அதிமுகவை உடைக்க முயற்சியா?: கருணாநிதியின் பேட்டி சொல்லவருவது என்ன??

திமுக தலைவர் கருணாநிதி “தி இந்து” ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி…

1. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் களத்தில் இருந்து வந்த தகவல்களும் திமுக வெற்றி பெறும் என்றே தெரிவித்தன. இருப்பினும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இதற்கு காரணம் என்ன?

கருணாநிதி:- தேர்தல் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைப் பட்சமாகவே இருந்ததையும், ஆளுங்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதைப் போலச் செயல்பட்டதையும் தமிழகமே நேரிலே கண்டது. தேர்தல் ஆணையத்திடம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எத்தனை முறை தான் புகார் மனுக்களைத் தருவது? பணப்பட்டுவாடா பற்றி நாளேடுகளில் செய்திகள் வராத நாள் உண்டா? அமைச்சர்களைப் பற்றி எத்தனையோ புகார்கள்! பொது மக்கள் திரண்டு நின்று, சில அமைச்சர்களைத் தொகுதிக்குள்ளேயே வரவிடாமல் தடுத்து விரட்டியடித்தார்கள் என்று எத்தனை செய்திகள் வெளிவந்தன? அதையெல்லாம் மீறி அந்த அமைச்சர்கள் அந்தத் தொகுதிகளில் பின்னர் எப்படி வெற்றி பெற்றார்கள்? மூன்று அமைச்சர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்ட கரூர் அன்புநாதன் பிரச்சினை என்ன? துபாயில் ஓட்டல் என்றும், வெளிநாடுகளில் ஏராளமான சொத்துகள் என்றும், கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகள் என்று பேசப்பட்ட பெரிய ஊழல் எவ்வாறு மூடி மறைக்கப்பட்டது? 570 கோடி ரூபாய் திருப்பூரில் பிடிபட்டதையே வங்கியின் பணம் என்று டெல்லியிலிருந்தே கூறி விட்டார்களே? சிறுதாவூரில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்களாவில் இருந்த கன்டெய்னர்கள் புகைப்படமாக எடுத்து பார்ப்போர் அதிர்ச்சி அடையும் அளவுக்கு வெளியிடப்படவில்லையா? நாட்டின் வருமான வரி மற்றும் அமலாக்கத் துறைச் சட்டங்களுக்கெதிரான இந்த நிகழ்வுகள் என்ன ஆயிற்று? இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையமே தமிழகத்தில் நுhறு கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்தார்களே; சட்டத்திற்குப் புறம்பான இந்தச் சம்பவங்களில் சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? ஒரு சில ஊடகங்களும், நாளேடுகளும் நடுநிலை தவறி, ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாக மாறி, தி.மு.க. வின் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை ஏவி விட்டு, பத்திரிகா தர்மத்தைக் காப்பாற்றுவதைப் போலப் பகல் வேடம் போட்டார்களே! இவ்வளவையும் மீறி, அனைத்து வகை ஆயுதப் பிரயோகங்களையும் எதிர்த்துப் போராடி தி.மு.கழகம் தற்போது பெற்ற வாக்குகளை விட அதிகமாகப் பெறுவதற்கான வழிவகைகள் உள்ளனவா? இருந்தால் சொல்லுங்கள், ஏற்றுக் கொள்கிறேன்!

