புகையிலை ஒழிப்பு சட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

புகையிலை ஒழிப்பு சட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். புகையிலை ஒழிப்பு நாளில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“உலகில் மிக அதிகமானோரைக் கொல்லும் தீமை புகையிலைதான். சிகரெட், பீடி, குட்கா, மூக்குப் பொடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்களால் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் கொலை செய்யப்படுகிறார்கள். புகையிலையால் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு, தோல்நோய் எனப் பல கேடுகள் நேருகின்றன.  இத்தீமையால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம்  பேர்  இறக்கின்றனர்.

மத்திய சுகாதார அமைச்சராக இருந்த 2004 – 2009 காலகட்டத்தில் புகையிலை ஒழிப்பில் உலகிற்கே வழிகாட்டியாக இந்தியா திகழ்ந்தது. புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படம் வெளியிட மேற்கொண்ட நடவடிக்கைகள் இப்போது முழுஅளவில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அதே போன்று, பொது இடங்களில் புகைக்கத் தடை, குட்காவுக்குத் தடை, புகையிலைப் பொருள் விளம்பரங்களுக்குத் தடை, சிறுவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்கத்தடை ஆகியவையும் நடைமுறையில் உள்ளன.
ஆனால், இந்த சட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியமாக உள்ளது. இந்த அவல நிலை மாற வேண்டும். புகையிலைப் பொருட்களை கட்டுப்படுத்தும் சட்டங்களை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். உலக சுகாதார நிறுவனத்தால் மே 31 உலக புகையிலை ஒழிப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் தமிழக அரசாங்கம் ‘‘புகையிலை இல்லா தமிழ்நாட்டை’’  உருவாக்கி சாதனைப் படைக்க வேண்டும்.
சிகரெட், குட்கா, பீடி உள்ளிட்ட அனைத்து புகையிலைப் பொருட்களின் உறைகள் மீதும், அவற்றின் கொடுமையான கேடுகளை விளக்கும் எச்சரிக்கைப் படங்களை ஒருபக்கத்தில் 40 % இடத்தில் வெளியிட வேண்டும் என்கிற விதி 2009 ஆம் ஆண்டு மே 31 புகையிலை ஒழிப்பு நாள் முதல் செயல்பாட்டுக்கு வந்தது. கடும் அரசியல் எதிர்ப்புகளையும், பலவிதமான நீதிமன்ற வழக்குகளையும், புகையிலைத் தயாரிப்பாளர்களின் போராட்டங்களையும் சமாளித்து இதனைச் சட்டமாக்கினேன். அதன் தொடர்ச்சியாக, ‘‘புகையிலை பொருட்கள் மீது 85% இடத்தில் எச்சரிக்கை படம் 1 ஏப்ரல் 2015 முதல் இடம்பெற வேண்டும்’’ என்கிற அரசாணை 15.10.2014 அன்று வெளியிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவேண்டிய இந்த ஆணை, மத்திய அரசின் பின்வாங்கலால் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தான் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதன் பிறகும் எச்சரிக்கைப் படம் வெளியிடப்படாததால், நீதிமன்ற உத்தரவுப் படி 2016 மே 31 முதல் அனைத்து புகையிலைப் பொருட்கள் உறைகள் மீதும் 85% எச்சரிக்கைப் படம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தமிழக அரசு முழுஅளவில் செயல்படுத்த வேண்டும்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் – உணவுப்பொருட்களில் புகையிலை இருக்கக் கூடாது என்கிற திருத்தம் நான் மத்திய அமைச்சராக இருந்த போது தான் கொண்டுவரப்பட்டது. அதனைப் பின்பற்றி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் போதைப் பாக்கை தடை செய்துள்ளன. ஆனாலும், தடையை மீறி போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் தடையின்றி விற்கப்படுகின்றன. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குட்கா – பான் மசாலா விற்பனையை முழுவதுமாக தடுக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகள், உணவு விடுதிகள், தனியார் அலுவலங்கள், தொழிற்சாலைகள் என பொதுமக்கள் வீட்டிற்கு வெளியே செல்லும் எல்லா இடங்களிலும் புகைபிடிப்பது சட்டப்படி குற்றம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 2&ஆம் தேதி காந்தி பிறந்த நாள் முதல் இந்த விதி செயல்பாட்டிற்கு வந்தது.  இதனை தமிழக அரசு முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். 18 வயதுக்கு கீழான சிறுவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டருக்குள் அப்பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் சர்வ சாதாரணமாக புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இச்சட்டவிரோத புகையிலைப் பொருள் விற்பனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பீடி சிகரெட் விற்கும் கடைகளில் வைக்கப்படும் விளம்பரங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் எல்லா சில்லரை விற்பனைக் கடைகளிலும் இப்போதும் சிகரெட் விளம்பரங்கள் உள்ளன. இது அப்பட்டமான சட்ட மீறல் ஆகும். அனைத்து விதமான புகையிலைப் பொருள் விளம்பரங்களையும் தடுக்க வேண்டும். புகையிலையின் கேடுகளில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்குடன் 2015 ஜனவரி மாதம் இந்திய சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட புகையிலை சட்டத்திருத்த மசோதாவை (COTPA AMENDMENT BILL  2015) உடனடியாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி சட்டமாக நிறைவேற்ற வேண்டும். இதனை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
அனைத்து புகையிலைப் பொருட்கள் மீது மிக அதிக வரிவிதிக்க வேண்டும், அதனை ஆண்டுதோரும் அதிகமாக்க வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை ஆகும். எனவே, தமிழக அரசின் புதிய நிதிநிலை அறிக்கையில், அனைத்து புகையிலைப் பொருட்கள் மீது 100% மதிப்புக்கூட்டு வரி விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.உலகமே புகையிலை ஒழிப்பு நாளைக் கடைபிடிக்கும் நேரத்தில், சட்டம் இருந்தும் செயல்படுத்தப்படாத நிலையில் தமிழ்நாடு இருப்பது ஓர் அவமானம் ஆகும். தமிழக அரசுக்கு சட்டத்தை செயல்படுத்தும் திறமை இல்லை என்கிற அவப்பெயரைப் போக்கும் வகையில் மேற்கண்ட புகையிலைக் கட்டுப்பாட்டு சட்ட விதிகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள், சிறுவர்களின் எதிர்காலத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.