
அதிமுக பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிறது. திமுக வலிமையான எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது. தலித் கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது இடதுசாரிகள் கூட இல்லாத சட்டசபையாகியிருக்கிறது. இது தொடர்பாக பொறுமையாக பின்னால் எழுத வேண்டும்.
இப்போதைக்கு சிறு கணக்கீடு மட்டும் இங்கே.
இத்தேர்தலில் தலித் தலைவர்கள் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். திருமாவளவன் 87,டாக்டர் கிருஷ்ணசாமி 493,சிவகாமி 6853 ஆகிய வாக்குகள் வித்தியாசங்களிலேயே தோற்றிருக்கின்றார்கள்.
திருமாவளவனுக்கு காட்டுமன்னார்கோயிலும் கிருஷ்ணசாமிக்கு ஒட்டப்பிடாரமும் செல்வாக்கான தொகுதிகள். தங்களுக்கிருக்கும் ஓட்டுகளோடு மற்றொரு கட்சியின் கணிசமான வாக்குகள் சேர்ந்தால் அவர்கள் வெற்றிபெற்றுவிடமுடியும்.அதனால்தான் இருவரும் இப்போது கூட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கின்றனர்.
மாலை ஏடு ஒன்றிலும்(20.5.2016) முகநூல் பக்கங்கள் சிலவற்றிலும் பகிரப்பட்டிருந்த சில குறிப்புகளிலும் ஒரு புள்ளி விவரம் திரும்ப திரும்ப சொல்லப்பட்டிருக்கிறது . திமுக தோல்வியடைந்தமைக்கு காங்கிரஸ் தொகுதிகளே காரணமாயிருக்கின்றன என்பதே அது.அதாவது காங்கிரஸின் ஓட்டு திமுகவிற்கு மாறவில்லை என்பதே அவற்றின் பொருள். காங்கிரஸின் வாக்கு வங்கி எவ்வளவு? அக்கட்சிக்கு திமுக இத்தனை இடங்கள் அளித்ததன் பொருளென்ன? என்கிற கேள்விகளையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு ஊடகங்கள் சொல்லும் இவ்விஷயத்தை வேறுமாதிரியும் பார்க்கவழியிருக்கிறது.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட 41 தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. மற்ற 33 தொகுதிகளில் தோற்றுள்ளன. இந்த 33லும் திமுக போட்டியிட்டு இருந்தால் அப்படியே அது வெற்றிபெற்று 131 இடத்தை பெற்றிருக்கும் என்கிற ஆசையினால் இக்கணிப்பை வெளியிடுகின்றனர் .ஆனால் உண்மை இது மட்டும்தானா?
காங்கிரஸ் வெற்றி பெற்ற 8 தொகுதிகளில் குளச்சல், வள்ளியூர், விளவங்கோடு, நாங்குநேரி போன்ற 4தொகுதிகளும் திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவை. சிற்சில தேர்தல்களைத் தவிர்த்து இந்நான்கும் பாரம்பரிய காங்கிரஸ் வாக்குவங்கி உள்ள தொகுதிகளாகும். அங்கிருக்கும் காங்கிரசுக்கான வாக்குவங்கியோடு ஏதாவதொரு பெரிய கட்சியொன்றின் ஓட்டுகள் சிற்சில சேதாரங்கள் நீங்க கிடைத்தாலும் காங்கிரஸ் வெற்றி பெறமுடியும் .அந்தவகையில் இப்போது திமுகவின் ஓட்டுகள் சேர்ந்ததினால் வென்றுள்ளன. பாஜகவின் செல்வாக்கு உள்ள இம்மாவட்டத்தில் அதற்கு எதிரான காங்கிரசுக்கும் செல்வாக்கு இருப்பது இயல்பே (இம்மாவட்டத்தின் பல தொகுதிகளில் பெரிய கட்சிகளின் கூட்டணியில்லாமலேயே பாஜக இரண்டாமிடத்திற்கு வந்துள்ளது.பெரிய கட்சியோடு கூட்டணி சேர்ந்திருந்தால் இங்கு பாஜகவும் வென்றிருக்கமுடியும் என்பதே இதன் பொருள்)
அதற்கேற்ப இம்முறை திருச்சபையும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தமை குறிப்ப்பிடத்தக்கது.
