வலியும், வருத்தமும், ஆதங்கமும் மக்களின் முகத்தில் வெளிப்படுவதை எங்களின் நினைவேந்தல் பிரச்சாரத்தின் பொழுதில் காண முடிகிறது.
சிலரிடத்தில் அடர்ந்து வெளிப்படும் மெளனம் வெளிப்படுத்த இயலாத ரணத்தினை உணர்த்தியது.
தமிழகத்தின் ஆற்றாமை சொல்லி மாளாது என்பதை எங்களின் ஒவ்வொரு பிரச்சாரத்தின் பொழுதும் உணர்கிறோம்.
முகமறியா, அரசியல் பேசாத பலர் எங்களது துண்டறிக்கைகளை அதிகமாய் வாங்கி பிறருக்கு கொடுக்கிறோம் என்று சொல்லும் அந்த சொல்லில்
இயக்க அரசியல் மீதான நம்பிக்கை வளர்கிறது.
ஒரு சிலர் நினைவேந்தலில் பங்கேற்ற தருணத்தினை நினைவு படுத்தி அவசியம் வருகிறோம் என்றார்கள். சிலர் ஏன் தேதியை மாற்றினீர்கள் என்று உரிமையுடன் கேட்டார்கள்.
2011இல் ஐ.நாவின் நிபுணர் குழு திட்டமிட்டு இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டினை மூடி மறைக்க முயன்றது. இதை அம்பலப்படுத்தவே நினைவேந்தல் நிகழ்வினை துவக்கினோம்.
’எந்தக் கடற்கரைக்கான ஆதிக்கச் சண்டையில் தமிழர் மீது இந்த இனப்படுகொலை நடந்ததோ, எந்தக் கடல் மீதான ஆதிக்கத்திற்காக ‘இனப்படுகொலை’ என்பதை மறைக்கிறார்களோ’ அதே கடலோரம், ‘ இது தமிழர் கடல் என்று அறிவித்து, நடந்தது இனப்படுகொலை என்று முழங்குகிறோம்’.
நினைவேந்தலில் பங்கெடுக்க வாய்ப்பில்லையெனிலும், வாய்ப்பினை உருவாக்கி பங்கெடுங்கள். பெரும் திரளாய் திரண்டு சர்வதேசத்தின் முன் முழங்குவோம்,
’நடந்தது இனப்படுகொலை, மறைக்காதே”
இன்று மாலை 4 மணிக்கு மெரினா கடற்கரையில் மே பதினேழு இயக்கம் சார்பில் தமிழினப் படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது.