
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பொருளாதார வளர்ச்சியில் இட ஒதுக்கீட்டுக்கு சிறப்பான இடம் இருக்கிறது. இது வரையிலும் அவர்களுக்கு கிடைக்காத சம வாய்ப்பு என்ற நோக்கத்தில் இந்திய அரசியல் அமைப்பும் இதனை உறுதி செய்து, பத்தாண்டுக்கு ஒருமுறை நீட்டித்து வருகிறது. கிட்டத்தட்ட ஆறு பத்தாண்டுகள் கடந்து விட்டன. இத்தனை ஆண்டுகளில் தலித்துகள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை மறு ஆய்வு செய்திருக்க வேண்டும். அப்படியொரு ஆரோக்கியமான சூழல் இந்திய ஜனநாயக அரசியல் மன்றத்திலும், மக்கள் மனங்களிலும் உருவாவாகாமலேயே இடஒதுக்கீட்டுக்கான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் இப்போதைய இட ஒதுக்கீட்டு முறை நீடிக்க வேண்டுமா? என்கிற விவாதமும் தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது. அதாவது வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின் சமூக நீதி என்கிற அரசியல் அமைப்புத் தத்துவத்தை இழந்து விட்டதோ ! எனவும் சிந்திக்க வைக்கிறது.
2016 – புது தில்லிப் போராட்டம்
மார்ச் 10 ஆம் தேதி புது தில்லியில் பேராயர் நீதிநாதன் தலைமையில் நடந்த தலித் கிறிஸ்தவர் போராட்டம் கவனிக்கத்தக்கது. இந்திய திருச்சபைகளின் மன்றங்களும், தலித் கிறிஸ்தவர்களும், பேராயர்களும் ஒன்று கூடி தலித் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டு குரலை எழுப்பினர். இதுபோல ஆயிரக்கணக்கான போராட்டங்களை இதே ஜந்தர்மந்தரில் நிகழ்த்தியிருக்கிறார்கள். படேல், ஜாட் மக்களின் ஆக்ரோஷமான உணர்வை இப்போராட்டம் பிரதிபலிக்கவில்லை என்றாலும் வழக்கம்போல சமாதானத்திற்கான அடையாளத்தைக் கொண்டிருந்தது.
தலித் கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாததால் கல்வி, வேலை வாய்ப்புகள் எவ்வாறு பறிபோயின? தனித் தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் உரிமைகள் ஏன் மறுக்கப்பட்டன? தங்கள் மீது இழைக்கப்படுகிற சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை (1989) பயன்படுத்த முடியாமல் போனதுக்கான பின்னணி எது? குறிப்பாக, அரசியல் சட்ட விதிகள் 330, 332, 334, 335, 338, 341, 366 (24) -ன்படி அனைத்துத் துறைகளிலும் பெற வேண்டிய உரிமைகள் ஏன் கிடைக்கவில்லை? தலித்துகளைக் கணிசமாகக் கொண்ட சீக்கியர்களும் (1956), பவுத்தர்களும் (1990) கடந்த காலங்களில் தலித் இட ஒதுக்கீட்டைப் பெற்று விட்டார்கள். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மதம் மாறிய கிறிஸ்தவப் பழங்குடியினரும் இப்பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த 65 ஆண்டுகாலமாக தலித் கிறிஸ்தவர்கள் மட்டும் காரணமே இல்லாமல் வஞ்சிக்கப்படுகின்றனர் என இப்போராட்டக் குழு கவலை தெரிவிக்கின்றது.
குடியரசுத் தலைவரின் பிரச்சனைக்குரிய ஆணை
“கிறிஸ்தவ மதத்தில் உள்ள தலித்துகள் எவ்வாறு சாதிய – தீண்டாமைக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்” என்பதை மிகக் கூர்மையாக டாக்டர் அம்பேத்கர் சுட்டிக் காட்டியுள்ளார் (அம்பேத்கர் நூல் தொகுதி : 5, பக்கம் : 470). 1948 -ல் அவர் அரசியல் சட்ட மறுவடிவை கொண்டு வரும்போதே இந்த பிரச்சனைகளை உணர்ந்து இதற்கான தீர்வுகளை அந்தந்த இடங்களில் முன்வைத்தார். அவரின் அரிய முயற்சியை மக்களவையில் கே.எம். முன்ஷி மறுத்து, நிராகரித்த பிறகும் 1950 -ல் வெளியான “குடியரசுத் தலைவரின் இந்திய அரசியல் சட்ட ஆணை – 1950′ (10.8.1950 பத்தி: 3, எஸ்.ஆர்.ஓ. 385 சி.ஓ. 19) இன்று வரை தலித் கிறிஸ்தவர்களின் முன்னேற்றத்துக்கு தடையாகத் தொடர்கிறது.
