ஜெயலலிதா அவர்களே… தொண்ணுறுகளுக்கு பின் தமிழகத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது முறை யாரும் தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்ததில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றீர்கள். வாழ்த்துகள். மக்கள் நல்லவர் கெட்டவர் கொள்கை கோட்பாடுகள் பார்த்து வாக்களிப்பதில்லை என்பதால் இதை சாதனையாக கருதுவது எளிய மனங்களின் செயல்பாடுகள் மட்டுமே. விதந்தோத ஒன்றும் இல்லை. ஆனால், காலம் உங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது மக்களுக்கு நிறைய செய்யமுடியும்.
உலகம் எப்போது சுதந்திர மனிதர்களால் நிறைந்துள்ளதோ அன்றுதான் மனிதகுலத்தின் விடுதலை சாத்தியமாகும். அதிகாரத்தில் இல்லாதவர்கள் மட்டுமின்றி இருப்பவர்களும் அடிமையாக இருக்க முடியும் என்பதற்கு நீங்கள் சான்றாகும். அச்சத்தின் பிடியில் இருப்பர்களே சகமனிதர்களை அடிமைகைளாக நடத்துவார்கள்.
எனவே, முதலில் உங்களை பயத்தின் பிடியில் இருந்து விடுவித்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கு நிலவுடைமை அமைப்பின் குடும்பஅமைப்பு இல்லை.ஏனவே, நீங்கள் இன்னும் சுதந்திரமாக இயங்கமுடியும்.ஆனால், நீங்கள் தோழியின் குடும்ப வட்டத்திற்குள் சுயசிறை செய்துகொண்டுள்ளீர்கள். அரசுநடத்தை விதிகளுக்குள் (புரோட்டகால்) முடங்கியிருக்காமல் வெளியே வாருங்கள். மக்களை சந்திக்காவது செய்யுங்கள்.அரசு கோப்புகளில் மட்டுமே தங்கி இருக்காதீர்கள்.
பெரும்பாலான அரசுகோப்புகள் உண்மையிடம் இருந்து வெகுதூரம் விலகியே இருக்கும்.காவல்நிறைய முதல்தகவல் அறிக்கை போல. எம்.ஜிஆரின் நடவடிக்கைகள் உளவியல் ரீதியாக கட்சிக்காரர்களை அடிமைகளாக நடத்தக்காரணமாக இருக்கக்கூடும். மனிதர்களின் எல்லாசெயல்பாடுகளுக்கு பின்னும் மனம் தொழிற்படுகிறது.எனவே உங்களை பயத்தில்இருந்தும் விடுவித்துக்கொண்டு சுநத்திரமாகுங்கள். உங்களின் அச்சமற்றத்தன்மையே கட்சிக்காரர்களின் அரசுஅதிகாரிகளின் விடுதலையை அனுமதிக்கும்.
ஒருபோதும் சாதிக்கமுடியாத கச்சத்தீவு, ஈழவிடுதலை என கனவுகளில் மக்களை ஆழ்த்தாமல் அவர்களின் இயல்பான பிரச்சினைகளை தீர்த்துவைத்தால் என்றும் போற்றுவார்கள். காவல்நிலையம் வட்டாட்சியர் அலுவலங்கள் இன்னுபிற அரசியல் நிறுவனங்கள் அண்றாடங்காச்சிகளை மனிதர்களாக நடத்துவதை உறுதி செய்யுங்கள். தினமும் பிணங்களை உதிர்த்துத்தள்ளும் கொலைக்கரங்களை கட்டுப்படுத்துங்கள். ஆணவக்கொலைகளை அடியோடு ஒழியுங்கள். நாற்றமடிக்கும் அரசுபள்ளிகள், மருத்துவமனைகள் சாலைகளை தூய்மையாக பராமரியுங்கள். சட்டமன்றத்தில் விதிகளின் பின்னால் ஒளிந்துகொள்ளாமல் வெளிப்படையாக விவாதிக்க முன்வாருங்கள். காவல்துறையை அதன் உளவுப்பிரிவை மட்டுமே நம்பி ஆட்சி சக்கரத்தை இயக்காமல் மக்களை நம்புங்கள். அவர்களின் எளிய கவலை போக்குங்கள். காலம் காத்திருக்கிறது. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அம்மா… புரட்சித்தலைவி போன்ற பொருளற்ற வெற்றுப்புகழ்ச்சொற்களில் தங்கியிராதீர்கள்.
இரா. சின்னத்துரை, ஊடகவியலாளர்.