வாக்காளர் பட்டியலில் இலட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் உள்ளிட்ட ஏராளமான தவறுகள் இருக்கின்றன என்று எத்தனை முறை புகார் மனுக்கள் தரப்பட்டன? கடைசியாக தேர்தலுக்கு முன்பு தரப்பட்ட வாக்காளர் பட்டியலை இப்போது வேண்டுமானாலும், “தி இந்து” இதழே எடுத்துப் பார்த்துக் கொள்ளட்டும். என்னுடைய திருவாரூர் தொகுதியில் மட்டும் 11,036 போலி வாக்காளர்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு, தேர்தல் ஆணையரிடமே அதன் நகல்கள் தரப்பட்டன. மற்ற தொகுதிகளை எடுத்துக் கொண்டால், ஆவடியில் 19,723 – கொளத்துhரில் 5,588 – திருப்போரூரில் 13,404 – பாலக்கோட்டில் 20,199 – வானூரில் 10,768 – விக்ரவாண்டியில் 11,592 – கள்ளக் குறிச்சியில் 21,247 – அவினாசியில் 23,270 – திருப்பூர் (வடக்கு) – 24,286 – திருப்பூர் தெற்கு 12,024 – பல்லடத்தில் 28,805 – உடுமலைப்பேட்டையில் 14,243 – குன்னம் 21,231 – சோளிங்கர் 22,227 – பெரம்பலுர் 25,105 – காங்கேயம் 23,956 – கலசப்பாக்கம் 20,098 என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு போலி வாக்காளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இருந்தார்கள். இதையெல்லாம் மீறித் தான் தி.மு. கழக அணி 100 வாக்குகளுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் இரண்டு தொகுதிகளிலும், 1000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் 8 இடங்களிலும், 5000 வாக்குகள் வித்தியாசத்தில் 21 இடங்களிலும், 10000 வாக்குகள் வித்தியாசத்தில் 22 இடங்களிலும் என்று 53 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. தி.மு. கழகமும், அ.தி.மு.க. வும் இந்தத் தேர்தலில் நேரடியாக போட்டியிட்ட 172 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் 89 இடங்களிலும், அ.தி.மு.க. 83 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஏன், உங்கள் “இந்து” இதழிலேயே என்று 20-5-2016 அன்று உண்மை நிலையைப் படம் பிடித்து காட்டியிருந்தீர்களே?

இன்னும் சொல்லப் போனால், உங்களுடைய 25ஆம் தேதிய இதழில், ஆளும் அதிமுக ஆட்சி அமைப்பதற்குத் தேவையான சாதாரண பெரும்பான்மையை சமீபத்தில் நடந்து முடிந்த தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்றுள்ள போதிலும், தொகுதி வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில், அதிமுக வேட்பாளர்களில் இரண்டு பேர், மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்குக்குக் குறைவான வாக்குகளைப் பெற்று டெபாசிட் தொகையைப் பறி கொடுத்துள்ளனர் என்றும், இதற்கு நேர் மாறாக தி.மு. கழகத்தால் நிறுத்தப்பட்டுள்ள 176 வேட்பாளர்களும் தங்கள் டெபாசிட் தொகையைத் திரும்ப பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது என்றும் எழுத வில்லையா?

நீங்களே உங்கள் கேள்வியில் கேட்டிருப்பது போல, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து விட்டது உண்மை தான். ஆளுங்கட்சியின் இராட்சசப் பணநாயகமும், தேர்தல் ஆணையத்தின் நயவஞ்சகச் செயல்பாடுகளுமே தி.மு.க. வின் வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறிக்க முக்கியமான காரணம்!

2. முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஆளும் கட்சி மீண்டும் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை சந்தித்து வந்த திமுக எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் யாவை? அவற்றை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

கருணாநிதி :- தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை எந்தச் சவாலையும் சாமர்த்தியமாக எதிர்கொள்ளும்; இப்போது தி.மு. கழகத்தை விட சவால்களைச் சந்திக்க வேண்டியவர்கள் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வினர் தான். ஆளுங்கட்சி 32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மை என்ற போதிலும், அங்கே வெற்றி பெற்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் 131 பேர் தான். அதிலும் ஒருவர் இறந்தது போக மீதி 130 பேர் தான். அதாவது தனிப் பெரும்பான்மைக்கு வேண்டிய 118 பேரை விட 12 பேர் தான் அங்கே அதிகம். எனவே அவர்களை எங்கும் அலை பாய விடாமல் பிடித்து வைத்திருக்க வேண்டிய சவால் அ.தி.மு.க. வுக்குத் தான் உண்டு. சர்க்கஸில் கம்பியில் நடப்பதைப் போன்ற நிலை அவர்களுக்கு! எங்களைப் பொறுத்தவரையில் 2011ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு வெறும் 23 இடங்களில் தான் தி.மு. கழகம் வெற்றி பெற்று, பிரதான எதிர்க் கட்சியாகக் கூட வர முடியாத நிலையிலே இருந்தோம். தற்போது தி.மு. கழகம் மட்டும் 89 உறுப்பினர்களைக் கொண்டு பேரவையிலே இடம் பெற்றுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி, கழக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளை ஆளுங்கட்சி எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்!

