ஜெயலலிதாவின் வெற்றியும் மக்களின் எதிர்பார்ப்பும்!

நாச்சியாள் சுகந்தி

சுகந்தி நாச்சியாள்
சுகந்தி நாச்சியாள்

போயஸ் தோட்ட வீட்டில் ஜெயலலிதா வெற்றியின் புன்னைகையோடு அமர்ந்திருக்கிறார். அதிகாரிகள் வண்ண வண்ண மலர்செண்டுகளுடன் கும்பிடு போடுகிறார்கள். அதில் ஒருசிலர் இப்போதுதான் புதிதாக குனியக் கற்றுக்கொண்டார்கள் போலும்.. அத்தனை திருத்தமாக குனியமுடியவில்லை. ஒரு ரோஸ் கலர் சேலை அணிந்த பெண்மணி பூங்கொத்தை கொடுத்து முடித்து, ஜெயலைதாவைப் பார்த்து கைகளை விரித்து ஒரு சிறு ஆட்டம் போட, ஜெயலலிதாவின் முகத்தில் அப்படியொரு சிரிப்பு. அநேகமாக அண்மைகாலத்தில் அவர் இத்தனை சந்தோஷத்துடன் சிரித்தது அப்பெண்ணால்தான்.

நன்றி சொல்லும்போது, ‘’நன்றி என்று சொல்வதற்கு மிகச் சரியான வார்த்தை தமிழ் அகராதியிலேயே இல்லை… என் உள்ளத்தின் அடியாழத்தில் இருந்து நன்றி சொல்கிறேன். மக்களுக்காகவே என் வாழ்வை அர்பணிக்கிறேன்’’ என்று கையில் எந்த ஸ்கிரிப்ட்டும் இல்லாமல் சொன்னார். தமிழில் சொன்னதை அப்படியே ஆங்கிலத்திலும் சொன்னார். சொன்னதுக்குப் பிறகு….பொக்கே வழங்கியவர்களில் சிலர் காலில் விழுந்தார்கள். ஜெயலலிதா எப்போதும் போல் காலில் விழுவதை கண்டுகொள்ளாமல் பொக்கேவைத் தொட்டுக்கொண்டிருந்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியின் மக்கள் நல செயல்பாடுகளால் அதிமுக இந்த வெற்றியைப் பெற்றுவிடவில்லை என்று ஜெயலலிதாவுக்கே நன்கு தெரியும். பணத்தை திமுகவை விட அதிக அளவில் வீடுவீடாக வாரி இறைத்து, தெளித்துப் பெற்ற வெற்றிதான் இது. மக்கள் ‘இந்தக் கட்சி ஆட்சியில் இருந்தால் நமக்கு பல நன்மைகளை செய்வார்’ என்ற நம்பிக்கையில் ஆட்சியில் இவரை அமரவைத்தார்களா? வெற்றி பெறச் செய்தார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

கடந்த ஐந்தாண்டுகளில் TNPSC மூலமாக பெரிய அளவில் அரசுவேலை வாய்ப்புகளை வழங்கவில்லை. இன்னும் 88 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றிதான் இருக்கிறார்கள். தொழில்துறையில் புதிய புரட்சி எதுவும் நடந்துவிடவில்லை. புதிய உலக கம்பெனிகள் எதுவும் எங்கும் தொடங்கப்படவில்லை. கடைசி நிமிடத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு என்பதை பெயரளவில் நடத்தி, ‘இத்தனை லட்சம் கோடி முதலீடு வந்தது’ என்பதை பேப்பரில் மட்டுமே படிக்க முடிந்தது. நிஜத்தில் என்ன நடந்தது என்பதை யார் அறிவார்கள்?

அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்தபோது அமைச்சர்களை ஈவு இரக்கமின்றி மாதம் ஒருவராகத் தூக்கியெறிந்து இன்னொருவரை தூக்கிவைத்தார். அதனால் இன்று வரை எந்தத் துறைக்கு எந்த அமைச்சர் என்பது தமிழ்நாட்டில் ஒரு வாக்காளருக்குக் கூட நினைவில் இல்லை. இருந்தால் அவர் 7 கோடிகளில் ஒருவர்.

ஊழல் வழக்கில் கைதாகி அவர் சிறையில் இருந்த போதும், சிறையிலிருந்து வெளிவந்த போதும் அரசு பெரிதாக இயங்கவில்லை. 110 விதி பெரிதாக இயங்கியது. வெள்ளத்தின் போது அடுத்தவன் வீட்டு பொருட்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் அதையெல்லாம் மீறி இன்று ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார் என்றால்…. அது பணத்தால் மட்டும் ஈட்டப்பட்ட வெற்றி என்பதை யாருமே மறுக்கமுடியாது… ஜெயலலிதா உள்பட.
இந்த வெற்றிக்குப் பிறகாவது அவர் மக்களிடம் சொன்ன வாக்கின்படி சொன்னதில் பாதியையாவது செய்ய வேண்டும் என்பதுதான் சாமனிய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஏழை மக்களும் எல்லாவற்றையும் வாங்கும் அளவுக்கு உணவுப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருக்க வேண்டும்…அட்லீஸ்ட் பால் விலையாவது!

அதிமுகவுக்கு கிட்டத்தட்ட நெருக்கமான இடங்களைப் பிடித்து மாபெரும் எதிர்க்கட்சியாக விளங்கும் திமுகவின் கையில்தான்… அவர்கள் சட்டமன்றத்தில் எழுப்பும் குரலில்தான்…. தமிழக மக்களின் ஒட்டுமொத்த நலனும் எதிர்காலமும் இருக்கிறது.

டாஸ்மாக்… இருப்பதும் ஒழிவதும் அழிவதும் முழுக்க முழுக்க திமுகவின் கையில்தான் இருக்கிறது. ரெடி..ஸ்டார்ட்!

சுகந்தி நாச்சியாள், எழுத்தாளர்; ஊடகவியலாளர்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.