“எழுத்தாளர்கள் தங்கள் நூல்களின் அறிவிப்புப் பலகைகளாகத் தாங்களே மாற வேண்டியிருப்பது ஓர் அவலமான நிலை”: பெருந்தேவி

பெருந்தேவி

புத்தகக் கண்காட்சியை ஒட்டி எழுத்தாளர்கள் தங்கள் புதுநூல்கள் வருகையை ஒரு தகவலாக மட்டும் அறிவித்து நில்லாமல் பலமுறை அந்த அறிவிப்பை விதவிதமாக வலைத்தளங்களில் சுற்றுக்கு விடுவதைப் பார்க்கமுடிகிறது.

பதிப்பாளர்கள் தங்கள் பிரசுர நூல்கள் குறித்தோ வாசகர்கள் தங்கள் பிரியமான எழுத்துகள் குறித்தோ அறிவிப்பதும் பகிர்வதும் நடைமுறை நோக்கில் புரிந்துகொள்ளமுடிகிறது. அவை நடக்கவும் வேண்டும்.

ஆனால் எழுத்தாளர்கள் தங்கள் நூல்களின் தொடர் அறிவிப்புப் பலகைகளாகத் தாங்களே மாற வேண்டியிருப்பது நிச்சயமாக ஓர் அவலமான நிலை.

இங்கே என் விமர்சனம் எழுத்தாளர்களைக் குறித்து அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் இதைச் செய்யும்போது எந்த நுண்ணுணர்வுள்ள எழுத்தாளரும் கொஞ்சமேனும் மனச்சங்கடம் கொள்ளாமல் இருக்கமுடியாது என்பது தெரியும்.

இங்கே தமிழ் இலக்கியச்சூழலின் கிணற்றில் கல் போடுவது போன்ற நிலையைத்தான் இதற்கெல்லாம் காரணமாகச் சொல்லமுடியும்.

புதிய பார்வைகளோடு வரும் திறனாய்வுகளை விடுங்கள், சுவாரசியமான வாசிப்புகள்கூட வெகு அபூர்வமாகத்தான் நிகழ்கின்றன. தவிர ஒரு புறம் விமர்சன ரீதியாகக் கருத்துமாறுபாடுகளை வெளிப்படையாக எழுதினால் எழுத்தாளர் மனம் புண்படுமோ என்ற நாசுக்கு நாகரிக எண்ணம் பெருகியுள்ளது. விளைவாக நேரில் ஒன்று, மறைவில் ஒன்றென பேச்சு.

இதன் இன்னொரு புறம் குறுகிய குழு அடையாளங்களும் நட்பு சகோதர வலைப்பின்னல்களும் அவ்வவற்றுக்கான பட்டியல்களைப் பரப்புகின்றன.

சங்கப் பலகை கார்ட்டூன் வடிவெடுத்துப் பலகாலமாகிவிட்டது.

எழுத்தாளர்களின் பக்கத்திலிருந்து பார்த்தால், எந்தப் பெரிய அங்கீகாரமும் இல்லாத நிலையில் சின்னச் சின்னப் பாராட்டுகளுக்கே நன்றிகள் அறிவித்துத் தோரணம் கட்டவேண்டியுள்ளது. ஒரு லைக்குக்கு பதிலுக்கு லைக், ஒரு பாராட்டுக்கு மறு பாராட்டு என்று மொய்க்கணக்கில் பெயரைப் பதிதல் இலக்கியப் பண்பாட்டுச் சடங்காகிவிட்டது.

உச்சபச்சமாக தாங்களே அரங்கத்தை புக் செய்து ஆவி எழுப்புதல் கூட்டங்கள் நடத்தும் அளவுக்கு போய்விடுகிறார்கள். அந்த அளவுக்கு நூல் வாசிப்பு / அங்கீகார வறட்சி.

ஆனால் சிறியதோ பெரியதோ எழுத்தாளரின் எந்தவித அங்கீகாரத்துக்கான விழைவுப் பாதையும் உண்மையிலேயே முடிவிலி. எந்தத் திருப்தியும் இதில் ஏற்படாது என்பதுதான் நிஜம்.

நம் எழுத்தைப் பற்றி நூறு பேர் எழுதினால் ஆயிரமில்லையே என்று தோன்றும்; லட்சம் பேர் எழுதினாலும் லட்சத்தி ஒன்றைத்தான் மனம் நாடும். கூட்டங்கள், வெளிநாட்டுப்பயணங்கள், விருதுகள்….எதற்கு ஆசைகொண்டாலும் மனத் திருப்தியின் சாத்தியம் மிகக்குறைவுதான்.

சாரு (அவர் மேல் ஆயிரம் விமர்சனம் இருக்கின்றன, அவை இருக்கட்டும்) பா. வெங்கடேசன் புத்தக வெளியீட்டு விழாவில் ஒன்றைக் கூறினார்: ஓர் எழுத்தாளர் புத்தகமெழுதிவிட்டுக் காணாமல், எந்தத் தொடர்புமில்லாமல் போய்விடுகிற நிலைஇருக்கவேண்டும்
ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் ஒரு படம் ரிலீஸ் ஆனவுடன் தொடர்புகொள்ளமுடியாத படிக்கு மறைந்துவிடுவார்கள்.

ஆனால் எழுத்தாளர்கள் தங்கள் மொபைல் நம்பர்களை நூலில் கொடுக்கிறார்கள் என்பதுபோல. கொடுத்தாலும் கூட யாரும் பெரிதாகத் தொடர்புகொள்ளப்போவதில்லை என்பதுதான் அந்தக் குறிப்பின் உள்ளிடை யதார்த்தம்.

இந்த அவலமான சூழலைத்தான் ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு விதமாகக் கடக்கிறார்கள் … தங்கள் ஃப்ளக்ஸ் போர்டுகளாகத் தாங்களே மாறுதல் என்பதும் இதில் ஒருவிதம்தான். ‪#‎பாருங்கள்‬ ஆத்மாநாமுக்கு விகிபிடீயா பக்கம்கூட இல்லை. 😦

‪#‎கண்காட்சிக்காய்ச்சல்‬

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.