கடந்த ரெண்டு நாளாக வைகோவை எண்ணி எண்ணி குமுறி குமுறி நிலத்தில் புரண்டு புரண்டு சின்னப்புள்ளங்க மாதிரி அழுது கதறி கதறி சிலர் எழுதிட்டு இருப்பதை பார்க்கும்போது அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன.
1. வைகோ திமுகவில் பொறுப்பு வகித்து கொண்டே அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்குத்து வேலை செய்யவில்லை. அவர் தனக்கென்று ஒரு தனிக்கட்சி வைத்துள்ளார். தேர்தல் காலத்தில் ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கிறார். இதில் என்ன தவறு ?
2. அவர் திமுகவையோ, அதிமுகவையோதான் ஆதரிக்க வேண்டும் என்று சட்டம் ஏதும் உண்டா ? அவர் தன் செயல்பாடுகளை திட்டமிடவும்,, முடிவெடுக்கவும் உரிமை அற்றவரா ?
3. வைகோ என்று ஒருவர் அழைத்த ஒரே காரணத்திற்காக மட்டுமே கம்யுனிஸ்டுகள், சிறுத்தைகள், தேமுதிகவினர் ஒரே கூட்டணியில் இணைந்தார்களா ? அவர்களுக்கு என்று சுய முடிவு இல்லையா ? அல்லது அந்த அளவுக்கு அவர்கள் சிறு பிள்ளைகளா ? தேர்தல் அரசியல் தெரியாதவர்களா ?
4. பெரும்பாலான தேர்தல்களில் கூட்டணி பலத்திலேயே வென்று ஆட்சியை பிடித்த திமுகவுடன் இந்த முறை கூட்டணி சேராமல் தனியே அக்கட்சிகளை பிரித்துவிட்டார் வைகோ என்று அவர்மீது கோபம் கொள்வதைவிட அதிமுக போல தனிப்பலம் பெற்று திமுக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று இந்த திமுக சமூக வலைதள ஆதரவாளர்களால் ஏன் தலைமையை வலியுறுத்த முடியவில்லை ? அவ்வாறு ஏன் தலைமை செய்யவில்லை? இனி கூட்டணி தயவின்றி தேர்தலில் வெல்வோம் என்றுதானே முடிவெடுக்க வேண்டும் ? இதற்கு எதற்காக பக்கத்துக்கு வீட்டு வைகோவின் மீது பாய வேண்டும் ?
5. வைகோ பணம் வாங்கி விட்டு தங்களுக்கு தோல்வியை தந்துவிட்டார் என்று புலம்புபவர்கள் அந்த அளவுக்கு தாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்பதை இதன்மூலம் ஒப்புக்கொள்கிறார்களா ?
6. அதிமுகவின் உறுப்பினர் எண்ணிக்கை ஒன்னேகால் கோடியை தாண்டுகிறது. திமுகவின் உறுப்பினர் ஒரே கோடியை தாண்டி விட்டதா ? அதை அதிகரிக்க சமூக வலைதள திமுகஆதரவாளர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன ? பாரம்பரிய திமுகவுக்கு பிறகு உருவானதே அதிமுக. அக்கட்சி எப்படி இப்படி வளர்ந்தது ? திமுகவால் ஏன் அவ்வாறு வளர முடியவில்லை ? இதற்கான பதில் என்ன ?இதைவிடுத்து மதிமுக மீது எரிந்து விழுந்து என்ன லாபம் ?
7. திமுக தோல்விக்கு மக்கள் நலக்கூட்டணிக்கு விழுந்த வோட்டுகள் போலவே நோட்டாவும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
8. மேற்கு மண்டலத்தில் இன்னும் வலிமை பெற முடியாத நிலையில்தான் திமுக உள்ளது.
9. இதை எல்லாம் தாண்டி அதிமுக அரசின் ஒரு பலன் கூட மக்களுக்கு செல்லாமலா அவர்கள் வாக்களித்து உள்ளார்கள் ? அதாவது performance அடிப்படையில் பார்க்காமல் வெறும் பணம் மட்டுமே வாங்கிக்கொண்டு வாக்களித்தார்கள் என்றாலும்கூட இதில் வைகோவின் பங்கு என்ன ?
10. ஆக மொத்தம், இது முதுகு வலியா, திருகு வலியா என்று தெரியாமால் அடுத்தவர் மீது சேற்றை வாரி இறைப்பதை தவிர வேறு என்ன ?
11. ஒருவேளை மக்கள் நலக்கூட்டணியின் பிற தலைவர்களே வைகோவின் மீது குறை கூறினால், அது சந்தர்ப்பவாதமே தவிர அறிவார்ந்த குற்றச்சாட்டாக இருக்க முடியாது எனும்போது திமுகவினர் வைகோ மீது குறை கூறுவது அவலை நினைத்து உரலை உடைப்பது போன்றது ஆகாதா ?
அதற்காக வைகோவின் நிலைப்பாடுகள் அனைத்தையும் ஆதரிக்கிறேன் என்பது இந்த பதிவின் அர்த்தமல்ல. அடிப்படை கேள்விகளை முன்வைத்து இருக்கிறேன். ஆரோக்கியமான விவாதம் வரவேற்கபடுகிறது.
1.வைகோ திமுகவில் மூன்று முறை பதவிசுகத்தை அனுபவித்துவிட்டு, கட்சிக்குத் துரோகம் இழைத்துவிட்டு அற்றகுளத்து அறுநீர்ப்பறவையாய் வெளியேறிய புல்லுருவி. இவர் தனிக்கட்சி துவங்கிய பிறகும் சில சூழல்களில் திமுக தலைவரை ஆதரித்துத் துதிபாடியவர் தான். கலைஞரை மானசீகக் குருவென்று கூறிவிட்டு, குருத்துரோகம் செய்த கொடூர உள்ளம் கொண்ட இவரை கலைஞர் பெருந்தனமையுடன் மன்னித்தும் இருக்கிறார்.
2.இவர், எவரை வேண்டுமானாலும் ஆதரித்துவிட்டுப் போகட்டும். இத்தனை ஆண்டுக் காலமாக தனிக்கட்சி நடத்தி பொதுமக்களின் 1% சதவீத வாக்குகள் கூடப் பெற தகுதியற்ற இவருக்கு கட்சித் தலைவர் பதவிமோகம் எதற்கு? கூட்டணி அமைப்பாளர் ஆசை எதற்கு?
3.தேர்தல் அரசியல் தெரிந்த(?) ம.ந.கூ., தேமுதிக, தமாகா மூன்றும் இணைந்து, சிறுபிள்ளைத் தனமாக எடுத்த முடிவால், கூட்டாக 6% சதவீத மொத்த வாக்குகளைக் கூடப் பெறமுடியாத கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்த நிலையில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என்று முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல் இவர்களுக்குப் பதவிமோகங்கள் எதற்கு?
4.கூட்டாட்சி என்பது இன்றைய காலத்தின் கட்டாயம் என்ற அரசியல் தெளிவைப் பெறுங்கள். ஜெயலலிதா கூட தனியாக வெல்லவில்லை. குடியரசு கட்சி, முஸ்லீம் லீக், மற்ற சாதிக் கட்சிகளை இணைத்தே களமிறங்கினார் என்ற உண்மை தெரிந்தே உளறியிருக்கிறீர்கள். மத்தியில் வலுவான ஒரு தேசியக்கட்சி கட்சியின் ஆதரவின்றி எந்த மாநிலக் கட்சியும் முன்னேற்ற வளர்ச்சி காண இயலாது என்பதை உணர்ந்தீர்களா? என்று தெரியவில்லை. இதுவே மத்தியில் கூட்டாட்சியை அண்ணா வலியுறுத்தியதற்குக் காரணமாகும். இதில் கொள்கைவழி, மதச்சார்பற்ற இறையாண்மையும் முக்கியமாகும்.
5.வைகோ பணம் வாங்கியதை உண்மை என்று நம்பிய மக்களால் அன்றோ இன்று பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார். இதைத் தேர்தல் முடிவுகள் பறைசாற்றுகின்றதே. இவர்களுக்கு அரசியல், லாபத்தை ஈட்டும் தொழில் ஆகிவிட்டது.
6.மக்களாட்சி முறையில் அரசியல் கட்சிகளுக்கு உறுப்பினர் எண்ணிக்கை என்பது மக்கள் பார்வையில் முக்கியமல்ல. மக்களின் பெரும்பான்மை சதவீத வாக்குகளே கட்சிகளுக்கு உரிய அங்கீகாரம் தரும். இதை மாற்றத் தேர்தல்முறை சீர்திருத்தங்கள வேண்டும். அங்கீகாரம் பெறாதக் கட்சிகள் இருந்து மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. திமுகவை குறைகூறும் நீங்கள், ம.ந.கூ., தேமுதிக, தமாகா சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து தான் பெருந்தோல்வி கண்டன என்பதை முழுப்பபூசணியை சோற்றில் மறைப்பதுபோல் மறந்து பேசுவதும் கோமாளித்தனமாக உள்ளது.
7-11. கடைசி ஐந்து கேள்விகளை ஒரு அதிமுக ஆதரவாளர் அல்லது தொண்டர்போல் கேட்டு உங்கள் உண்மையான எண்ணம் அதிமுக ‘பி’ பிரிவாக இயங்கி அதிமுகவை ஆதரிப்பதே என்பதை வெளிப்படுத்திவிட்டது. மறைமுகமாக உங்கள் எண்ணம் அதிமுகவை ஆதரிப்பது தான். விஸ்வா விஸ்வநாத் என்ற பெயரே பறைசாற்றுகிறது.
LikeLike