
ஜெயா ஜெயித்ததற்காக அறச்சீற்றத்தில் கொந்தளிக்கும் அதே நேரத்தில் திமுக தோற்றதற்காகவும் சிலர் வெம்பி வெடிப்பது நகைமுரண். ஜெயலலிதா எப்படி வெற்றி பெறத் தகுதி இல்லாத ஒருவரோ அதே அளவுக்கு தகுதியற்ற ஒருவர்தான் கருணாநிதியும் என்பது தான் மக்கள் சொல்லியிருக்கும் செய்தி. ஒப்பாரியையும், வசையையும், முத்திரை குத்தலையும் நிறுத்திவிட்டு கட்சி அபிமானிகளுக்கு இதில் யோசிக்க சில விஷயங்கள் உண்டு.
இப்போதும் கண்முன் இருக்கும் உதாரணங்கள் நிறைய:
கருணாநிதி ஒன்றும் எம்ஜியார் கிடையாது படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கு. விஜயகாந்த் நம்மிடம் வந்துதான் ஆக வேண்டும் என்கிற மிதப்பில் விடுதலை சிறுத்தைகளையும், கம்யூனிஸ்ட்களையும் இடது கையால் டீல் செய்தது திமுக தான். ஒரே நேரத்தில் திமுகவுக்கும் திருமாவுக்கும் சேர்த்து கண்ணீர் உகுப்பவர்களை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
தொண்ணூற்று மூன்று வயதிலும் நான் தான் முதல்வர் என்பதும், தயாநிதி மாறனுடன் சேர்ந்துகொண்டு பிரசாரத்துக்குப் போவதும் நெஞ்சழுத்தம் அல்லாது வேறென்ன? நாங்கள் வந்தால் மதுவிலக்கு என்று சொல்வது. சரி, ‘உங்கள் ஆட்கள் தானே மதுபான ஆலைகள் வைத்திருக்கிறார்கள்’ என்றால், ‘அப்படி வைத்திருப்பது தெரியவந்தால் அதை மூட நடவடிக்கை எடுப்போம்’ என்று பதில். இப்படியெல்லாம் சொல்ல எவ்வளவு தைரியம் வேண்டும். ஏன், தேர்தல் அறிவித்தவுடனேயே, ‘அந்த ஆலைகளை இப்போதே மூடுகிறோம்’ என்று ஸ்டண்ட் அடிக்க முடியாதா? அவ்வளவு என்ன அலட்சியம்?
திமுக தோற்றத்துக்குப் பின்னால் மநகூ என்ற பூச்செல்லாம் பெரிய விஷயமில்லை. அதிமுகவுக்கு இணையாக பணம் கொடுக்கும் நெட்வொர்க்கை திமுகவால் கையாள முடியவில்லை என்பது தான் உண்மை. ஜெயலலிதா தெரிந்தே அடித்தார். தோற்போம் என்று தெரிந்ததால் இறங்கி வந்து அடித்தார். இந்த முறையும் அதிமுக தாம் எப்போதும் வாங்கும் வாக்கை வாங்கியது. திமுகவும் குறையேதும் இல்லாமல் அது வாங்கக்கூடிய வாக்கை வாங்கத்தான் செய்தது. அதைத்தாண்டி ‘ஜெயிக்கும் வாக்கு’ என்பது எப்போதும் வாங்கும் உறுதியான வாக்குக்கு மேலே உள்ள ‘மிதக்கும் வாக்கு’. அதை ஜெயலலிதா காசு கொடுத்து வாங்கியிருக்கிறார். புனிதப் பசு போல தோற்றம் காட்டும் முகத்துக்குப் பின்னால் தனது கோரைப்பல்லை அவர் மறைத்துக்கொண்டிருக்கிறார். எப்போதும் போல.
வாக்குக்குப் பணம் கொடுக்கும் விஷயத்தில் திமுக அப்பட்டமாகத் தோற்றிருக்கிறது. அதற்காக பணம் கொடுக்கவில்லை என்று பொருளல்ல. அதிமுகவுடன் இந்த விஷயத்தில் அது போட்டியிட முடியவில்லை. இது திமுகவின் உள்கட்டமைப்புத் தோல்வி. இந்த தோல்வியின் முனையைப் பற்றிக்கொண்டு போனால், செல்லரித்துப் போன கட்சியின் உண்மை முகத்தைக் கண்டறிய முடியும். ஒரே நேரத்தில் இரண்டு வேடத்தைப் போட முயல்கிறது திமுக. அதுதான் பிரச்சினை.
