”ஆதாரமற்ற, முதிர்ச்சியற்ற அவதூறுகளுக்கு எந்த கலைஞனும் மறுப்பு சொல்லிக்கொண்டிருக்க முடியாது”

Arun Mo

அருண்
அருண்

தமிழ்நாட்டில் நல்ல சினிமா, அல்லது நல்ல சினிமாவை உருவாக்க போராடும் இயக்கங்களுக்கு ஆதரவளிக்கும் நபர்கள் மிகக் குறைவு. பாலுமகேந்திரா தன்னுடைய வாழ்நாள் முழுக்க இத்தகைய செயல்பாடுகளை தொடர்ந்து ஆதரித்துவந்தார். பொருளாதாரீதியில் இல்லாவிட்டாலும் அவரது இருப்பு இதுப் போன்ற இயக்கங்களுக்கு பெரும் ஆதரவாக இருந்தது. தமிழ் ஸ்டுடியோ இயக்கம் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல சினிமா நோக்கி பல்வேறு புதிய முன்னெடுப்புகளை தொடங்கிய இயக்கம். இன்றுவரை முகனூலில் பலர் பேசும் விசயங்களை, இனி எதிர்காலத்தில் பலர் பேசவிருக்கும் விசயங்களை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னமே பேசிய இயக்கம் தமிழ் ஸ்டுடியோ. ஆரம்பக் காலக்கட்டங்களில் அதன் ஒட்டுமொத்த செலவுகளையும் என்னுடைய சொந்தப் பணத்தில் இருந்தே செலவழித்து வந்தேன். சில நண்பர்களின் பங்களிப்பு இருந்தாலும் கூட தொடர்ச்சியாக யாராலும் இத்தகைய இயக்கத்திற்கு தீனிப்போட முடியாது. நண்பன் குணா இயக்கம் தொடங்கும்போது உடனிருந்து பல்வேறு வகையில் எனக்கு உதவி புரிந்தான். ஆனால் வேலையை விட்டுவிட்டு, நான் முழுநேர தமிழ் ஸ்டுடியோ பணிகளில் ஈடுபட்ட காலக்கட்டத்திற்கு பிறகு தமிழ் ஸ்டுடியோவின் பொருளாதார பிரச்சனையை சமாளிக்க பெரும் பாடுபட்டேன். இணையத்தில் நன்கொடை கேட்டால், பணம் தரும் நண்பர்கள் அமைதியாக தந்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள். ஆனால் ஒரு ரூபாய் பணம் கொடுக்காத பலரும் அந்த செயல்பாட்டை விமர்சித்து பிச்சைக்காரன் என்றும், இவனுக்கு வேற வேலையே இல்லை என்றும் அர்ச்சனை செய்துக்கொண்டிருப்பார்கள். தொடர்ந்து நன்கொடை கொடுக்கும் நண்பர்களிடம் நானே பிற்பாடு நன்கொடை கேட்பதை நிறுத்திவிட்டேன். யாரையும் அளவுக்கதிகமாக கஷ்டப்படுத்த வேண்டாம் என்பதே என்னுடைய நிலைப்பாடு. சென்ற ஆண்டு எனக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும், தமிழ் ஸ்டுடியோ இயக்க செயல்பாடுகளிலும் பெரும் துயரங்களை சந்தித்த ஆண்டு.

பொருளாதார பிரச்சனை தலைதூக்கவே, தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் பலமுறை மாற்றப்பட்டது. விதை இயற்கை அங்காடிக்கு வாடகை கூட கட்டமுடியாமல் அவதிப்பட்டேன். யாரிடமும் பணம் கேட்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் இயக்குனர் மிஷ்கினின் மேலாளர் என்னுடைய கடை தேடிவந்து கடைக்கான வாடகைப் பணத்தையும், செலவுக்கு என ஒரு தொகையையும் கடனாக கொடுத்து உதவினார். நான்தான் அதனை கடனாகப் பெற்றுக்கொள்கிறேன் என்றேன். யாரிடமும் நான் என்னுடைய பொருளாதாரப் பிரச்சனையை தனிப்பட்ட முறையில் சொல்வதில்லை. முகனூலில் பொதுப்படையாக எழுதுவதோடு சரி. ஆனாலும் கஷ்டத்தைப் புரிந்துக்கொண்டு அவராகவே பணம் கொடுத்து உதவினார். இப்படியே எத்தனை நாள்தான் போராடுவது, இயக்குனர் மிஷ்கினிடம் ஒரு பயிற்சிப் பட்டறை நடத்திக் கொடுக்குமாறு கேட்டேன். கேட்டு முடிப்பதற்குள் உங்களுக்கு பொருளாதார ரீதியில் உதவ இது நல்ல சந்தர்ப்பம். உடனே தொடங்கலாம் என்றார். இத்தனைக்கும் பிசாசு படம் வெளிவந்து வெற்றியடைந்து அடுத்தப் பட வேளையில் மும்முரமாக அவர் ஈடுபட்டிருந்த காலக்கட்டம் அது. ஆனாலும் ஒரு இயக்கத்தின் நிதி தேவைக்காக எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து தமிழ் ஸ்டுடியோவிற்காக இரண்டு மாதங்கள் கடுமையாக உழைத்து பயிற்சிப் பட்டறையை நடத்திக் கொடுத்தார். ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொள்ளாமல், பயிற்சிப் பட்டறைக்கு ஆன செலவுகளையும் அவரே செய்துவிட்டு, கிடைத்த நான்கு லட்சம் சொச்ச தொகை முழுவதையும் தமிழ் ஸ்டுடியோவிற்காக கொடுத்தார். அதனை வைத்துதான் அடுத்த சில மாதங்களுக்கு தமிழ் ஸ்டுடியோ தப்பிப் பிழைத்தது.

