
கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரையில் சமத்துவ சமுதாய மாற்றமே இலக்கு. அதற்கான ஒரு பாதைதான் நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல். தேர்தலே இறுதி இலக்கல்ல. அந்த ஒரு பாதை மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பயணத்தை நிறுத்துவதற்கில்லை. இலக்கை அடைவதற்கான வீரமிகு போராட்டங்கள், இயல்பான தன்னலமில்லா தியாகங்கள், தீவிரமும் எளிமையுமான கருத்துப் பரவல் இயக்கங்கள், பாதிக்கப்படுவோருக்காகத் தன்னுணர்வான தொண்டுகள், சமரசமற்ற முற்போக்கு அடையாளங்கள், மக்களைத் திரட்டும் மாபெரும் முயற்சிகள்… ஆகிய பாதைகளை மூடுவதற்கில்லை.
பதிவான வாக்குகளில் அதிமுக-வுக்கு சுமார் 41 சதவீதம் என்பதைக் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. எல்லா மட்டத்திலும் வரம்பில்லா ஊழல்கள், சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஜனநாயக உரிமைகளை மறுத்த ஒடுக்குமுறைகள், மக்களைச் சந்திக்காத, ஊடகச் செய்தியாளர்களுடனும் உரையாடாத அலட்சியங்கள், தன்னுடைய பெயரையே சூட்டிக்கொண்ட திட்டங்கள், தலைமுறைகளைத் தள்ளாட வைத்த மது பாட்டில்கள், பிற்போக்கு சக்திகளோடு ஒத்துழைப்புகள்… நிராகரிப்பதற்கான அத்தனை காரணங்களும் இருந்தபோதிலும் அந்த 41 சதவீதத்திற்குள் கறாரான கட்சி விசுவாசிகளல்லாத மற்றவர்கள் ஜெயலலிதா ஆட்சி தொடர முடிவு செய்தது ஏன்?
பணக்கட்டுகளை மட்டும் காரணம் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா? அல்லது, ஆட்சியின் நலத் திட்டங்களால் எல்லோரும் பயனடைந்திருக்கிறார்கள், அதன் பிரதிபலிப்புதான் இந்த முடிவு என்று அதிமுக-வினர் சொல்வது போலச் சொல்லிவிட்டுப் போகலாமா? சென்ற ஆண்டின் மழை பாதிப்புகளைக் கையாண்ட விதத்தில் ஏற்பட்ட கோபம், பெரும் எதிர்ப்பு வெள்ளமாய்ப் பெருக்கெடுத்துவிடவில்லை என்பதையும், அதன் பின்னணியில் எம்ஜிஆர் மீதான விசுவாசம் முதல், மலிவு விலை உணவகம், இலவச அரிசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கணிசமானோருக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு வரையில் கலந்திருப்பதையும் காணத் தவறலாமா?
31 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது சாதாரண விசயமல்ல (காங்கிரஸ் 6 சதவீதம்). மலைக்க வைக்கும் ஊழல்கள், குடும்ப ஆதிக்கம், மது பாட்டிலைத் திறந்துவிட்டதே திமுக ஆடசியில்தான் என்ற பின்னணி, திராவிட இயக்க மகத்துவங்களிலிருந்து தடம் மாறி சாதிய – மதவெறி சக்திகள் பற்றிய கூர் மழுங்கிய விமர்சனம், மக்களைக் கைவிட்ட மத்திய அரசுக் கொள்கைகளின் சொந்தக்காரர்கள் காங்கிரஸ் கட்சி என்ற உண்மை, அந்த காங்கிரசோடு மத்திய ஆட்சியில் அதிகாரக் கூட்டு, பின்னர் அதிலிருந்து விலகியதற்காகக் கூறப்பட்ட காரணங்கள் மாறாமலே மறுபடி தேர்தல் உறவு… இவர்களை நிராகரிப்பதற்கும் வலுவான காரணங்கள் இருக்கின்றன என்றாலும் இந்த இடத்தை உடன்பிறப்புகள் மட்டுமல்லாதவர்களுமாய்ச் சேர்ந்து வழங்கியது ஏன்?
வீசப்பட்ட பணத்தால்தான் என்று ஒற்றைக் காரணத்தைச் சொல்லி முடித்துவிடலாமா? அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளின் தாக்கம் தொடர்வதை மறுக்க முடியுமா? ஒரு கட்டமைப்பாகத் தேர்தல் வேலைகளில் திட்டமிட்டு ஈடுபடுவதில் உள்ள அனுபவப் பயிற்சிகளை ஒதுக்கிவிட இயலுமா?
