
ஆசிரியப் பணியாகவும் தேர்தல் பணியாகவும் தொடர்ந்து கிராமங்களில் பணியாற்றுவதை சிற்சில இடர்ப்பாடுகள் கடந்து வரமாகவே நினைக்கிறேன். இந்தத் தேர்தல் முடிவு சில மாதங்களுக்கு முன்னரே உள்ளுணர்வு உணர்த்திய ஒன்று.
அதிமுகவின் இந்த வெற்றி கொண்டாடப்பட வேண்டியதல்ல. சற்றே நிதானிக்க, சிந்திக்க வேண்டிய இடத்தில் மக்கள் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். வளர்ச்சித் திட்டங்களைச் சிந்தியாமல், செயல்படுத்தாமல் அதீத இலவசங்களுக்கே மக்கள் பெரும்பான்மை அளித்து விடுவார்களென்று நினைத்ததற்கான மரண அடியிது. சென்றமுறைபோல் அதீதப் பெரும்பான்மைஆட்சி இந்த முறை இல்லை.
இப்போதும், திமுகவே மாற்று என்ற நிலையிலிருந்து மக்கள் பின்வாங்கவில்லை. வாரிசு அரசியல், ஈழத்துக்கான நிலைப்பாட்டில் நடிப்பரசியல் எனப் பல்வேறு காரணிகளால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியைத் தட்டிக் கேட்குமளவுக்கான பலமான எதிர்க்கட்சியாக மக்கள் திமுகவையே தேர்ந்தெடுத்துள்ளனர்.
பாமகவின் சாதி அரசியலை ஏற்க முடியவில்லையென்றாலும் அவர்களுடைய விவசாயம், கல்வி போன்ற மக்கள் நலம்சார்ந்த துறைகளின் செயல்பாடுகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை, மாற்று பட்ஜெட், இருபெரும் கட்சிகளை எதிர்த்து அவர்கள் பெற்றிருக்கும் வாக்கு சதவிகிதம் கவனிக்க வைக்கிறது. சாதி அரசியலிலிருந்து வெளியேறி அனைத்துத் தரப்பு மக்களுக்கானவர்களாக உண்மையாகவே தங்களை மாற்றிக் கொள்வதற்கான காலமாக அடுத்து வரும் ஐந்தாண்டுகளை பாமக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏதோ ஒரு காரணம்பற்றி கிராமங்களில் சிபிஐ, சிபிஎம் தோழர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபடியே இருக்கும். அப்போதெல்லாம் அரசுப்பள்ளி, பயிர் சாகுபடி, சாலை வசதி குறித்தெல்லாம் பேசுவார்கள். அண்மைக்காலங்களில் அப்படி உண்டியல் குலுக்கி வரும் தோழர்களை நான் சந்திக்கவேயில்லை. எந்தக் கூட்டணியானாலும் தலைமைப் பொறுப்புக்கு நகராமல் மீண்டும் மீண்டும் ஏன் மற்ற கட்சிகளுக்குக் காவடி எடுக்குமிடத்திலேயே நிற்க வேண்டும்? எந்த இடத்தில் நாம் வழுவுகிறோமென்று விவாதித்துச் சரிசெய்ய வேண்டிய கட்டத்தில் நிற்கிறோம். தொழிற்சங்கத் தேர்தல்களில் தோழர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு திமுகவும் அதிமுகவும் வெற்றி பெறுவது என்பதே பின்னடைவு என்பதை உணர வேண்டும். எளிய மக்களிடத்திலிருந்து விலகத் தொடங்கியிருப்பதைக் கவனித்துச் சரி செய்யவேண்டிய முக்கியமானதொரு இடத்தில் தோழர்கள் நிற்கிறார்கள்.
விடுதலைச்சிறுத்தைகளின் தோல்வி தமிழ்நாட்டுக்கு ஆரோக்கியமானது அல்ல. தனிப்பட்டமுறையிலும் திருமாவின் தோல்வி மிகுந்த வருத்தத்தைத் தந்தது. தோழர்களுக்குச் சொன்னதையே விசிக்கும் சொல்ல விரும்புகிறேன். எளிய மக்களுடனான தொடர்பு அறுபடுவதைக் கவனித்துச் சரி செய்வதும் அம்பேத்கரின் கற்பி, ஒன்றுபடு, போராடு என்னும் பொன்மொழியை மறக்காது செயல்படுத்துவதும் அவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் நன்மை செய்யும்.
மக்கள், தாங்கள் தேர்ந்த புத்திசாலிகளென்பதை மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சியைப்பற்றிக் கவலைப்படாமல் இலவசங்களைக் கொடுத்தே ஆட்சியைப் பிடிக்க முடியுமென்று நினைத்தவர்களின் எதிரே பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக திமுகவை நிறுத்தியிருப்பதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தும் ஆட்சியே எங்களுக்குத் தேவை என்பதை வலியுறுத்தியிருக்கிறார்கள்.
எப்போதுமில்லாத அளவு மக்கள் பேராசைக்காரர்களாக மாறியிருப்பதை இத்தேர்தல் உறுதி செய்திருப்பதையும் தனி மனித அறத்திலிருந்து விலகுவதையும் மிகுந்த கவலையுடன் கவனிக்க வேண்டியிருக்கிறது.
சமூகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகங்கள் அசுர பலம் பெற்று தங்களின் தனித்த இலாபங்களுக்காக மக்களைத் தவறாக வழி நடத்துவதும் கருத்துகளைத் திணிப்பதும் ஆரோக்கியமான போக்கல்ல. இந்தத் தேர்தலில் இதையும் நாம் பொருட்படுத்திச் சிந்திப்பதோடு ஊடக அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துவதே நாட்டுக்கு நன்மை தரும்.
பரமேஸ்வரி திருநாவுக்கரசு, ஆசிரியர்; எழுத்தாளர்.