காங்கிரஸ் வென்ற பிற தொகுதிகளில் காரைக்குடி கே. ஆர். ராமசாமி ‘தனிப்பட்ட’ செல்வாக்கு கொண்ட வேட்பாளர்.இப்பகுதியில் 6 முறை வென்றிருப்பவர்.அதேபோல உதகை தொகுதி பாஜகவும் காங்கிரசும் சமமாக உள்ளது.ஏற்கனவே காங்கிரஸ் வென்ற தொகுதி. முதுகுளத்தூர் மலேசியா பாண்டியன் உள்ளூரில் செல்வாக்கான நபர்.(இதுவும் பழைய காங்கிரஸ் தொகுதிதான்)இங்கு அதிமுகவின் உள்ளூர் ஒத்துழைப்பின்மை அது தோல்வியடைய காரணமாயிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.தவிர திமுகவின் செல்வாக்கு இல்லாத மேற்கு மாவட்டத்தின் தாராபுரத்தில் காங்கிரஸ் வென்றுள்ளது. மொத்தத்தில் பார்த்தால் வென்ற 8 தொகுதிகளிலும் சிற்சில வித்தியாசங்களோடு ஏற்கனவே காங்கிரஸ் பலம் பெற்றிருந்து திமுக போன்ற பெரிய கட்சி ஒன்றின் ஓட்டையும் பெற்றதனால் இப்போது வென்றுள்ளது.
தோற்ற 33 தொகுதிகளில் பெரும்பாலும் காங்கிரசுக்கு சொந்த செல்வாக்கு உள்ள தொகுதிகள் குறைவே .திமுக போட்டியிட்ட தொகுதிகளில் போடப்பட்ட திமுக ஓட்டுகள், காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் பகிரப்படவில்லை. 33தொகுதிகளின் தோல்வி இதையே காட்டுகிறது. உண்மையில் பார்த்தால் திமுக தான் காங்கிரஸின் காலை வாரியிருக்கிறது.ஆனால் ஊடகங்கள் திமுகவிற்கு காங்கிரஸ் வாக்களிக்கவில்லை என்னும் கருத்தை வலிய கட்டமைக்கின்றன. இதேபோல திமுகவின் பிற கூட்டணிக்கட்சி தோல்விகளையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் 41தொகுதிகள் நீங்கலாக மனிதநேய மக்கள் கட்சி 4 தொகுதிகள்; மதேமுதிக 3 தொகுதிகள்; சமூக சமத்துவப்படை, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பொன்குமார் கட்சி ஆகியவற்றுக்கு முறையே ஒவ்வொரு இடங்கள் ஒதுக்கப்பட்டன .அவற்றில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (கடையநல்லூரில் 1194 -வித்தியாசத்தில்) வென்ற ஓரிடம் தவிர மற்ற இடங்கள் எவற்றிலும் கூட்டணிகட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை.
ஒப்பிட்டளவில் சிறுபான்மையினரின் வாக்குபலம் திமுகவுக்கே அதிகம். அதிலும் இரண்டு முஸ்லீம் அமைப்புகள் திமுக கூட்டணியிலேயே இருந்தன.முஸ்லீம் ஓட்டுகள் பெரும்பான்மையாக திண்டிருக்கும்.பிற ஓட்டுகள் தான்(திமுக ஓட்டு)போதுமான அளவு வரவில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில்தான் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும் தோல்வியடைந்திருக்கின்றன. குறிப்பாக ஜவஹிருல்லா 33,222 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பது பெரிய வருத்தம். (இதற்கிணையாக மமகவிலிருந்து பிரிந்து அதிமுகவில் இரண்டிடம் பெற்ற தமிமுன் அன்சாரி கட்சி ஓரிடத்தில் வென்றிருக்கிறது.)ஆனால் கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 3இடங்கள் பெற்று அதில் ராமநாதபுரம் தொகுதியில் 15157 வாக்குகள் வித்தியாசத்திலும் ஆம்பூர் தொகுதியில் 5091 வாக்குகள் வித்தியாசத்திலும மமக வென்றது.