தமிழகச் சட்டப் பேரவையின் வரலாற்றில், தி.மு. கழகம் 1971-ல் 184 உறுப்பினர்களுடன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது; இப்போது 89 உறுப்பினர்களுடன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய எதிர்க் கட்சியாகவும் உருவெடுத்திருக்கிறது. ஆளுங் கட்சியாகவும், எதிர்க் கட்சியாகவும் தி.மு. கழகம் ஏற்படுத்தியிருக்கும் சரித்திரச் சான்றுகளை யாராலும் மறைத்து விட முடியாது!

3. செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய தாங்கள் “நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் யாருக்கும் பயப்படாத அடியாக துரோகம் விளைவிப்பவர்களுக்கு துணை போகாத அடியாக எடுத்து வைக்க சபதம் ஏற்க” அழைத்தீர்கள். இதன் அடிப்படை என்ன? தேர்தலில் சில இடங்களில் உள்கட்சி பிரச்சினைகள் இட்டு சென்ற தோல்வி குறித்து பேசினீர்களா?

கருணாநிதி :- ஆளுங்கட்சியின் அரட்டல், உருட்டல், பயமுறுத்தல், பாய்ச்சல், பொய் வழக்குகளைப் போடுதல் போன்ற ஜனநாயக விரோதச் செயல்முறைகளைத் தொடர்ந்து பார்த்து வெறுப்பு அரசியலைப் புரிந்து கொண்டிருப்பதால், அதற்கெல்லாம் பயப்படாத அடியாக, நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டேன். தி.மு. கழகத்திற்கு துரோகம் விளைத்தவர்கள், தற்போது விளைவிக்க நினைப்பவர்கள் ஆகியோருக்கு துணை போகக் கூடாது என்பதற்காக, துரோகம் விளைவிப்பவர்களுக்கு துணை போகாத அடியாக இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டேன். என்னுடைய உடன்பிறப்புகளுக்கு நான் கூறியதன் பொருள் நன்றாகவே விளங்கும். உள்கட்சி பிரச்சினையால் ஒருசில இடங்களில் கழக உறுப்பினர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தது உண்மை தான். அதுபற்றி செயற்குழுவில் சிலர் பேசத் தான் செய்தார்கள். அவ்வாறு கட்சிக்கு, கட்சியின் உறுப்பினர்களுக்குத் துரோகம் செய்தவர்கள் பற்றி கழகத் தலைமை நன்றாகப் புரிந்து கொள்ள இந்தச் செயற்குழு பெரிதும் உதவியாய் அமைந்தது. எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம்; துரோகிகளை மன்னிக்க முடியுமா?

4. பெரும்பாலும் தமிழகம் முழவதும் சிறப்பாக வாக்குகளை பெற்ற திமுக மேற்கு பகுதியில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் மட்டும் பின் தங்கியது. இதன் காரணம் என்ன? ஏனெனில் திமுக உருவாகிய போது அண்ணாவுக்கு ஆதரவாக அதிக அளவில் தீர்மானம் நிறைவேற்ற கிளைகள் இருந்த பகுதியான கொங்கு மண்டலத்தை எப்படி மீட்கப் போகிறீர்கள்?

