மக்கள் நலக்கூட்டணி என்ற மாற்று முயற்சி படுதோல்வி அடைந்ததாக ஊடகங்களால், இணையதள அறிவாளிகளால் எடுத்துரைக்கப்படும் மூடத்தனமான பரப்புரைகளுக்கு பின்னால், மக்கள் நலக்கூட்டணி ஏற்படுத்தி பெரிய அதிர்வு வெகு சாமர்த்தியமாக மறைக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
மக்கள் நலக்கூட்டணி உதயமானது முதலே நிலவிய தி.மு.க தரப்பு பதட்டங்களும், அ.தி.மு.க தரப்பின் அமைதியும் சமூக வளைதளத்தை உபயோகிக்கும் சாமானியருக்கும் தெரிந்திருக்கும்.
நாம் முன்பே குறிப்பிட்டதை போல எந்த காரணத்தாலும் அ.தி.மு.க தொண்டர்கள் வாக்கை மாற்ற மாட்டார்கள் என்ற எதார்த்தமறிந்த காரணத்தால் அ.தி.மு.க தரப்பிலிருந்து மக்கள் நலக்கூட்டணி பற்றிய எந்தவொரு விமர்சனமும் வெளிவரவில்லை. ஆனால் தி.மு.க தரப்பு சொந்த வாக்கு பறிபோவதை போலவே மக்கள் நலக்கூட்டணி குறித்த தமது புலம்பலை ஏதோ ஒருவகையில் முன்வைத்தபடியேதான் இருந்தது..
தி.மு.க வை தோற்கடிக்கவே மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டது என்ற புலம்பலின் உச்சமாக தி.மு.க புணைந்த புதுக்கதைதான் 1500 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டு வைகோ மக்கள் நலக்கூட்டணியை அமைத்தார் என்பது.
உள்ளபடியே ஒரு மாற்று அணிக்கான சிந்தனை உருவானது திருமாவளனிடம் இருந்துதான் என்ற உண்மையை எதன் பொருட்டோ இவர்கள் கடக்க முயலலாம். ஆனால் நம்மால் அந்த உண்மையை புதுப்பிக்காமல் இருக்கமுடியாது. ஆட்சியதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் கோரிக்கையை, காலகாலமாக சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கத்தின் ஆண்டைகளுக்கு எதிரான கலகக்குரலுக்கு ஒப்பாகதான் நம்மால் பார்க்கமுடிகிறது.
”இல்லையில்லை..
நான்தான் உப்பரிகையில் நிற்பேன், உனக்கு துதிபாட விருப்பமில்லாவிட்டால் கூட்டத்தில் ஒருவனாய் நின்று எனை தரிசிக்கலாம்.
நான்தான் பல்லக்கில் செல்லமுடியும், உனக்கு சுமக்க விருப்பமில்லாவிட்டால் ஊர்வலத்தில் ஒருவனாய் நடந்து வரலாம்.
நானும், எனது பிள்ளைகளும், எனது பேரக்குழந்தைகளும்தான் அந்தப்புரத்தில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள தகுதியானவர்கள், உனக்கு சாமரம் வீச விருப்பமில்லாவிட்டால் போர்க்களத்தில் நின்றுக்கொள்..”
என்பதாகதானே ஒரு ஆண்டையின் பதில் இருக்கும். அந்த கறாரான பதிலைதானே கலைஞர் தரப்பு கூறியது…
சரி.. தி.மு.க வுடனான நமது கேள்வி தற்போது இதுதான்..
உப்பரிகையை, பல்லக்கை, அந்தப்புரத்தை பட்டா போட்டிருந்த உங்களது உரிமை எப்படி யாரால் பறிபோனது என்பதை தற்போது விளக்குங்கள்.
வடமாவட்டங்களில் பெருமளவு வன்னியர்களைக் கொண்ட கட்சி தி.மு.க என்ற எதார்த்தத்தின்படி பார்த்தால், பா.ம.க தனியாக நிற்பதால்தான் தி.மு.க வுக்கு இழப்பு அதிகம். அந்த காரணத்திற்காக பா.ம.க வை அ.தி.மு.க வின் C Team என்று சொல்கிற துணிச்சல் தி.மு.க வினருக்கு இருக்கிறதா? சொன்னால் ஆபாச அர்ச்சனை முதல், அடிஉதை வரை வாங்கி கட்டிக்கொள்ள வேண்டியிருக்குமே. பா.ம.க தொண்டர்களின் அணுகுமுறை வேறாயிற்றே..
ஆக…கடந்த காலங்களில் சாதியடிப்படையில் தமது தொண்டர்கள் வாக்கை பா.ம.க வுக்கோ வேறு அமைப்புகளுக்கோ மாற்றிப்போடுவார்கள் என்ற எதார்த்தமறிந்த பதட்டம், அ.தி.மு.க தொண்டர்கள் எதற்கும் அசைந்துகொடுக்கமாட்டார்கள் என்ற வரலாறு கூறும் பாடம் ஆகியனவே மக்கள் நலக்கூட்டணி பற்றிய செய்திகளை நாளுக்குநாள் தி.மு.க தரப்பு பேசக் காரணமானது.
தி.மு.க வை வெல்ல உருவாக்கப்பட்ட B Team தான் ம.ந.கூட்டணி என்ற குற்றச்சாட்டை திரும்ப திரும்ப கூறுவதன் மூலமாக, தி.மு.க தமது தோல்லிக்கு மக்கள் நலக்கூட்டணியே காரணம் என்பதை ஒப்புகொள்கிறது. வைகோ தமக்கிடப்பட்ட வேலையை சரியாக செய்ததாக திரும்ப திரும்ப இவர்கள் திரிப்பதன் மூலமாக, திருமாவளவனை இவர்கள் பல இடங்களில் குத்திக் கிழித்து காயப்படுத்தியிருப்பதையும், திருமாவளவனின் திருப்பியடி பார்முலாதான் இந்த மாற்று அணி என்பதையும் இவர்கள் சாமர்த்திமாகவே மறைக்கிறார்கள்.
*அனைத்து சமுதாய கூட்டணி என்ற பெயரில் மருத்துவர் ராமதாசு வன்முறையை, காழ்புணர்ச்சி அரசியலை ஊர் ஊராக சென்று பரப்பியபோது வாய்மூடி இருந்த தி.மு.க, மருத்துவர் ராமதாசுக்கு கடலூரில் நுழைய தடைவிதிக்கப்பட்டபோது சனநாயக படுகொலை என்று கூறி பா.ம.க வுக்கு கூட்டணி சமிக்கை செய்தது. பத்தாண்டுகளாக கூட்டணியில் அங்கம் வகித்த திருமாவளவன் பொருட்படுத்தப்படவில்லை.
இதே தி.மு.க திருமாவளவனை கடலூருக்குள் நுழைய விடாது ஒருநேரத்தில் தடைவிதித்தது என்பது தனிக்கதை.
*ஒரு சீட்டை கொடுத்து அவமானப்படுத்தியது, பேச்சுவார்த்தை நடத்தியவர்களிடம் இதுவே அதிகம் என்ற ரீதியில் துரைமுருகன் நையாண்டி செய்தது எல்லாமே நாம் எல்லோருமே அறிந்த கதைதான்.
*தஞ்சைக்கு சென்ற திருமாவளவனின் மீது மீது செங்குட்டுவன் வாண்டையாரின் ஆட்கள் கொலை முயற்சிக்கான தாக்குதலை நடத்தியபோது, பல அமைப்புகளும் கண்டித்தபோதும், குறிப்பிட்ட சமுதாயத்தின் ஓட்டுகளை கருத்தில்கொண்டு கள்ள மவுனம் காத்தவர்கள் இவர்கள் என்பது கூட்டணி தர்மத்தை மதிக்கிற இவர்களின் மாண்புக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.
