தேர்தல் முடிவுகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பக்கதில் எழுதியுள்ள கட்டுரை:
- ஜெயலலிதா அரசு மேல் மக்களுக்கு மிகக்கடுமையான வெறுப்பும் அவநம்பிக்கையும் இருக்கிறது. செயல்படாத அரசு, ஊழல் அரசு என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்
- அதற்கு மாற்றாக திமுக அன்றி வேறு எந்த கட்சியும் இல்லை என்றும் நினைக்கிறார்கள்.
- ஆனால் கணிசமானவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. குறிப்பாகப் பெண்கள் திமுகவுக்குப் போடுவதைவிட மீண்டும் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கவே விரும்புகிறார்கள்
- அதற்கு முதற் காரணம் ஜெயலலிதாவின் அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தாலும் பொதுவினியோகத்துறை மிகச்சிறப்பாக இயங்கியது. ரேஷனில் அனேகமாக ஊழலே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அரிசி மண்ணெண்ணை போன்றவை சீராக குறைந்தவிலையில் கிடைப்பது பெண்களிடம் நிறைவான எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது
- திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும், பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்னும் எண்ணம் பெண்களிடையே உள்ளது. திமுகவின் வட்டாரத்தளபதிகள் அந்தந்த உள்ளூர்களில் கிரிமினல்களாகவே அறியப்படுகிறார்கள். அவர்களை ஜெயலலிதா மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்று பெண்கள் நினைக்கிறார்கள். சென்ற ஆட்சியில் அழகிரியும் பிறரும் ஆற்றிய நேரடியான வன்முறகளை மக்கள் நினைத்திருக்கிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே திமுகவின் இந்த உள்ளூர் கிரிமினல்கள் கிளம்பி வந்தது உடனடியாகவே பெண்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஜெயலலிதாவுக்குச் சாதகமாக உருவாக்கிவிட்டது.
- ஆகவே ஒரு மாற்றம் வேண்டும் என மக்கள் நினைத்தாலும் திமுகவுக்கு வாக்களிக்க பெண்கள் விரும்பவில்லை. ஆகவே பெண்கள் ஓட்டில் ஜெயலலிதா மீண்டும் வருவார்.
இதுதான் என் அவதானிப்பு. இந்தத்தேர்தலில் அன்புமணி ஒரு முதல்வர் வேட்பாளராக அடிப்படையான பணிகளைச் செய்தார். அவரது தேர்தலறிக்கையின் மங்கலான கார்பன்காப்பிகளைத்தான் மற்ற அத்தனைக் கட்சிகளும் வினியோகித்தன. அவருக்கு தமிழகம் பற்றிய புரிதல் இருப்பதை அந்த தேர்தலறிக்கை காட்டியது.
திருமாவளவன் பொருளியல்குறித்த திட்டங்களையோ கனவுகளையோ முன்வைக்கவில்லை என்றாலும் தமிழகச் சமூகவியல்சூழல் குறித்த நிதானமான நோக்கு இருப்பதை அவரது பேச்சுக்கள் காட்டின. திருமாவளவன் சாதியரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமுரிய பொதுத் தலைவராகச் செயல்படும் முதிர்ச்சியைக் காட்டினாலும் அன்புமணி அவ்வாறு வெளிப்படவில்லை. ஆனாலும் இருவருடைய தோல்வியும் வருந்தத்தக்கது. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு அவர்கள் எழுந்துவரவேண்டும் என நினைக்கிறேன்.
குறிப்பாக திருமாவளவன் இந்த இடைக்காலத்தில் ஆக்கப்பூர்வமாக எதிர்க்கட்சியாகச் செயல்பட்டால், தமிழகமக்கள் ஐயத்துடனும் வெறுப்புடனும் அணுகும் இஸ்லாமிய வஹாபிய இயக்கங்களுடன் அணுக்கம் காட்டாமலிருக்கும் துணிவு அவருக்கிருந்தால், அவர் ஒருநாள் தமிழகத்தை ஆளக்கூடும்.
சட்டமன்றத்தில் இடதுசாரிகள் இல்லை என்பது ஜனநாயக அமைப்பின் மிகப்பெரிய சரிவு என்றும் அபாயமான ஒரு திருப்பம் என்றும் நினைக்கிறேன்.
இந்தத்தேர்தலில் கருணாநிதி தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தாமலிருந்தால், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி அவரது கனவுகளையும் திட்டங்களையும் இன்னும் அதிகமாக மக்களிடம் கொண்டுசென்றிருந்தால், திமுகவின் வட்டாரத்தலைவர்களை அகற்றி புதிய முகங்களுடன் களமிறங்கியிருந்தால் நிலைமை மாறியிருக்கும் என்றே நினைக்கிறேன்.
எளிமையான விஷயம்தான் இது. மக்கள் விரும்புவது முன்னோக்கிய மாற்றம். திமுக முன்வைத்தது பின்னோக்கிய மாற்றம். ஜெயலலிதா அரசுக்கு முந்தைய கருணாநிதி ஆட்சியை. குறைந்தபட்சம் முகங்களையாவது மாற்றியிருக்கலாம்.