வா. மணிகண்டன்
‘எழுத்தாளன் அவனது புத்தகத்தைப் பற்றி அவனே பேசலாமா?’ என்று ஆரம்பித்திருக்கிறார்கள். யாரும் யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லைதான். பொதுவாக எழுதியிருக்கிறார்கள். வருடாவருடம் புத்தகக் கண்காட்சி சமயத்தில் இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். அதுவொரு சாங்கியம். ‘பேசினால் என்ன தப்பு?’ என்று பதில் எழுத வேண்டிய சாங்கியம் நம்முடையது.
தெரியாமல்தான் கேட்கிறேன். என்ன தவறு? எழுத்தாளன் தன் புத்தகத்தைப் பற்றி பேசுவதே அவல நிலை என்றால் எட்டுக் கோடி தமிழர்கள் வாழ்கிற சூழலில் வெறும் முந்நூறு பிரதிகளை விற்பதே பெரும்பாடு என்ற நிலையை என்ன சொல்வது? அற்புத நிலையா?
எவ்வளவுதான் ஸ்டார் எழுத்தாளராக இருந்தாலும் அவருடைய சிறுகதை, நாவல் போன்ற புனைவுகளை ஆயிரம் பிரதிகளுக்கு மேலாக அச்சடிக்க எந்தப் பதிப்பாளரும் தயாராக இல்லை. இது அவல நிலை இல்லையா?
புத்தகத்தைப் பற்றி எழுத்தாளன் பேச வேண்டாம் என்றால் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி எதற்கு? விமர்சனக் கூட்டங்கள் எதற்கு? கலந்துரையாடல்கள் எதற்கு? ‘அதில் எல்லாம் அடுத்தவர்கள்தானே புத்தகத்தை பற்றி பேசுகிறார்கள்’ என்பார்கள். வெங்காயம். அதுவுமொரு விளம்பர முயற்சிதான். ஆனால் தோல்வியைடந்த முயற்சி அது. இருந்தாலும் விடாப்பிடியாக பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் முக்கால்வாசி இலக்கியக் கூட்டங்கள் சொறிதல் கூட்டங்கள்தான். ஆள் மாற்றி ஆள் சொறிந்துவிடுவார்கள். கூட்டம் ஆரம்பித்த பாதி நேரத்தில் கூட்டம் கலைந்துவிடுகிறது. கடைசியாகப் பேச வருகிறவர் வெறும் இருக்கைகளைப் பார்த்துத்தான் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் சமூக ஊடகங்கள் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்துவதில் தவறு எதுவுமில்லை.
ரஜினிகாந்த் படம் முடித்தவுடன் வெளிநாட்டுக்கும் இமயமலைக்கும் சென்றுவிடுவதை எழுத்தாளர்களும் பின் தொடர வேண்டுமாம். அதன் பொருள் என்னவென்றால்- எதையாவது எழுதி முடித்தவுடன் எழுத்தாளன் அதைக் கண்டு கொள்ளவே கூடாதாம். எவ்வளவு பெரிய காமெடி? ரஜினியின் படம் தொடங்குவதிலிருந்தே விளம்பரம்தான். ட்விட்டர் அக்கவுண்ட் ஆரம்பிப்பதிலிருந்து படம் வெளியாகும் சமயத்தில் ஆனந்தவிகடனிலும் குமுதத்திலும் கவர் ஸ்டோரி வருது ஊடாக ‘அரசியலுக்குள் வரலாமான்னு பார்கிறேன்’ என்று டகால்ட்டி காட்டுவது வரை அத்தனையுமே படத்தின் வியாபாரத்தோடு சம்பந்தப்பட்டது. நூறு கோடி ரூபாய் முதலீடு செய்து படமெடுக்கும் ஷங்கரும், ராஜமெளலியும் கூட மெல்ல மெல்ல படம் பற்றிய செய்திகளைக் கசியச் செய்வார்கள். படம் பற்றிய எதிர்பார்ப்பு நெருப்புக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டேயிருப்பார்கள். ஆடியோ ரிலீஸ், பத்திரிக்கையாளர் சந்திப்பு, தொலைக்காட்சி விவாதங்கள் என்று அவர்களுக்குரிய அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் புரளும் சந்தை. அவர்களோடு தயவு செய்து தமிழக எழுத்தாளர்களின் சூழல்களை ஒப்பிட வேண்டியதில்லை. அவன் எழுத்தை அவனாவது பேசித்தான் தீர வேண்டியிருக்கிறது.