ஒடுக்கப்பட்ட தலித்துகள் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டால் அவர்களுக்கு இந்த சமூகத்தில் எந்த பிரச்சனையும் கிடையாது என்பதோ, கிறிஸ்தவத்தில் சாதி இல்லை என்பதோ நம்பக்கூடியதல்ல. இன்னமும் தலித் கிறிஸ்தவர்கள் சமூகத்திலும், திருச்சபைகளிலும் பிரச்சனைகளை எதிர்கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் இது மட்டுமல்ல இப்போதைய பிரச்சனை. அன்றைய குடியரசுத் தலைவரின் ஆணையை மாற்றி புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்குப் பிரிவு 341 (1), 341 (2) -ன்படி மக்களவை – மாநிலங்களவைகளில் மனம் திறந்து விவாதிக்க இன்று வரையிலும் வாய்ப்புக் கிடைக்காததும் ஒரு முக்கிய காரணம்.
கடந்த 65 ஆண்டு போராட்டத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வழிசெய்யும் ஏராளமான ஆதாரங்கள் நாடாளுமன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் குவிந்து கிடக்கின்றன. இந்த வழக்குக்காக திருச்சபைகளால் திரட்டப்பட்ட ஆவணங்களுக்கு நிகரான ஆதாராங்கள் இதுவரை வேறெந்த வழக்குக்கும் திரட்டப்பட்டதில்லை என்கிறார் நீதியரசர் ராஜேந்தர் சச்சார். தலித் கிறிஸ்தவருக்கு இன்னின்ன காரணங்களுக்காக இட ஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று கூட அரசு சொல்லாம். ஆனால் அப்படியொரு அரசியல் துணிச்சல் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பது தான் பரிதாபம். தலித் கிறித்துவர்களை பட்டியல் இனத்தவராக அறிவிக்க வேண்டும் என்று போராடிய பலர் இன்று உயிரோடு இல்லை. எனினும் தலித் கிறிஸ்தவர்களின் போராட்டங்கள் எகிப்தின் விடுதலைப்பயணத்தைப்போல இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இடஒதுக்கீடு பெற ஓயாத போராட்டம்
இப்போராட்டத்துக்கு பல ஆணையங்களின் அறிக்கைகள் முக்கியமானவை. மண்டல் ஆணையம், காகா கலேல்கர் ஆணையம், சிறுபான்மையினர் நல ஆணைய அறிக்கை 1981-1982, ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், கேரளாவின் பிற்படுத்தப்பட்டோர் குறித்த குமாரபிள்ளை ஆணையம், 1969 -ல் தயாரிக்கப்பட்ட இளைய பெருமாள் குழு அறிக்கை, சிதம்பரம் ஆணையம் போன்ற பல உயர்மட்டக் குழுக்கள் ஏகோபித்தக் குரலில் தலித் கிறிஸ்தவர்களின் பிரச்சனைகளை விவாதித்து, இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்துள்ளன.
1990 -ல் அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பிறகு இப்போராட்டம் வேகமாக வலுவடைந்தது. 1992 இல் “தேசிய எஸ்.சி / எஸ்.டி. நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டமைப்பின்” சார்பில் 200 உறுப்பினர்கள் டில்லியில் ஒன்று கூடி விவாதித்தார்கள். தங்களின் முன் வரைவை அரசுக்கும் பரிந்துரையாகக் கொடுத்தார்கள். இதை அடிப்படையாகக் கொண்டு 1996 -ல் தேசிய எஸ்.சி / எஸ்.டி. ஆணையம் தனது சட்டத் திருத்த வரைவில் (12016/30/90 SCR (R cell 23.8.1996) தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியும் பரிந்துரை செய்துள்ளது.
சச்சார் கமிட்டி பரிந்துரையின்படி 2009 -ல் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் தலித் கிறிஸ்தவர் – இஸ்லாமியர்களுக்கான ஒதுக்கீடு வழங்க தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டன. தீண்டாமை வன்கொடுமை வழக்கில் வெளியான உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் தலித் கிறிஸ்தவர்கள் படுகிற துயரங்களை ஆங்காங்கே கோடிட்டுக் காட்டியுள்ளன.
வழக்கம் போல அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீட்டு கோரிக்கைகளை 2011 தேர்தல் வரையிலும் வெளியிட்டிருக்கின்றன. அது இந்த தேர்தலிலும் கூட தொடரலாம்.
இவ்வளவு நிகழ்ந்தும் இடஒதுக்கீடு வழங்குவதில் பிரச்சனை எங்கு இருக்கிறது என உச்ச நீதிமன்றத்தை நாடினால், மத்திய அரசை கை காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் முறையிட்டால், உச்ச நீதிமன்றத்தின் குழு அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம் என்கிறது. 23.8.2005 -ல் இந்திய திருச்சபைகளே ஆவலோடு எதிர்பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி லகோத்தி தலைமையிலான இறுதிக் கட்ட விவாதமும் கை கூடவில்லை.
