எஸ்.சி என்றதும் தள்ளி உட்கார்ந்த மருத்துவர்;காசுக்கு மட்டும் ஜாதி இல்லையா?:பிரபல இலக்கியவாதி கேள்வி…

Yazhan Aathi 

சின்ன சின்ன பொட்டுகளாக கடந்த ஏப்ரல் மாதம் என் நெற்றியின்மீது வந்தன அவை. வெயில் அதிகமாக இருக்கிறது அதனால் இருக்கும் என வழக்கமான முன்முடிவோடு நானிருந்துவிட்டேன். பல பயணங்கள், விருந்துகள், நண்பர்களுடன் ஊர்சுற்று என வெயிலில் நான் அதிகம் உழல கொப்பளங்களாகின அவை. இப்போது என் கன்னங்களில் வந்து சேர்ந்தன. திடிரென ஒரு நண்பன் என்ன இது என்று தன் விரலால் அழுத்த அந்தக் கொப்பளம் ஒடிந்து நிறமற்ற திரவம் வெளிப்பட்டது. கொப்பளம் இருந்த இடம் வட்டமாக தோல் பெயர்ந்து விட்டது. பழைய வீட்டில் இருக்கும் சிமெண்ட் பெயர்ப்புகள் போல.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து கழுத்து மார்பு முதுகின் பின்புறம் என கொப்பளங்களின் எண்ணிக்கைப் பெருக பெருக அம்மை நோயாய் இருக்கும் என என் வீட்டார் முடிவு செய்து குளிர்ந்த உணவுப் பொருட்களை உண்ண ஆரம்பித்தேன். பல கட்டுப்பாடுகளைச் சொன்னார்கள். ஆனாலும் அவற்றால் நான் கட்டுப்படாமல் போனேன். என் உறவினர்கள் நண்பர்களின் உறவினர்கள் என சில மரணங்களிலும் நினைவு நாள் கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டியதாகியது.

தேர்தல் குறித்தும் புத்தகக் கண்காட்சிக் குறித்தும் பல வேலை திட்டங்கள் இருந்தன. எதிலும் மனம் ஈடுபடவில்லை. உடல்நிலை பாதிப்பு என்பது மனத்தின் அடித்தளத்தை ஆட்டங்காண வைத்துவிடுகிறது. பார்ப்பவர்கள் எல்லாம் அம்மை நோய்தான் இது. நீங்கள் வெளியே ஏன் வருகிறீர்கள் என திட்டினார்கள். இப்போது தலை முழுக்க வந்துவிட்டது. பார்ப்பதற்கே மிகவும் மோசமாக என் தோற்றம் மாறிவிட்டது. ஒரு கொப்பளம் தீர்ந்தால் இன்னொன்று என்று வந்துகொண்டே இருந்தது.

மருத்துவர்களிடம் சென்றேன். இரத்தப் பரிசோதனை செய்தேன். எந்தக் குறையும் இல்லை. வெயிலின் தாக்கமாக இருக்கலாம் என்றார்கள் சிலர். சிலர் குயவர்களிடம் சென்றால் அவர்கள் மண்கொண்டு வரைவார்கள் அப்படி செய்தால் நன்றாக ஆறிவிடும் என்றார்கள். ஹர்பிஸ் ஆக இருக்கலாம் என்றார்கள். அல்லது வேறு ஏதாவது வைரல் இன்ஃபெக்ஸனாக இருக்கலாம் என்றார்கள். ஆனாலும் வீட்டிற்கு வெளியே வராதீர்கள் என்றார்கள்.

மிகவும் மனம் சோர்வுற்றது. எந்த வேலையிலும் என மனம் ஈடுபடவில்லை. இதுவரை நான் உடல் நலமில்லாமல் நோய்வாய்ப்பட்டதில்லை என்பது எனக்கு மேலும் பயம் தரக்கூடியதாக இருந்தது. உணவுக்கட்டுப்பாடு வேண்டும் என்றார்கள்.

குடியாத்தம் பக்கத்தில் இருக்கும் ஓர் சிற்றூரில் இதற்கு மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி அவரிடம் காலையிலே சென்றேன்.

எங்க வேல செய்றீங்க என்றார், நான் வேலை செய்யும் ஊரைக் கூறினேன்
.
நீங்க மொதிலியாரா ?என்றார்.

நான் இல்லை என்றேன். இல்ல அங்க நிறையபேர் அவங்கதான் அதான் கேட்டன் என்றார்.

நான் ஆம்பூரிலிருந்து போகிறேன் என்றேன், ஆம்பூர் எம் எல் ஏ நாயுடுவாமே என்றார்,

நான் தெரியாது என்றேன். நான் ஒரு தலித் என்றேன்.

அவருக்கு சரியாக விளங்கவில்லை. எஸ்.சி என்றேன்.

கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்து கொண்டார்.

தலையைப் பார்த்தார், சட்டையைக் கழற்ற சொன்னார். முதுகைப் பார்த்தார் அநேகமாக இது அம்மையாக இருக்காது என்ற முடிவுக்கு வந்தார்.

உடனே மருந்து சீட்டு எழுதி பக்கத்தில் வாங்கச் சொன்னார். அங்கேயே எப்படி பூசுவது என்று செய்யச் சொல்லி, என்னையே பூசிக்கொள்ளச் சொன்னார்.

காசு கொடுத்துவிட்டு வந்தேன்.

காசுக்கு என்ன ஜாதின்னு கேக்கலியா சார் என்றேன். இல்ல அப்படி நெனக்காதீங்க என்றார்.

இன்றுதான் அந்தப் புண்கள் ஆறி காய ஆரம்பித்திருக்கின்றன ஆனால் வடுக்கள் கரும்புள்ளிகளாக அப்படியே இருக்கின்றன. போய்விடும் என்று சொல்கிறார்கள்.மனித மனம் மிகவும் அசாத்தியமானது என இந்தக் காலங்களில் நான் நினைத்துக்கொண்டேன். உடல் கொஞ்சம் சோர்வடைந்தவுடன் நோயில் இருக்கிறது என்றவுடன் அது தளர ஆரம்பிக்கிறது, நம்முடைய ஆளுமைத்திறன்மேல் நமக்கே நம்பிக்கை இழக்க வைக்கும் ஆக மோசமான வேலையை நோய் செய்கிறது. நோய் அண்டாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

என்னுடைய ஒரு மாதத்தைத் தின்று தீர்த்து சென்றுவிட்ட அந்த நோய் பல பாடங்களை சொல்லி சென்றிருக்கிறது. இந்தக் காலங்களில் பல நண்பர்களை நான் வருத்தமடையச் செய்திருக்கிறேன். வருவதாய்ச் சொன்ன நிகழ்வுகளுக்குப் போகமுடியாமல் அவர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தி இருக்கிறேன்.

குறிப்பாக கவிஞர் வெண்ணிலவன், பாதை அமல் ஆகியோருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலவில்லை, இயக்குநர் எஸ்பி முகிலனுக்கு சொன்ன உறுதியைக் காப்பாற்ற முடியவில்லை.

அன்பு நண்பன் இயக்குநர் ஸ்ரீஜித் அவர்களுக்கு நான் சொன்ன ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாமல் பெருந்தொல்லை கொடுத்துவிட்டேன். எழுதி முடிப்பதாக உத்திரவாதம் கொடுத்த எதையுமென்னால் எழுத முடியவில்லை. அனவைரும் என்னை பொறுத்தருள வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.

புத்தகச் சந்தையில் சந்திப்பேன் அனைவரையும்.

யாழன் ஆதி, எழுத்தாளர்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.