மூன்றாவது அணி என்று ஒன்று உருவாகிவிடக்கூடாது என்று தீவிரமாக செயல்படுவதில், அந்த அணியின் முக்கியமானவர்களைக் குறிவைத்து தோற்கடிப்பதில் காட்டிய வீரியத்தை, ஜெயா மீது திருப்பியிருந்தால் திமுக வென்றிருக்க முடியும். வைகோவை துரோகியாக சித்தரிப்பதில் காட்டிய மூர்க்கத்தை, அவரைப்போல் ஒருவரை அதிமுகவுக்கு எதிராக உருவாக்குவதில் காட்டியிருக்க வேண்டாமா?
மூன்றாவது அணி பலவீனமாவதோ அல்லது அத்தகைய அணிகளுடனான கூட்டணி அவசியமோ அதிமுகவை விட திமுகவுக்கு தான் எப்போதும் தேவை. 2021 லும் இப்படியான அணிச் சேர்க்கையே உருவானால் மீண்டும் திமுக தோற்கவே செய்யும். தனியாக ஜெயிக்கும் வலு இப்போதைக்கு திமுகவுக்கு இல்லை. அதற்கான அற அடிப்படை கொண்ட அணியும் அது கிடையாது. இதன் பொருள் அதிமுக அற அடிப்படை கொண்ட கட்சி என்பதல்ல. பொறுக்கித்தனத்தில் சற்றே முன்பின் உள்ள இரண்டில் ஒன்றுக்காக கண்ணீர் உகுக்க வேண்டிய தேவை அரசியலை கவனிப்பவர்களுக்கு கட்டாயமில்லை. இந்தத் தோல்வி முகத்தில் திமுகவை விமர்சிப்பவர்கள் மீது பாய்கிறார்கள் சிலர். அவர்களுக்கான பதிலே இது.
திமுக நினைப்பது போல அல்லாமல் ஜெயலலிதா பூதாகரமாக வளர்ந்திருக்கிறார். காலில் விழும் கட்சிக்காரர்கள் பிம்பத்தைக் கலைத்துவிட்டு பார்த்தால், அவர்கள் இரக்கமற்ற கொடூரர்களாக களத்தில் வலம் வருகிறார்கள். வாக்காளர்களுக்கு ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கும் அளவுக்கு அவர்கள் நிலை பெற்றிருக்கிறார்கள்.
பாமக வலுவாக இருந்த தொகுதிகளில் ஜெயலலிதா எப்படிப்பட்ட ஆட்களை நிறுத்தியிருக்கிறார் என்று பாருங்கள். ஒட்டுமொத்தமாக அவரது வேட்பாளர்களில் வன்னியர்களின் எண்ணிக்கையைக் கூட்டியதன் மூலம் அன்புமணிக்கு சாவுமணி அடித்திருக்கிறார். வேட்பாளர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார் என்று சமூக ஊடகங்கள் கிண்டலடித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவர் செய்த சில மாற்றங்கள் புத்திசாலித்தனமானவை என்று இப்போது சிலர் ஒப்புக்கொள்கிறார்கள்.
இந்த தேர்தல் வெற்றி ஜெயாவுக்கு ஆச்சர்யமாகக் கூட இருக்கலாம். அதற்கான சுதந்திரம் அவருக்கு உண்டு. ஆனால் இந்தத் தோல்வி திமுகவுக்கு ஆச்சர்யமளித்தால், அவர்கள் களத்தில் இருந்திருக்கவில்லை என்று பொருள். நான்கு நாட்கள் விலையேறிய சன் டிவி பங்குகளுக்காக புளகாங்கிதம் அடைந்துவிட்டு பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்படத் தொடங்க வேண்டும். பட்டி பார்ப்பதல்ல, ஒரு பகுதியையே அகற்றி விட்டு புதிதாக்க வேண்டிய தேவை கட்சிக்கு இருக்கிறது. இத்தைகைய எதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியாமல், அபிமானிகளுக்கு கட்சி அபிமானம் கண்ணை மறைத்தால் முட்டிக்கொள்வதைத் தவிர மாற்று வழியில்லை.
ஜி. கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்; அரசியல் விமர்சகர்.
வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள். இரண்டும்எதிர் வெளியீடுகள்.
very nicely written good, neutral analysis
LikeLike