அமைச்சரவையில் பெண்களுக்கான இடம்: பெண்கள் ஏன் இரண்டாம்பட்சமாகவே நடத்தப்படுகிறார்கள்?

சுகந்தி நாச்சியாள் 

சுகந்தி நாச்சியாள்
சுகந்தி நாச்சியாள்

முப்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து ஆளுங்கட்சியாக இருந்த கட்சியே ஆளும்கட்சியாக மீணும் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது என்று சந்தோஷப்பட்டுக்கொண்டே, பெண்களின் தலையில் குட்டு வைக்கிறார்கள்.

தமிழக அமைச்சரவைப் பட்டியலை அறிவித்துவிட்டார்கள். மிகவும் சந்தோஷப்படக் கூடிய விஷயமாக மூன்று பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற டாக்டர் சரோஜா, ஸ்ரீரங்கம் இடைதேர்தலில் வெற்றிக்கனியைப் பறித்து வந்து அம்மாவிடம் சமர்பித்த எஸ். வளர்மதி, சாதி சான்றிதழை மாற்றியதாகக் கூறப்பட்ட சங்கரன்கோயில் ராஜலட்சுமி ஆகியோர் தான் அந்த மூன்று அமைச்சர்கள்.

இவர்கள் மூவரும் முதல்முறையாக அமைச்சர்களாகிறார்கள். டாக்டர் சரோஜாவுக்கு சமூகநலத்துறையும், ராஜலட்சுமிக்கு ஆதிதிராவிட நலத்துறையும், எஸ். வளர்மதிக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளுக்கு மேலாகியும், பெண்கள் அரசியல் முதல் ஆவியியல் வரை பலதுறைகளில் கால்பதித்து ஆண்களுக்கு நிகராக தங்கள் திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் பெண்களுக்கு ஏன் திரும்பத் திரும்ப அதே துறையே வழங்கப்படுகிறது? கடந்த ஆட்சியில் பா. வளர்மதிக்கு இதே சமூகநலத்துறையும் சத்துணவும். கோகுல இந்திராவுக்கு ஜவுளித்துறைதான் கொடுக்கப்பட்டது.

அதற்கு முன்னிருந்த திமுக ஆட்சியில் பூங்கோதை ஆலடி அருணாவுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை கொடுத்தது. ஆனால் அவர் தொழில்முறை மருத்துவர். தமிழரசிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டது. அரசியலில் நல்லஅனுபவமும், களத்தில் இறங்கி செயல்படும் செயல் வீராங்கனையாகவுமிருந்த சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஜவுளித்துறைதான் வழங்கப்பட்டது. வாரிசு அரசியலை அடியொற்றி வந்த கீதாஜீவனுக்கும் சமூகநலத்துறையைத்தான்  திமுக அரசு வழங்கி கௌரவித்தது. சிறந்த பேச்சாளாரான எஸ். பி. சற்குணபாண்டியனுக்கும் அதே சமூகநலத்துறைதான் வழங்கப்பட்டது. இந்த சமூகநலத்துறையின் கீழ்தான் சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு எல்லா நல உதவிகளையும் வழங்கி அவர்களை மேம்படையச் செய்வதுதான் இவர்களது வேலை. அடித்தட்டு மக்களுக்கான கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு என பலவற்றுக்கும் இந்ததுறைதான் பணிபுரிய வேண்டும். இது கிட்டத்தட்ட ஒரு சேவைத்துறை. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை இவர்கள்தான் செயல்படுத்துவார்கள்.

இன்றளவும் வீடு என்றாலே அங்கும் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை பெண்கள் கையில்தான் இருக்கிறது. ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டாலும் இதே வேலையைத்தான் செய்ய வேண்டும். அதனால்தான் ஆண் முதலமைச்சர் ஆக இருந்தாலும் சரி, பெண் முதலமைச்சர் ஆக இருந்தாலும் சரி பெண் அமைச்சர்களுக்கு இப்படி ஒரு மென்மையான துறையையே கொடுப்பது என்பது வழக்கமாகிவிட்டது. இது ’பெண் என்றால் இவ்வளவுதான்’ என்று சமூகம் காலம்காலமாக நம்பி வரும் மூடநம்பிக்கையை வலுப்படுத்துவதாகவே உள்ளது. பெண்களுக்கு அரசியல் தெரியும் போது, அறிவியல் புரியும்போது…. ஏன் அவர்களை ஒரு ஓரமாகவே தள்ளிவைத்திருக்க வேண்டும்?

முதமுறையாக அமைச்சராகும் ஆணுக்கு உடனே பொறுப்பு மிகுந்த கல்வித்துறை வழங்கப்படுகிறது. காலம்காலமாக ஆண்களே இந்தத்துறையில் இருப்பதனால்தான், பள்ளிக்கூடங்களில் கழிப்பறை மிக முக்கியம் என்கிற உண்மை இன்றுவரை புரியாமலேயே இருக்கிறது. கழிவறை இல்லாததால், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்ட பெண்கள் கிராமங்கள்தோறும் இருக்கிறார்கள். அதிலும் பெண் ஆசிரியர்கள் படும்பாடு சொல்லிமாளாது. இப்படி பல நுண்ணிய விஷயங்களை கூர்ந்துநோக்கும் திறன் ஆணை விட பெண்ணுக்கு அதிகம் என்று அறிவியலும் சொல்லிவிட்டது; அனுபவமும் சொல்லிவிட்டது. இருந்தாலும் ஆண்கள்தான் இந்தந்தத் துறையை கையாள வேண்டும் என்று ஏன் நிர்ணயம் செய்ய வெண்டும்? அப்படியானால் பெண்களுக்கு பொதுப்பணித்துறை, நிதித்துறை, சட்டத்துறை போன்ற பெரிய துறைகளில் ஆளுமை குறைவு என்று சொல்லாமல் சொல்கிறீர்களா?

1950-60 களில் தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராக காமராஜர் தலைமையிலான ஆட்சியில் பொறுப்பேற்ற ஜோதி பொது சுகாதாரம், மதுவிலக்கு மற்றும் பெண்கள் நல அமைச்சராகப் பொறுப்பேற்று தன்னை நிரூபித்தார்.

தமிழ்நாட்டில் இன்று மதுவிலக்கு பெரும் பிரச்னையாக மாறிவரும் சூழலில், அதை ஒரு ஆணை நம்பிக் கொடுத்திருப்பதை விட, ஒரு பெண்ணிடம் கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக மிகச் சரியான தீர்வு கிடைக்கும். ஆனால் அதெல்லாம் நடக்குமா?

இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி இரண்டாம்பட்சமாகவே பெண்களை எல்லா இடங்களிலுமே நடத்துவீர்கள்?

சுகந்தி நாச்சியாள் , ஊடகவியலாளர்.

இவருடைய வலைத்தளம்: http://natchiyal.blogspot.in

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.