தமிழ்நதி

இருந்தாற்போல சுபத்திரா கதைக்கத் தொடங்கினாள். வயிற்றுக்குள் புரட்டிக்கொண்டிருக்கும் வாந்தியை ஓங்காளிக்கும் வேகத்துடன் சொற்கள் சீறிவந்தன.
“இந்தியனாமி யாழ்ப்பாணத்தைப் பிடிச்சாப்பிறகு கொஞ்சச் சனங்கள் அகதிமுகாமிலை இருந்து திரும்பித் தங்கடை வீடுகளுக்கு வந்திட்டுதுகள். நாங்கள் இரவிலை வீட்டிலை படுக்கிறேல்லை. இரவுச் சாப்பாட்டை முடிச்சிட்டு பக்கத்து வீட்டை போயிடுறனாங்கள். அங்கைதான் படுக்கை. அண்டைக்குப் போறதுக்குக் கொஞ்சம் பிந்திப் போச்சுது. இரவு எட்டு மணியிருக்கும். றெயில்வே லைன் பக்கம் நாய் குலைச்சுச் சத்தம் கேட்டுது. அவங்கள்தானெண்டு தெரியும். வீடு வீடாய்ப் போய் செக் பண்ணிக்கொண்டு வந்தாங்கள். எங்கடை வீட்டடிக்கு வந்ததும் நானும் அம்மம்மாவும் முற்றத்துக்கு வந்திட்டம். அவங்கள்ள நாலு பேர் வளவுக்குள்ளை வந்தாங்கள். என்னை உள்ளுக்கை போய் வீட்டைக் காட்டச் சொன்னாங்கள். அம்மம்மா தான் சுத்திக் காட்டுறனெண்டு சொன்னா. அவங்கள் என்ரை முதுகிலை துவக்கை வைச்சு உள்ளுக்கை போகச் சொன்னாங்கள். அம்மம்மா பிலத்துக் கத்தி அழுதா. அவவின்ரை கன்னத்திலை ஒருத்தன் ஓங்கி அடிச்சான். அவ நிலத்திலை விழுந்தா. அப்பவும் அவ சத்தம் போடுறதை நிப்பாட்டேல்லை. அம்மம்மான்ரை வாயை ஒருத்தன் பொத்தினான்.” அவள் குரல் துண்டு துண்டாக வெளிவந்தது.
“கஷ்டமாயிருக்கெண்டால் சொல்ல வேண்டாம்.” வானதி முதுகைத் தடவினாள். சுபத்திராவின் உடல் அந்தக் கொடிய இரவினுள் கிடந்து உதறுவதை அவளால் தாங்கமுடியவில்லை. சுபத்திரா நிறுத்தாமற் தொடர்ந்தாள்.
“ரெண்டு பேர் வெளியில காவலுக்கு நிண்டாங்கள். முதல்ல ரெண்டு பேர்…” அவள் சத்தம் வெளியில் கேட்காதவாறு வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள்.
“காலெல்லாம் ஒரே ரத்தம். கன்னமெல்லாம் கடி காயம். ரத்தம் தன்ரைபாட்டிலை போகுது. நான் அப்பிடியே கிடந்து செத்துப்போயிடுவனெண்டு நினைச்சன். மூண்டாவது ஒருத்தன்…. கடைசியா நாலாவது ஆள் உள்ளுக்கை வந்தான். நான் கிடந்த கோலத்தைப் பாத்துப் பயந்துபோய் வெளியிலை ஓடிப் போயிட்டான். அம்மம்மா குழறிக்கொண்டு ஓடிப்போய் பக்கத்து வீட்டு அன்ரியைக் கூட்டிக்கொண்டு வந்தா. என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோச்சினம். எட்டு நாள் ஆஸ்பத்திரியிலை கிடந்தன். அந்த இடத்திலை தையல் போட்டிருக்கு. மூத்திரம் பெய்யேக்குள்ள மரண வேதனையா இருக்கும். தொடர்ந்து குந்தியிருக்கேலாது. கக்கூசுக்குப் போகேக்குள்ள ரெண்டு நிமிசத்துக்கொருக்கா எழும்பி நிண்டு போட்டுத் திரும்ப இருக்கோணும். இல்லையெண்டா வலி உயிர் போகும். இப்பவும் நடக்கேக்குள்ள வலிக்குது.”
வானதி, பீறிட்டுக் கிளம்பும் அழுகையை அடக்கமாட்டாது அந்தரித்தாள். ஆனால், தன்னுடைய அழுகை அவளை மேலும் உடையச் செய்துவிடுமோவென்று எண்ணி தன்னை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“வெளியில தலைகாட்ட முடியேல்லை. சனமெல்லாம் என்னை உத்து உத்துப் பாக்கிற மாதிரி… இந்த உடம்பை என்னத்தோடயாவது மோதிச் சிதறடிச்சு இல்லாமல் போயிடோணும்போல கிடக்கு.”
“நித்திரை கொள்ளவெண்டு கண்ணை மூடப் பயமாயிருக்கு… முகத்துக்கு நேரை ஆரோ குனியிறது மாதிரி மூச்சடைக்குது”
சுபத்திராவால் நிறுத்த முடியவில்லை! குளிர் காய்ச்சலில் உதறுவது போல தூக்கித் தூக்கிப் போட்டது உடல்.
“இந்த உடம்பை நினைச்சா அருவருப்பா இருக்கு. ஒருத்தன் என்ரை வாய்க்குள்ள….. சாப்பிட முடியேல்லை. அவன்ரை மூத்திர மணந்தான் ஞாபகம் வருகுது.”
வானதி பேச்சிழந்துபோய் அமர்ந்திருந்தாள். எல்லாக் கனவும்போல இதுவுமொரு கனவாயிருந்துவிடக்கூடாதா? விழித்தெழுந்து ஒரு குவளை தண்ணீர் குடித்தால் இந்தப் படபடப்பு அடங்கிவிடும்.
ஆனால், யதார்த்தத்தின் அந்தகாரத்தினுள் நின்று அலறியது சுபத்திராவின் குரல்.
“நான் உயிரோடை இருக்க விரும்பேல்லை… விரும்பேல்லை…”
அலறல் சத்தம் கேட்டு அம்மம்மா உள்ளே ஓடிவந்தார்.
நிராதரவான இரண்டு பெண்கள்; கட்டிப்பிடித்துக்கொண்டு ஓலமெழுப்பும் அந்தக் காட்சியைக் காணச் சகிக்கவில்லை. வானதி எழுந்து வெளியில் வந்தாள். தனஞ்சயன் அவளுடைய கண்களைத் தவிர்த்து வாசலை நோக்கி நடந்தான்.
தமிழ்நதியின் “பார்த்தீனியம்” நாவலிலிருந்து…
பார்த்தீனியம் நாவல் வெளியீடு 04.06.2016 சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு டிஸ்கவரி புத்தக நிலையம் கலைஞர் கருணாநிதி நகர்,சென்னையில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு – ஆகுதி பதிப்பகம்