எழுதியவர்: Maneesh Chhibber
கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரேஒரு தலித்/பழங்குடி நீதிபதிகூட உச்சநீதிமன்றத்தில் நியமனம் பெறவில்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது.
2010 -ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் ஓய்வுபெற்றதற்குப் பிறகு, தலித் வகுப்பைச் சேர்ந்த எவரும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. இதேபோல்தான் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களும் நியமிக்கப்படவில்லை. இந்திய மக்கள் தொகையில் 16 சதவீத மக்கள் தொகையுள்ள தலித்துகளில் ஒருவர்கூட நீதிபதியாக நியமனம் பெறவில்லை.
கடந்த 10 வருடங்களில் உச்சநீதிமன்றத்திற்கு, மூன்று பெண் நீதிபதிகள் மட்டுமே கொலீஜியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அதில் நீதிபதி ஞான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் இப்போது ஓய்வு பெற்றுவிட்டனர். தமிழகத்தை சேர்ந்த ஆர்.பானுமதி மட்டுமே பெண் நீதிபதி என்ற வகையில் பணியில் உள்ளார்.
இம்மாத தொடக்கத்தில், மத்தியப் பிரதேசம், அலகாபாத் மற்றும் கேரள மாநிலங்களின் தலைமை நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு தரப்பட்டனர். ஆனால், இதில் சீனியாரிட்டி மிஸ் ஆகிவிட்டதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. ஏனெனில், மேற்கண்ட மூன்று நீதிபதிகளை விடவும், மணிப்பூர் தலைமை நீதிபதி மொகப்பத்ரா, மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா, கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் ஆகியோர் சீனியர்கள். இருப்பினும் இவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சீனியாரிட்டி, அவர்கள் எப்போது நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே கணக்கிடப்படுகிறது; இந்தியா முழுமைக்கும் இதுதான் நெறிமுறை. மணிப்பூர் நீதிபதி எல். கே. மகோபாத்ரா, 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி டி. எச். வகேலா செப்டம்பர் 17ஆம் தேதி 1999ஆம் ஆண்டு நியமனம் பெற்றார். வரும் ஆகஸ்டு 10ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அதேபோல் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் பிப்ரவரி 21-ஆம் தேதி 2000-ஆம் ஆண்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் டிசம்பர் 4, 2017-ஆம் ஆண்டு ஓய்வு பெறுகிறார். மஞ்சுளாவும் வகேலாவும் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்ற மூவரைக் காட்டிலும் சீனியர்கள்.
நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் முறையில் என்ன மாதிரியான சட்ட திட்டங்கள், நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது குறித்து தெளிவு இல்லை.
தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில், எட்டு உயர்நீதிமன்றங்களைச் சேர்ந்த நீதிபதிகள் நியமனம் பெறவில்லை. மாறாக சில உயர்நீதிமன்றங்களில் இருந்து அதிகளவில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 160 பேர் நீதிபதிகளாக உள்ளனர். இங்கிருந்து நீதிபதி ஆர். கே. அகர்வால், நீதிபதி அசோக் பூஷன் ஆகியோர் மட்டுமே உச்சநீதிமன்ற நியமனம் பெற்றுள்ளனர். ஆனால் 94 நீதிபதிகள் உள்ள மும்பை உயர்நீதிமன்றத்தில் ஐந்து பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் உள்ள நிலையில், மூவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர்.
சத்தீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, சிக்கிம் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களிலிலிருந்து எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இந்த சூழலில் உச்சநீதிமன்ற தலைமை நீதியாக உள்ள தாக்கூர் ஜனவர் 3, 2017ஆம் ஆண்டு ஓய்வு பெறுகிறார். இவருக்கு அடுத்து நீதிபதி ஜெகதீஷ் சிங் கேகர் இந்தப் பதவிக்கு வரவிருப்பதும் உறுதியாகியுள்ளது. அவருக்குப் பின் நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சரத் பொம்டே, நீதிபதி என்.வி.ராமன், நீதிபதி யூ. யூ. லலித், நீதிபதி டி. ஒய். சந்தரசவுத் ஆகியோர் அடுத்தடுத்து வரிசையாக நியமிக்கப்பட உள்ளனர்.
நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப் படவேண்டும் என நாடாளுமன்ற விவாதங்களில் கருத்து எழுந்ததுண்டு. ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

“இது துரதிருஷ்டமான நிலைமைதான். நான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பி. டி. தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க பரிந்துரைத்தேன். அது சர்ச்சையால் முடங்கியது. அதற்குப் பிறகு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை பரிந்துரைத்தார்களா என எனக்குத் தெரியாது. ஒடுக்கப்பட்ட பிரிவுகளிலிருந்து பிரதிநிதித்துவம் நிச்சயம் வேண்டும்” என்கிறார் நீதிபதி பாலகிருஷ்ணன்.