கருணாநிதி :- தி.மு. கழகம், மேற்கு பகுதியில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல; கடந்த சில தேர்தல்களில் பின் தங்கி யிருப்பது உண்மை தான்! ஆனால் தேர்தலுக்கு முன்பு வந்த கருத்துக் கணிப்பு கள் இந்தத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு. கழகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றே அறிவித்திருந்தது. மேற்கு மண்டலம் பெருந்தொழில்கள், சிறு மற்றும் குறுந்தொழில்களைச் சார்ந்துள்ள மண்டலமாகும். மின்வெட்டு, அ.தி.மு.க. அரசின் தொழில் நேயமற்ற அணுகுமுறை ஆகியவற்றினால், மேற்கு மண்டலத் தொழில்கள் சிதைந்து, முதலீடுகள் நோய்வாய்ப்பட்டு, தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி அண்டை மாநிலங்களுக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைக் காரணமாகச் சொல்லப்பட்டது. அந்தக் கணிப்பையும் மீறி இந்த முறை அங்கே தி.மு.கழகம் பெருமளவில் வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம் “கன்டெய்னர்கள்” தானோ என்ற சந்தேகமும் உள்ளது. இத்தகைய கொடுமைகளிலிருந்து கொங்கு மண்டலத்தை மீட்டெடுக்க கழகம் உடனடியாக ஆக்க பூர்வமானதும், ஆரோக்கியமானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் கழகத் தலைமை நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது.

5. தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

கருணாநிதி:- தேர்தல் தள்ளி வைக்கப்படாமல் அந்த இரண்டு இடங்களிலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெற்றிருக்குமானால், இரண்டு இடங்களிலுமே தி.மு.கழகம் வெற்றி பெற்றிருக்கும். இருந்தாலும், தற்போது அங்கே தேர்தல் தள்ளி வைக்கப் பட்டதால் கழகத்தின் வெற்றி வாய்ப்பு குன்றிப் போய் விடாது என்றே நினைக்கிறேன்.

6. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடம் ஒதுக்காமல் திமுக கூடுதலான இடங்களில் தேர்தலில் நின்றிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. அது குறித்து உங்கள் நிலைபாடு என்ன?

கருணாநிதி :- அப்படி ஒரு கருத்து நிலவுவது உண்மை தான். 172 இடங்களில் போட்டியிட்ட தி.மு.கழகம் 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது 51.74 சதவிகிதம். தி.மு. கழகக் கூட்டணிக் கட்சிகள் 60 இடங்களில் போட்டி யிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது 15 சதவிகிதம்தான். இதற்குக் காரணமாக கூட்டணி கட்சிகளை நான் சிறிதும் குறை கூறவிரும்பவில்லை. அந்தத் தொகுதிகளில் தி.மு. கழக உறுப்பினர்கள் அவர்களை வெற்றி பெறச் செய்கின்ற அளவுக்கு அவர்களுடன் இணைந்து முழு மூச்சோடு உழைக்கவில்லையோ என்று தான் கருதுகிறேன்.

7. அதிமுக அரசு பதவியேற்பு விழாவின் போது எதிர்க்கட்சித் தலைவரான முக. ஸ்டாலினுக்கும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்து இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை என்று குற்றம் சாற்றியிருந்தீர்கள். அதற்கு விளக்கம் அளித்துள்ள முதல்வர் ஜெயலலிதா வேண்டுமென்று அதை செய்யவில்லை என்றும் தமிழகத்தின் நலன்களுக்காக திமுகவுடன் இணைந்து செயல்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் இது ஒரு புது தொடக்கமாக இருக்குமா?

கருணாநிதி:- முன்பொரு முறை, ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சிக்குக் கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் சென்றிருந்த போதும் உரிய மரியாதை கொடுத்து இருக்கை ஒதுக்கீடு செய்யப் படவில்லை. ஒவ்வொரு முறையும் தவறு நிகழ்வதும், அதற்கு நொண்டிச் சமாதானம் சொல்வதும் வாடிக்கையாகி விட்டது என்பதை மறந்து விட முடியாது. எனினும் இந்த முறை, தமிழகத்தின் நலன்களுக்காக தி.மு.க. வுடன் இணைந்து செயல்பட இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தின் நலன் களுக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஜெயலலிதா வோடு மட்டுமல்ல; யாருடனும் இணைந்து பணியாற்றத் தி.மு.கழகம் தயங்கியதில்லை என்பதை அதன் கடந்த கால வரலாறு எடுத்துக்காட்டும்.

 

கருணாநிதியின் இந்த பேட்டி குறித்து சமூகவலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அதிமுகவை உடைக்க  திமுக முயற்சிக்க போகிறதா என்றும் வினாக்கள் எழுந்துள்ளன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.