புதிய தமிழகமும் இப்படித்தான். கிருஷ்ணசாமி மட்டுமே 493 வாக்குகள் என்ற குறைந்த வித்தியாசத்தில் தோற்றிருக்கிறா(மறுவாக்குப்பதிவு கோரி நீதிமன்றம் செல்லப்போவதாக அவர் கூறியிருப்பது வேறு விசயம்) வாசுதேவ நல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் முறையே 18758, 36673, 35301 என்ற பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார்கள்.ஆனால் தென்மாவட்ட தலித் ஓட்டுகள் அதிமுகவை விட திமுகவிற்கே கிடைத்துள்ளன.பரமக்குடி துப்பாக்கிச் சூடு போன்றவை மட்டுமல்லாது புதிய தமிழகம் திமுக கூட்டணியில் இருந்ததும் காரணங்கள். பொதுவாக கிருஷ்ணசாமியும் அவர் கட்சியும் ஜெயலலிதாவாலோ அவர் கட்சியில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோராலோ விரும்பப்படுவதில்லை. ஆனால் அக்கட்சி 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்கள் பெற்று ஒட்டபிடாரத்தில் கிருஷ்ணசாமி 25126 வாக்குகள் வித்தியாசத்திலும் நிலக்கோட்டையில் ராமசாமி இருபத்தைந்தாயிரத்து சொச்சம் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றனர்.
அதேபோல்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும்.2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை .மாறாக திமுக வெறுப்பு – அதிமுக ஆதரவு அலை இல்லாத 2006 தேர்தலில் அதிமுக அணியில் போட்டியிட்டு விசி கட்சியின் செல்வாக்கு அதிகமிகுந்த காட்டுமன்னார் கோவில் மங்களூர் தொகுதியில் அதிமுகவின் ஓட்டுகளை சேர்த்துக்கொண்டு 10,000த்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றன.
2001ஆம் ஆண்டு பெரும் தலித் எழுச்சியின் தொடக்க நிலையை ஒட்டி முதல் முறையாக சட்டமன்றத்தேர்தலில் அக்கட்சி திமுக கூட்டணியில் 9ல்போட்டியிட்டது .அதில் அக்கட்சி செல்வாக்கோடு இருந்த மங்களூர் தொகுதியில் மட்டும் 2000 வாக்கு வித்தியாசத்தில் திருமா வெல்லும் அளவிற்கே திமுக கூட்டணி ‘உதவியது’.
அதேபோல்தான் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் 3 முறை தனித்து போட்டியிட்டு பெரும்பான்மை தலித் ஓட்டுகளை திருமா திரட்டியிருந்தார். அவர் திரட்டியிருந்த தலித் ஓட்டுகளோடு எந்த கட்சி ஓட்டும் ஓரளவு சேர்த்தாலே அவர் வெற்றிபெறமுடியும் என்ற நிலை இருந்தது.அந்த எழுச்சியின் தொடர்ச்சியில் நான்காவது முறையாக அவர் சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக என்ற பெரிய கட்சிகூட்டணியோடு வென்றார். ஆனால் அடுத்த நாடாளுமன்றத்தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு இடம் போராடிபெற்று இரண்டிலும் அக்கட்சி தோற்றது.ஏறக்குறைய திமுக அதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணியில் பாமகவின் அனுபவமும் இதுவே.2011 தேர்தலில் திமுகவோடு இணைந்தும் சொந்த செல்வாக்கு உள்ள 3 தொகுதிகளில் மட்டுமே வென்றது.
மொத்தத்தில் திமுகவோடு கூட்டணி சேர்வதால் கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்கும் நியாயத்தைவிட ,கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு வழங்கும் நியாயமே அதிகம் .திமுக ஓட்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு அறவே பகிரப்படுவதே இல்லை என்பது இதன் பொருளல்ல.போதுமான அளவுக்கு (வெற்றிபெறும் அளவிற்கு) பகிரப்படுவதில்லை என்பதே உண்மை.இதற்கான மாற்று வாசிப்பு கூட இருக்கலாம்.