பிறகு பேசாமொழி பதிப்பகத்திற்கு ஒரு புத்தகம் எழுதிக் கொடுங்கள், அதுவும் தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கு நிதி திரட்ட உதவும் என்று கேட்டேன். கடுமையான வேலைப்பளு நிறைந்த அந்தக் காலகட்டத்தில் வேறெந்த நோக்கமும் இல்லாமல், தமிழ் ஸ்டுடியோவின் நிதி தேவையை மனதில் கொண்டு ஒரு வருடத்திற்கும் மேலாக கடுமையாக உழைத்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் புத்தகத்தை முடித்துக் கொடுத்தார். ஒரு செயலை செய்யும்போது, செய்து முடித்த பின்னர், தொடங்குமுன்னர் எப்படியெல்லாம் அதில் ஈடுபாடுக் காட்டமுடியும் என்பதை மிஷ்கினை பார்த்தே பலரும் பாடம் படிக்க வேண்டும். ஒரு புத்தகம்தானே என்று சாதாரணமாக அவர் விட்டுவிடவில்லை. அதற்காக மெனக்கெட்டார். மெனக்கெடல் என்றால் சாதாரணமாக இல்லை. இரவும் பகலும் புத்தகத்தைப் பற்றியே சிந்தித்தார். புத்தகம் அவர் கையில் வந்து சேரும் வரை அவருக்குள் இருந்த பெரும் துடிப்பை நானறிவேன். புத்தகத்தை உடன் இருந்து எழுத துணை நின்ற தம்பி தினேஷ் அறிவான். ஒரு படம் வெளியாகும்போது ஏற்படும் அத்துனை பதைபதைப்பும் அவருக்குள் இருப்பதை நானுணர்ந்தேன்.

தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கு நிதி திரட்ட வேண்டும் என்பதை தாண்டியும், தமிழ் சினிமாவில் புதிதாக வரும் இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும், சினிமா சார்ந்த நூல்கள் அதிகம் வெளிவரவேண்டும், கல்வி மூலமே நல்ல சினிமாக்கள் உருவாக முடியும் என்பதையெல்லாம் உணர்ந்துதான் இந்த புத்தகத்திற்காக அத்தனை மெனக்கெட்டார். இறுதியாக புத்தகக் காட்சியில் அரங்கம் அமைக்க போதிய பணம் இல்லை என்று சொன்னேன். அரங்கம் அமைப்பதற்கான பணத்தையும் அவரே கொடுத்து உதவினார். எனக்கு தனி நபர் தரிசனமோ, துதிப்பாடுதலோ பிடிக்காது. ஆனால் ஒரு இயக்கத்திற்கு தன்னால் இயன்றதைக் காட்டிலும் அதிகம் உதவும் ஒருவரை அவர் இதை செய்தார் என்று சொல்லிக்காட்டுவது தனிமனிதத் துதிபாடுதல் ஆகாது. வேறெந்த படைப்பாளிக்கு இத்தகைய உணர்வு தோன்றும், வேறெந்த தனிமனிதர்களுக்கு இத்தகைய உணர்வு தோன்றும்? பேரன்பு கொண்ட பெரும் கலைஞர்களுக்கு மட்டுமே இது போன்ற இயக்கங்களுக்கு உதவ வேண்டும், கல்வி, புத்தகம் சார்ந்து இயங்க வேண்டும் என்கிற அக்கறையும், அது சார்ந்து இயங்கும் திராணியும் இருக்கும். மிஷ்கின் தமிழ் சினிமாவின் மைல்கல். திரைப்பட உருவாக்கத்திலும் அவரது மொழி தனித்துவம் வாய்ந்தது. ஒரு நல்ல இயக்குனர் நல்ல மனிதனாகவும் இருப்பது அரிதிலும் அரிது. மிஷ்கின் அத்தகைய அரிதானவர். அறுபதாயிரம் ரூபாய் மதிப்பு வாய்ந்த ஒரு கைக்கடிகாரத்தை ஒரு நொடியில் இன்னொருவருக்கு அன்புப் பரிசாக கொடுக்கும் ஒருவருக்கு உடனிருக்கும் உதவி இயக்குனர்களுக்கு பணம் கொடுக்கத் தெரியாத என்ன? உண்மையில் உடனிருக்கும் உதவி இயக்குனர்கள் பெரும் பாக்கியம் பெற்றவர்கள். இந்த ஒரு வருடக் காலத்தில் என்னை விட இயக்குனர் மிஷ்கினைத்தான் தம்பி தினேஷ் கொண்டாடியிருக்கிறான். போலியானவர்களை இனம்கண்டு ஒதுக்கிவைக்கும் நேரத்தில் உண்மையானவர்களை அருகில் வைத்து, தேவையான எல்லாவற்றையும் கொடுத்து அழகுபார்க்கும் பெரும் கலைஞன் மிஷ்கின். உதவி இயக்குனர்கள் வெளியில் சுலபமாக பேசிவிட முடியும். ஆனால் ஆதாரமற்ற, அனுபவமற்ற, முதிர்ச்சியற்ற எத்தகைய அவதூறுகளுக்கும் எந்த கலைஞனும் மறுப்பு சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆனால் அவர்கள் பேச ஆரம்பித்தால் அவதூறு செய்துக்கொண்டிருப்பவர்கள் ஆர்க்டிக் கண்டத்தின் இன்னொரு முனைக்கு ஓடி ஒளிய வேண்டியிருக்கும். உண்மை எப்போதும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்காது. அது எப்போதும் இயல்பாக தன் இருப்பை நிலைநாட்டிக்கொள்ளும்.

