படம்: ஃபோபியா (பயம்)
நடிப்பு: ராதிகா ஆப்டே, சத்யதீப் மிஷ்ரா
இயக்கம்: பவன் கிர்பலானி
இந்தத் திரைப்படத்தை என் நண்பர்கள் கண்டிப்பாக தவற விட வேண்டாம். நடிகை ராதிகா ஆப்டே பற்றி தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் தேவையில்லை. வரவிருக்கும் பா.ரஞ்சித் படத்து நாயகி தான். கொஞ்சும் அழகும் கொள்ளைத் திறமையும் கொண்டவர்.
அவர் நடிப்பில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் ஃபோபியா (PHOBIA). பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் ஒரு பெண் கடுமையாக பய உணர்வுக்கு பீடிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வரப் பயப்படும் (agoraphobia) பெண்ணாக நடித்துள்ளார்.
இதற்கு முன் ராம் கோபல் வர்மா இயக்கத்தில் கோன் (kaun) திரைப்படத்தில் நடிகை ஊர்மிளா மாத்தோன்கர் நடித்திருந்தார். அந்தப் படமும் சரி ஊர்மிளா மற்றும் மனோஜ் பாஜ்பாயின் நடிப்பும் சரி மிகச் சிறப்பாக இருந்தது.
ஃபோபியா படத்தில் ராதிகாவின் நடிப்புக்கு இணையில்லை.. அவர் மட்டுமே படத்தில் முழுமையாக வியாப்பித்து இருக்கிறார். பயத்தை வெளிப்படுத்தும் கண்களும்.. காற்றின், கதவின் மற்றும் பிற புறப் பொருட்களின் நுன் அசைவுகளுக்கு அவர் உடல் காட்டும் அதிர்வும் கண்களில் வெளிப்படும் பய பாவமும் அப்பப்பா சொல்ல முடியாது.
திரைப்படத்தின் முதல் பாதியில் நடிப்பால் அவருடைய பயத்தை நமக்கு கடத்தி அச்சமூட்டுகிறார்… இரண்டாம் பாதியில் கதை நகர்வு கொஞ்சம் டல்லடித்தாலும் ராதிகா மட்டும் அலுப்பதில்லை.
படத்தின் முடிவு கதைக்காக வலிந்து செய்யப்பட்டிருப்பது கொஞ்சம் புரியத்தான் செய்கிறது. ஆனால் ராதிகாவின் அபார நடிப்புக்காக இப்படத்தை கண்டிப்பாய் தவற விட வேண்டாம்..
இயக்குனர் பவன் கிர்பிளானி ராகினி MMS மற்றும் One night in the Mall திரைப்படங்களை இயக்கிவர். PHOBIA என்ற பெயரில் ஒரு வெளிநாட்டு படமும் உள்ளது.. அதிலும் இப்படி வீட்டை விட்டு வெளியே வர பயப்படும் கதை தான்… ஆனால் அந்த ஐடியாவை மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறார். மற்றபடி காப்பி இல்லை.
வீட்டில் காற்றின் அசைவையும்.. நீர் பருகையில் நீரின் தட்ப வெப்ப நிலைக்கேற்ப கழுத்தின் அசைவுகளையும் கூட அப்படி அழகாய் செய்திருக்கிறார். ஒரு கதாபாத்திரத்தை விளக்கிச் சொன்னதும் அதை உள்வாங்கி இயக்குனரின் எதிர்பார்ப்புக்கும் கதையின் எதிர்பார்ப்புக்கும் கொஞ்சமும் வஞ்சனை இல்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
காற்றில் துலாவும் கைகல், விரல்கள், விரல் அசைவுகள், ஒவ்வொரு அடியை வைக்கும் அச்சத்தின் அளவை அனுசரித்து வைப்பது நடிப்பின் உச்சம்.. நடிகர்கள் கண்டிப்பாக இப்படத்தைப் பார்க்கத்தான் வேண்டும்..
ராதிகா மீதும் ராதிகாவின் நடிப்பு மீதும் தனியாத காதல் எனக்கு.. அதன் மடங்கு இன்னும் கூடி விட்டது.
மரண மொக்கையான மேக்கப்.. கிராபிக்ஸ் இல்லாமல் மிரட்டலான இந்தப் படத்தை பரிந்துரைக்கிறேன்.
———————————————————————————
திரைக்கதை எழுத ஆர்வமுள்ள என் நண்பர்கள் இப்படத்தை தவற விட வேண்டாம். “ ஒரு இளம் பெண் அல்லது ஒரு துப்பாக்கியைக் கொடுங்கள், ஒரு சிறந்த படத்தை உருவாக்கிக்காட்டுகிறேன்” என்று சவால் விட்ட அந்த மகா கலைஞனுக்கு இப்படத்தின் திரைக்கதை சமர்ப்பணம்.
மிகக் குறைந்த நடிகர்களை (விரல் விட்டு எண்ணும்படியான ) வைத்துக் கொண்டு இப்படியொரு திரைப்படத்தை/திரைக்கதையை படைப்பது குறித்து சிந்திக்க வேண்டும்..
முத்தழகன், திரைப்பட இயக்குநர், எழுத்தாளர்.