திமுக நின்றால் ஜெயிக்கவைக்க முடியும் என்ற நிலை ,கூட்டணி என்றால் தோற்பார்கள் என்பது எதைக் காட்டுகிறது?திமுக ஓட்டுகள் கூட்டணிக் கட்சிகளுக்கு மாறுவதில்லை என்பதையே காட்டுகின்றன.கொள்கை நீதியாக அதிமுகவை விட திமுகவே தலித் சிறுபான்மை கட்சிகளுக்கு சாதகமானவை என்றொரு கருத்து அவ்வப்போது சொல்லபடுவதுண்டு. ஆனால் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை இதுகாறும் திமுகவை விட அதிமுகவே சாதகமாக இருந்துள்ளது.விசித்திரங்ள் நம்முடியாத இடங்களில் நடப்பது தானே!பலவேளைகளில் செல்வாக்கு இல்லாத கட்சிகள் கூட அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டால் இடம்பெற்றுவிட்ட காரணத்திற்காக அதிமுக அலையில் கரையேறுவதுண்டு.ஆனால் திமுக வில் கூட்டணி சேர்ந்த கட்சியின் ஓட்டு பயன்படுத்தப்படும்.திமுக ஓட்டு அவர்களுக்கு பயன்படாத உதாரணங்களே அதிகம்.
திமுகவின் ‘ஜனநாயகம்’ தலைமையைத் தாண்டி அடி மட்டத்தில் கூட்டணிகளையும் காலைவாருவதில் முடிகிறது. அதிமுகவின் ‘சர்வாதிகாரம்’ கட்சித் தலைமையின் கட்டளைக்கு கீழ்படிய தொண்டர்களை அச்சமூட்டுகிறது போலும்.
இப்பதிவில் காட்டப்பட்ட சான்றுகள் ஒருபுறம்நிற்க ,அதிமுகவோடு கூட்டணி வைத்தால் அதிமுகவின் ஓட்டுகளை பெற முடியும். திமுகவோடு கூட்டணி வைத்தால் அக்கட்சியின் ஓட்டுகளை பெறமுடியாது என்றொரு பொதுவான ‘நம்பிக்கை’ தமிழ்நாட்டு தேர்தல்சார் தொண்டர்களிடையே இப்போதும் இருப்பதை வெகுஜன சொல்லாடலாக கவனத்தில் எடுத்துப் பொறுத்திப் பார்த்தும் இதை புரிந்துக் கொள்ளலாம்.
(இப்பதிவை அதிமுக ஆதரவிற்காக எழுதப்பட்டதாக நினைக்கவேண்டாம்.தமிழில் கொள்கை என்ற பெயரில் ஒற்றையான முடிவுகளை நோக்கிய பிரகடனங்களை மறுத்து வெவ்வேறு அனுபவங்களை காட்டும் விதத்திற்காக எழுதப்பட்டது.)
ஸ்டாலின் ராஜாங்கம், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
இவருடைய நூல்கள் :
2. ஆரிய உதடும் உனது திராவிட உதடும் உனது
4. சனநாயகமற்ற சனநாயகம்
காங்கிரசுக்கு வாக்களிக்க விரும்பாத நடுநிலை வாக்காளர்கள் வேறு கட்சிகளுக்கு போய் விட்டது தான் உண்மை முகனூலில் ஒருபதிவு
எப்படியெல்லாம் நடக்குது…
ஓட்டுப் போடபோனா மெஷின்ல உதயசூரியன் இல்லை. ரெட்டை இலைக்குப் போட்டுட்டேன் என்கிறான் ஒரு இளைஞன்…
அது காங்கிரஸ் தொகுதி, இதுதான் நிஜம் காங்கிரசுக்கு சப்பை கட்டு கட்ட தேவையில்லை
LikeLike