“கேரள முதல்வராகப் பொறுப்பேற்ற பின் டெல்லிக்குச் சென்ற பினராயி விஜயனிடம், செய்தியாளர்கள் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு குறித்துக் கேட்ட போது இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் “தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டுமென்ற முந்தைய கேரள அரசின் கொள்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. முல்லைப் பெரியாறு அணை வலுவுடன் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அணையைப் பார்வையிட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்திய பிறகே அறிக்கை அளித்துள்ளனர். அந்தக் குழுவின் கருத்தை கேரள அரசு ஏற்கிறது. அணை விவகாரத்தில் எவ்வித முரண்பாடுகளையும் கடைப்பிடிக்க நாங்கள் விரும்பவில்லை. எந்தப் பிரச்சினை ஆனாலும் தமிழக அரசுடன் நேரடியாகவே பேசித் தீர்வு காண்போம்” என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது;
அவருடைய கருத்து வரவேற்கத்தக்கது. இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் கடிதங்கள் எழுதியவன் என்ற முறையிலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், பிரதமராக இருந்த திரு. மன்மோகன் சிங் அவர்களின் ஆலோசனைப்படியும் கேரள முதல்வரோடு பேச்சுவார்த்தைகள் நடத்தியவன் என்ற முறையிலும், முல்லைப் பெரியாறு பிரச்சினையை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றவன் என்ற முறையிலும், பிரச்சினையை நல்ல முடிவுக்குக் கொண்டு வரத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டவன் என்ற முறையிலும் இதை நான் கூறுகிறேன்”.