான் ஜஃப்ரியின் மகள் நிஷ்ரின் பிப்ரவரி 27, 2016ல் எழுதிய முகநூல் பதிவின் தமிழாக்கம்.
முகப்புப் படம்: படுகொலை தாக்குதலின் போது ஜஃப்ரியின் வீட்டில் சிதைக்கப்பட்ட நூலகம்.
One thought on ““காந்தி, நேரு, கார்ல் மார்க்ஸ், தஸ்தாவெஸ்கி, ஆஸ்கர் ஒய்ல்டு சாட்சியாக என் அப்பா கொல்லப்பட்டார்”: இஸான் ஜாஃப்ரி கொலையான அந்த நாள்”