மிஷ்கின் உங்கள் புன்னகையும், எள்ளளவும் களங்கம் இல்லாத அன்பும் இன்னொரு தனிமனிதனிடத்தில் காணக்கிடைக்காதவை. எனக்கு கிடைத்த நட்புகளில் உங்கள் நட்பை பெரிதும் கொடாண்டுகிறேன். என்னுடைய படம் மோசமாக இருந்தால் அதனை பற்றி எழுதுவதில் ஒருபோதும் தயங்காதே என்று தெம்பூட்டி, தனிமனித சுதந்திரத்தை போற்ற செய்யும் உங்கள் மாண்பை மதிக்கிறேன். லவ் யூ மிஷ்கின்.

அருண், மிஷ்கின் நூல்களை தனது பேசாமொழி பதிகப்பகத்தின் மூலம் வெளியிட்டவர்.

இயக்குநர் மிஷ்கினின் திரைக்கதைகளின் தொகுப்பு

ஓநாயும் ஆட்டுகுட்டியும் – ரூ. 600
பிசாசு – ரூ. 300
நந்தலாலா – ரூ. 300
அஞ்சாதே – ரூ. 300
யுத்தம் செய் – ரூ. 300

புத்தகம் கிடைக்கும் இடம் :
Pure Cinima
No.7,West Sivan Kovil Street,Vadapalani
Chennai-600 026.Near kamala Theater.
91 98406 98236

 

One thought on “”ஆதாரமற்ற, முதிர்ச்சியற்ற அவதூறுகளுக்கு எந்த கலைஞனும் மறுப்பு சொல்லிக்கொண்டிருக்க முடியாது”

  1. இவர் ஏன் வேறு வேலை வெட்டி எதுவும் பார்க்காமல் மிஷ்கினிடமிருந்து இவ்வளவு பணத்தை பெற்று அதை வீணடித்திருக்கிறார்.

    இது போன்ற வெட்டித்தனமான சினிமா இயக்கங்களை நடத்திக்கொண்டிருப்பதால் மாற்று சினிமா எதுவும் உருவாகாது, மாறாக மிஷ்கின் போன்றவர்களின் பணம் தான் விரயமாகும். ஈரானில் மாற்று சினிமா இவ்வாறா உருவானது ?

    மாற்று சினிமா என்பது சமூகத்திலிருந்து எழுமே தவிர இவ்வாறு உருவாக வாய்ப்பே இல்லை. எனவே அருண் போன்றவர்கள் மிஷ்கின் போன்ற நல்லவர்களின் காசை கரியாக்கி பிழைப்பு நடத்தாமல் வேறு ஏதாவது வேலை செய்து காலத்தை ஓட்டலாம், அல்லது சமூகத்தை புரிந்துகொண்டு நல்ல சினிமா எடுக்க முயற்சிக்கலாம்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.