அரசியலிருந்து விலகுவதாக அறிவித்த தமிழருவி மணியன், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். இதில் “விஜயகாந்த் பின்னால் சென்ற கம்யூனிஸ்டுகளிடம் எங்கே இருக்கிறார்கள் மார்க்ஸும் எங்கெல்சும்?” என்று கம்யூனிஸ்டுகள் குறித்து காட்டமாக பேசினார் தமிழருவி மணியன். மணியனின் இந்தப் பேச்சுக்கு பேரா. அருணன் அளித்திருக்கும் பதில்:
“நேற்று ஒரு டி வி பேட்டியில் “எம் ஜி ஆர், விஜயகாந்த் என்று நடிகர்கள் பின்னால் சென்ற கம்யூனிஸ்டுகளிடம் எங்கே இருக்கிறார்கள் மார்க்ஸும் எங்கெல்சும் ?” என்று கேலியாக கேட்டார் தமிழருவிமணியன். கடந்த மக்களவைத் தேர்தலில் பா ஜ க விற்கு அவர் ஆள் பிடித்துவிட்டதை நியாயப்படுத்தவும் செய்தார்! அரசியலில் நடிகர்கள் இறங்குவதை தாங்க முடியாத அவரால் பா ஜ க வின் மதவெறி அரசியலைத் தாங்கி கொள்ள முடிகிறது! இங்குதான் சில அறிவுஜீவிகளின் மேட்டிமைத்தனம் வெளிப்படுகிறது. இதிலே இலங்கை தமிழர்களின் படுகொலைக்கு பழிவாங்கவே பா ஜ கவுக்கு ஆதரவு என்று சப்பைக்கட்டு வேறு. அது விஷயத்தில் காங்கிரசுக்கும் பாஜக வுக்கும் வேறுபாடு கிடையாது என்கிற அடிப்படை புரிதல்கூட இல்லாமல்தான் இருந்திருக்கிறார். இத்தகையவர்களது மேட்டிமைத்தனத்தின் இன்னொறு கூறு ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு செல்வது. அன்று பா ஜக ஆதரவு அரசியல் , இன்று அரசியலிலிருந்தே விலகல்! இப்படி யெல்லாம் நிதானம் இழக்கமாட்டார்கள் கம்யூனிஸ்டுகள்.காரணம் அவர்களிடம் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருக்கிறார்கள். அதனால்தான் இந்தத் தேர்தலில் பாஜ கவை அவர்களால் தனிமைப்படுத்த முடிந்தது.”