தோழமை ஆதரவில் பின்னடைவு
ஒரு பக்கம் அரசை நோக்கி இப்போராட்டம் நடந்தாலும் கிறிஸ்தவரல்லாத பிற தலித்துகளின் ஆதரவும், பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களின் ஆதரவும் பக்க பலமாக இல்லை. அதற்கு காரணம் கிறிஸ்தவரல்லாத தலித்துகளுக்காக இந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் என்ன செய்தன? அவர்களுடைய கல்வி நிறுவனங்களில் படிக்க மட்டுமே வாய்ப்பு தருகிறார்கள். இருக்கிற வேலைவாய்ப்புகளை பெரும்பான்மையாக தலித் கிறிஸ்தவர்களே எடுத்துக் கொள்கின்றனர். சிலர் மூன்று தலைமுறையாக பதவி சுகம் அனுபவிக்கின்றனர். இவர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் கிறிஸ்தவரல்லாத தலித்துகளுக்கு கிடைப்பதில்லை. அதே சமயம் ஒட்டு மொத்த தலித்துகளுக்கே 18% ஒதுக்கீடு தான் இருக்கிறது. இதில் இவர்களையும் சேர்த்து விட்டால் நாங்கள் எங்கே போவது என்கிற விமர்சனங்களும் இன்னொரு பக்கம் இருக்கிறது.
இதில் ஓரளவு உண்மை இருக்கிறது. மறுப்பதற்கில்லை. ஆனால் இதுவே முழு உண்மையும் கிடையாது. கிறிஸ்தவ திருச்சபைகளில் 70 % -க்கும் மேலாக தலித் கிறிஸ்தவர்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கே அங்கு முன்னுரிமை கிடைப்பதில்லை என்கிறார் சமூகவியலாளர் திபங்கர் குப்தா. எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் சாதிக்கிறிஸ்தவர்களை மீறி ஒரு தலித் பேராயராக முடியவில்லை. திருநெல்வேலி, தூத்துக்குடி பேராயங்களில் ஆயராக வருவதற்கு வாய்ப்பு குறைவு. எல்லா திருச்சபைகளும், நிறுவனங்களும் சாதிக்கிறிஸ்தவர்களின் தலைமை பீடத்தில் தான் இருக்கிறது. விவரமான தலித் கிறிஸ்தவர்களை போராட்டக்காரர்களாகவும், என்.ஜி.ஓ -வாகவும் மட்டுமே திருச்சபை பார்க்கிறது. சிவகங்கை மறைமாவட்டத்தில் இன்றளவும் தொடரும் போராட்டங்களுக்கு இவையெல்லாம் தான் காரணம்.
மாற்றுக் கோரிக்கை தேவை
தங்கள் மீதான சாதி – தீண்டாமை பாகுபாட்டை உலக அரங்கில் முன்வைத்து, அதற்கு தீர்வு காண்பதில் தலித் கிறிஸ்தவர்கள் வல்லவர்கள். நிறவெறியோடு, சாதியப்பிரச்சனைகளை 2001 -ல் விவாதித்த டர்பன் மாநாடும் இவர்களால் தான் சாத்தியமானது. அப்படிப்பட்ட தலித் கிறிஸ்தவர்களால் குடியரசுத்தலைவர் ஆணைக்கு எதிரான ஒரே கோரிக்கையை, ஒரே யுக்தியோடு பல ஆண்டுகளாக நடத்தும் இப்போராட்டம் வெற்றியைத் தருமா? என்பதையும் சிந்திக்க வேண்டும். மாறி வரும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, சாத்தியமான வேறு சில தீர்வுகளை எட்ட வேண்டும்.
இடஒதுக்கீடுக்காக பல இனக்குழுக்கள் போராடி வருகின்றன. குறுகிய காலத்தில் போராடி வெற்றிக்காக காத்திருக்கிற ஜாட் மக்களைப்போல தலித் கிறிஸ்தவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி) சேர்க்கலாம். இது வரையிலும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த தலித் கிறிஸ்தவர்களுக்கு இதனால் பெரிய இழப்புகளோ – முரண்பாடுகளோ ஏற்பட்டு விடாது. வேண்டுமானால் கணக்கெடுப்புக்கு ஏற்றார்போல இட ஒதுக்கீட்டின் விகிதாசாரத்தை கூட்டலாம். பெரும்பாண்மையாக இருக்கிற தலித் கிறிஸ்தவர்களுக்கு 50 % மற்றும் கிறிஸ்தவரல்லாத தலித்துகளுக்கு 20% ஒதுக்கீட்டை அனைத்து கிறிஸ்தவ நிறுவனங்களிலும் கட்டாயமாக்க வேண்டும். குறிப்பாக, தலித் கிறிஸ்தவர்கள் சந்திக்கிற சாதிய வன்கொடுமைகளை சட்ட ரீதியாக அணுகுவதற்கு எஸ்.சி /எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை (1989) பயன்படுத்திக் கொள்ள சிறப்பு அனுமதியை உயர்நீதி மன்றத்தில் கோரலாம். இது தான் இப்போதைய சாத்தியமான, மாற்றுக் கோரிக்கையாக இருக்க முடியும்.
அன்புசெல்வம், எழுத்தாளர்; ஆய்வாளர்.
தொடர்புக்கு : anbuselvam6@gmail.com
தங்களது கருத்துகளை ஆமோதிக்கிறேன்
LikeLike