மக்கள் அரசியலாக முடிவெடுக்கிறார்கள். நான் விரும்புகிற அரசியல் மாற்றத்திற்கு, வாக்களித்தோரில் மிகப் பெரும்பாலோர் இன்னும் தயாராகவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது என்றாலும் மக்கள் தங்கள் கண்ணோட்டப்படியான ஏதோவொரு அரசியலோடுதான் தேர்தலை அணுகுகிறார்கள் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
வாக்களித்தோரில் 59 சதவீதத்தினர் தன்னை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை அதிமுக உள்வாங்கிக்கொண்டு தனது ஆட்சியை நடத்தட்டும். அதே போல் 63 சதவீதத்தினர் தனது அணியை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை திமுக ஏற்றுக்கொண்டு தனது எதிர்க்கட்சிக் கடமையை நிறைவேற்றட்டும்.
ஒரு ஊடகவியலாளனாக மட்டுமல்ல, மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று மனதார விரும்பியவன் என்ற முறையிலும், பேசப்பட்ட அளவுக்குக் கூட மக்கள் ஏன் இக்கூட்டணியைப் பெரிதாக ஏற்கவில்லை என்பதை உண்மையாய் ஆராய விரும்புகிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், மதிமுக-வும் கூட்டியக்கமாக எழுப்பிய “அதிகாரத்தில் கூட்டு” என்ற முழக்கத்தின் சமூகப் பயன்கள் பற்றிய புரிதல் ஏன் விரிவாகச் சென்றடையவில்லை என்பதை மக்களிடமிருந்தே கேட்டறிய விழைகிறேன். ஊடகங்கள் அந்த இரண்டு கட்சிகளை மட்டுமே அதை விட்டால் இது, இதை விட்டால் அது என்று முன்னிலைப்படுத்தின, மாற்று அணியை வேண்டுமென்றே இருட்டடித்தன என்ற ஒரு பகுதி உண்மையோடு மட்டும் சுருங்கிவிடக்கூடாதெனக் கருதுகிறேன்.
விவாதச் சந்தடிகளில், தேமுதிக, தமாகா கட்சிகளோடு இணைந்தது இக்கூட்டணி பற்றிய எதிர்பார்ப்பைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது என்றும் சிலர் கூறுகிறார்கள். அதை அப்படியே வழிமொழிய மாட்டேன். அதே வேளையில் கடைசி நேரத்தில்தான் தேமுதிக, தமாகா இரண்டும் தேர்தல் உடன்பாட்டிற்கு வந்தன என்பது எந்த அளவுக்கு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் என்ற கேள்வியை ஒதுக்க மாட்டேன். மக்கள் நலக் கூட்டணியே கூட ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டிருந்தால், தனது செயல்திட்டத்தை மக்களிடையே கொண்டுசென்றிருந்தால், உள்ளூர்ப் பிரச்சனைகள் முதல் நாடளாவிய தாக்குதல்கள் வரையில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்திருந்தால், அந்தப் போராட்டங்களில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட மக்களையும் அணிதிரட்டியிருந்தால் அடிப்படையில் அது பெருமளவுக்குதமிழகத்தின் நம்பிக்கை அரணாக உயர்ந்து நின்றிருக்குமே என்ற சிந்தனையையும் தள்ளிவிட மாட்டேன். அரசியல் தெளிவோடும் சமூக அக்கறையோடும் ஆராயப்பட வேண்டிய, சரியான அணுகுமுறைகள் வகுக்கப்பட வேண்டிய தேவை இருப்பதை மறுக்க மாட்டேன்.
ஒன்று நிச்சயம்: பணத்தை வீசி, சாதியத்தோடு கைகோர்த்து, மதுவாடையை விட போதை தரும் மதவாதத்தோடு அனுசரித்து, இனவாதத்தைக் கிளறிவிட்டு ஆதரவு திரட்ட முயலவில்லை என்ற கம்பீரம் வரலாற்றில் பதிக்கப்பட்டிருக்கும். மாறாக, சாதி மறுப்புக் காதல் இணைகளுக்குப் பாதுகாப்பு, தரமான இலவசக் கல்வி, தரமான இலவச மருத்துவம், கருத்துரிமை, பெண்கள் ஆணையத்திற்கு அதிகாரம் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை அளித்திருக்கிற பெருமிதம் கூடவே வரும்.
இன்னொன்றும் நிச்சயம்: நேற்றைய தேதியோடு வரலாறு தேங்கிவிடவில்லை. இந்த முடிவு, மாற்றத்திற்கான மாற்று அணியின் தேவை முடிந்ததாய் வழியடைக்கவில்லை. மக்களுக்காக மக்களோடு கலந்து நிற்கிற களப்பணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
அ. குமரேசன், ஊடகவியலாளர்.