வழக்கமான ஜாதிய கெத்துப் படமாக இல்லாமல் ‘உறியடி’ தமிழ்த் திரைப்படம் புதிய தடத்தைப் பதித்துள்ளது. கல்லூரி சேட்டைகளில் திளைத்தாலும் அடிக்கடி சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளும் இளைஞர்களின் கதை இது.
சாதி அரசியலில் குளிர்காய நினைக்கும் சில புள்ளிகளுக்கு இவர்களின் பிரச்சனைகள் அல்வாத் துண்டாக சிக்குகிறது. அல்வாத்துண்டு மேலும் ஆறேழு துண்டுகளாக சின்னாபின்னமாவதை டூயட் கத்திரிகாய்கள், அக்கப்போர் காமெடிகள் எதுவுமின்றி மண்ணில் கிழித்துச் செல்லும் கோடாக நிறுத்திச் சொல்கிறது படத்தின் பின்பாதி.
அத்தகையக் காட்சிகளை violance சம்பவங்களின் கொந்தளிப்பு கொப்புளங்களாக இல்லாமல் தந்திரமாக சிரிப்பு மூட்டி தத்தளிக்க வைத்துள்ளார் தனது vibrant screenplay-வின் மூலம் இயக்குநர் விஜயக்குமார்.
சாதாரணமாக சினிமா என்பது 2 மணிநேரத்தைத் தாண்டக்கூடாது. சொல்ல வேண்டிய விஷயத்தை கொஞ்சமாகவும் சொல்லத் தேவையில்லாததையெல்லாம் நிறைய சேர்த்தும் இழுத்துச்செல்வார்கள் நம்மூரில். இதனால் இரண்டரை, இரண்டேமுக்கால் மணி சினிமா நேர அளவு குறித்து எனக்கு ஆட்சேபனை யுண்டு.
90, 95, 110 நிமிடங்களுக்குள்ளாக ஒரு சரியான படத்தை நேர்மையாக தந்துவிடமுடியும் என்று நினைக்க வைத்துள்ளன பல அற்புதமான உலக சினிமாக்கள்.
உறியடி 110 நிமிடங்களுக்குள்ளாகவே பார்வையாளனை நம்பிக்கையின் உத்வேக விசையைநோக்கி நிமிர்த்திவிடுகிறது.
புதிய இளம் இயக்குநர் விஜயக்குமாரின் முயற்சியை திருவினையாக்கிய உறியடி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்…
பால் நிலவன், எழுத்தாளர்; ஊடகவியலாளர்.