தனது எழுத்தைப் பற்றி பேசாத ஆமையோட்டு எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கி அச்சிட்டு கதறுகிற பதிப்பாளர்கள்தான் உண்மையிலேயே பாவம். பதிப்பாளர்களின் பெயரைச் சொல்லி அவர்களை தர்மசங்கடத்தில் சிக்கிவிட விரும்பவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையிலேயே அவர்களின் புலம்பல்களைக் கேட்டிருக்கிறேன். இருபதாயிரம், முப்பதாயிரம், ஐம்பதாயிரம் என்று செலவு செய்து புத்தகங்களை அச்சிடும் வரைக்கும் எழுத்தாளர்கள் பதிப்பாளர்களை அழைத்து ‘எப்போங்க புக் வரும்?’ என்று நூறு தடவையாவது ஃபோனில் தாளிப்பார்கள். வந்தவுடன் கண்டுகொள்ளவே மாட்டார்கள். தனது புத்தகத்தைப் பற்றித் தானே பேசினால் புனிதத்தன்மை போய்விடும் என்பார்கள். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்கும் விற்காத பிரதிகளை மூட்டையைக் கட்டி பதிப்பாளர்கள் தூக்கித் திரிய வேண்டும். அப்படித்தானே?
எழுத்தாளன் தன் எழுத்தைப் பற்றிப் பேசுவதில் எந்தத் தவறுமில்லை. நிறைய வாசகர்களுக்கு தனது புத்தகத்தைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. புதிய வாசகர்களை உருவாக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. இதையெல்லாம் செய்வதற்காக அரதப்பழசான மூடநம்பிக்கைகளை விட்டுத் தொலைக்கலாம். தூங்கி வழியும் சூழலை தூசி தட்டலாம். வாசகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு மாற்ற வேண்டிய பெரும் கடமை எழுதுகிறவனுக்கு இருக்கிறது. அதைத் துணிந்து செய்யலாம். புத்தகம் பற்றி பேசுவோம். அது குறித்தான உரையாடலை உருவாக்குவோம். இளைஞர்களும் புதியவர்களும் எழுத்துக்கள் பற்றிப் பேசட்டும். அதற்கான முன்னெடுப்புகளை எழுதுகிறவன் தொடங்கி வைக்கட்டுமே. அதிலென்ன தவறு இருக்கிறது?
வாசகன் கேள்வி கேட்பதற்கும் விமர்சனம் செய்வதற்கும் வெளிப்படையாக அலசுவதற்குமான வாய்ப்புகள் எந்த இலக்கியக் கூட்டத்திலும் உருவாக்கப்படுவதில்லை. ஆனால் அத்தகைய வாய்ப்புகளை சமூக ஊடகங்கள் உருவாக்கித் தந்திருக்கின்றன. அவனைப் பேசச் செய்வதற்கு கையைப் பிடித்து இழுக்கிற வேலை எழுத்தாளனுடையது இல்லையா? வருடத்திற்கு லட்சக்கணக்கான புத்தகங்கள் வெளியாகின்றன. அவற்றுக்குள் சிக்கி மூச்சு முட்டிக் கிடக்கும் எனது எழுத்தைக் கை தூக்கிவிடுவதில் எனக்கு கடமை இல்லையா? ‘நல்ல எழுத்து பிழைத்துக் கொள்ளும்…நல்ல எழுத்தை நான்கு பேர் வாசித்தாலும் கூட போதும்’ போன்ற மக்கிப் போன எண்ணங்களை களைய வேண்டியிருக்கிறது. வெளியில் வந்து பாருங்கள். உலகம் மிகப்பெரியதாக இருக்கிறது.
மேலும் படிக்க: http://www.nisaptham.com/2016/05/blog-post_98.html
வா.மணிகண்டன், எழுத்தாளர். இவருடைய சமீபத்திய நாவல் மூன்றாம் நதி.