இப்படி நிறைய கூறமுடியும்.
ஆக தேர்தல் தோல்விவரை B team என்று கதையளந்த பலரும், தற்போது தி.மு.க வோடு இணைந்திருந்தால் திருமாவளவன் இப்படி ஆகியிருக்கமாட்டார்கள் என்று மீட்பராக மாறி மேலும் கதையளக்க துவங்கியிருக்கிறார்கள்.
பத்தாண்டுகாலம் தி.மு.க வோடு கூட்டணிவைத்த, தி.மு.க மீதான குற்றச்சாட்டுகளை தமது தலையிலும் சுமந்த திருமாவளவனை தக்கவைத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு தி.மு.க வுடையதுதான். அப்படியில்லாமல் ஆண்டைத்தனமாக நடந்துகொண்டதற்கான பலனைதான் இன்று தி.மு.க அறுவடை செய்துள்ளது. திருமாவளவன் இதயத்திலிருந்து உதித்த மாற்று அணி இவர்களை பதட்டமடைய செய்ததோடு மட்டுமல்லாமல் பதவியேற முடியாதபடியும் செய்திருக்கிறது.
மூப்பனாரோடு, கண்ணப்பனோடு என திருமாவளவனின் இதற்கு முன் சந்தித்த மாற்று அணிகளை கொண்ட தேர்தல்களையும், மாற்று அணிக்கான முயற்சிகளையும் தமிழகம் பார்த்துவிட்டது. இந்த மக்கள் நலக்கூட்டணி என்பது அவரது சில மாற்று முன்னெடுப்புகளில் ஒன்று மட்டுமே. 2009 ல் நடந்த ஈழப்போராட்டங்களினூடாகவே தி.மு.க, அ.தி.மு.க அல்லாத மாற்று அணிக்கான அறைகூவலை திருமாவளவன் எழுப்பியதும், அதை தமிழ்தேசியம் பேசுகிற அமைப்புகள் அலட்சியம் செய்ததுமே வரலாறு..
மாற்றத்தை உள்வாங்கிக்கொள்பவனே உண்மையான மார்க்சியவாதி என்று மேடைகளில் அடிக்கடி உச்சரிக்கும் திருமாவளவன், அந்த வார்த்தைக்கு உண்மையானவராக நடந்துகொள்கிறார்.
மக்கள் நலக்கூட்டணியில் குறைகள் இல்லாமல் இல்லை..
முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்கமுடியாதபடி அமைந்த விஜய்காந்தின் நடவடிக்கைகள்..
தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்திய வைகோவின் வார்த்தை வீச்சுகள்..
தேர்தல் செலவுக்கு திக்குமுக்காடுவதாக பத்திரிக்கைகள் எழுதுமளவு அமைந்த கூட்டணியின் பரிதாபமான பொருளாதர நிலை..
ஊடகங்களின் எதிர்மறையான கருத்துக்கணிப்புகள்..
அதிகாரவர்க்கத்தின் அப்பட்டமான கீழருப்பு வேலைகள்..
பல்லாயிரம் கோடி பணத்தை புழங்கவிட்ட இரண்டு திராவிட கட்சிகளின் பிராமாண்ட அரசியல்.. என இத்தனையையும் தாண்டி மக்கள் நலக்கூட்டணி அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. தோற்றவர்கள் கூட்டிக்கழித்து பாருங்கள். கணக்கு சரியாக வரும்.
#மாற்றத்திற்கான முயற்சி தொடரும் எனக்கூறியிருக்கிறார் திருமாவளவன். திருமாவளவன் தமிழக அரசியலின் மாற்றத்திற்கான மையப்புள்ளி#
இதயமுள்ள ஒவ்வொருவரும் ஏற்கக்கூடிய கருத்தாக உள்ளது
LikeLike