ஆதவன் தீட்சண்யா

இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் (UPSC), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போன்றவை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையிலிருந்து பிறந்தவை. பணிநியமனத்தில் நிலவும் சாதிரீதியான சாய்மானத்தையும் பாரபட்சத்தையும் தடுப்பதற்கான முதற்படியாக மத்திய மாநில அரசுகள் தத்தமக்கான தேர்வாணையங்களை அமைக்கவேண்டும் என்று அவர் எழுப்பிய கோரிக்கையே பிற்காலத்தில் செயல்வடிவம் பெற்றது. அரசியல் சாசன அவையில் அங்கம் வகிக்க தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் என்கிற அமைப்பை சட்டப்பூர்வமாக உருவாக்கவும் பயன்படுத்திக்கொண்டார். வயதுவரம்பு, தேர்வு எழுதும் எண்ணிக்கை ஆகியவற்றை தளர்த்தி பட்டியல் சாதியினர், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடும்கூட அவரது போராட்டத்தால் கிடைத்தவையே.
1950ல் இந்த இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் உருவாகிவிட்ட போதிலும் 2006ஆம் ஆண்டுதான் அதன் போட்டித்தேர்வில் ஒரு பிற்படுத்தப்பட்டவர் – ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முத்தியாலுராஜூ ரேவு மூன்றாவது தடவையாக தேர்வெழுதி – தேசிய அளவிலான முதலிடத்தைப் பிடிக்க முடிந்தது. அதற்கும் பத்தாண்டுகள் கழித்தே 2016ல் பட்டியல் சாதியைச் சார்ந்த ஒருவர் – டினா டபி – தேசிய அளவிலான முதலிடத்தைப் பெற்றிருக்கிறார். இந்த காலஇடைவெளி, சாதியடுக்கில் இவர்கள் வகிக்கும் இடத்தை சூசகமாக தெரிவிப்பது போலிருக்கிறது.
டினா டபியின் குடும்பப் பின்புலத்தை பரிசீலித்தால் அவர் மூன்றாம் தலைமுறை படிப்பாளியாக இருக்கக்கூடுமென யூகிக்கமுடிகிறது. எடுத்தயெடுப்பில் முதல் தடவை எழுதிய தேர்விலேயே அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பெறுவதற்கு இந்த குடும்பப் பின்புலம் பெரிதும் அவருக்கு உதவியிருக்கிறது. எனவே அவர் தனது சாதிக்குரிய இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்ளும் அவசியமின்றி பொதுப்பட்டியலுக்குள் சென்றுவிட்டார். தன்னளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெறாமல் அடுத்தநிலையில் இருக்கிற பட்டியல் சாதிக்காரர் ஒருவர் இடஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ள இதன்மூலம் வழிவிட்டிருக்கிறார். இடஒதுக்கீட்டினால் குறிப்பிட்ட குடும்பங்களே ஆதாயம் அடைகின்றன என்கிற குற்றச்சாட்டு எவ்வளவு பொய்யானது என்பதை முத்தியாலுராஜூ ரேவு போலவே டினாவும் தன்போக்கில் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
அந்த சாதிப் பிள்ளைங்கெல்லாம் ஒருவேளை பாஸ் பண்ணலாம், ஆனால் மெரீட்டிலோ டாப்பராகவோ வரமுடியாது என்கிற இளக்காரப் பேச்சுக்கிடையில் தான் ஒவ்வொரு தேர்விலும் பட்டியல் சாதியினர், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பலரும் பொதுப்பட்டியலுக்குரிய மதிப்பெண்களைப் பெற்று முன்னேறி வருகின்றனர். ஆனாலும் அவர்களை அவரவர் சாதிப்பட்டியலுக்குள் தள்ளியடைத்துவிட்டு பொதுப்பட்டியலில் உள்ள 50 சதவீத இடங்களையும் ‘உயர்த்திக்கொண்ட சாதியினர்’ தமக்குத்தாமே ஒதுக்கிக்கொள்கிற நுண்மோசடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் மீறிய ஒரு தீர்மானகரமான வெற்றியை ஈட்டியுள்ளார் என்பதால்தான் டினா கொண்டாடப்படுகிறார்.
டினாவின் இந்த வெற்றியை கவனம் குவித்து படித்த, கடினமாக உழைத்த ஒரு தனிமனித முயற்சிக்கு கிட்டிய பலன் என்று குறுக்கிப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒட்டுமொத்த கூட்டுழைப்பே அதன் எந்தவொரு தனிமனித வெற்றிக்கும் வழியமைத்துக் கொடுக்கிறது. ( இந்தக் கூட்டுழைப்பின் பலனை அனுபவிக்கும் பலர், தமது சொந்த சமூகத்திற்கு எதையும் திருப்பியளிக்காதவர்களாக, தமக்கு கிடைக்கவிருக்கிற அதிகாரத்தைக் தமது சொந்தநலனுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறவர்களாக சுருங்கி விடுவது பேரவலம்.)
பொது வெளியில் நடமாடுவதற்கும் கல்வி உரிமை உள்ளிட்ட சமூகநீதியை மீட்டுக் கொள்வதற்குமாக தலித்துகளும் பெண்களும் இடையறாது நடத்திவரும் நெடியப் போராட்டத்தினூடான வாய்ப்புகளால்தான் டினா போன்றவர்கள் ஆற்றலோடு வெளிப்படுகின்றார்கள். அறிவும் தகுதியும் நாடாளும் திறமும் குறிப்பிட்ட சாதிகளுக்கே/ ஆண்களுக்கே உரியது என்கிற பிறப்புவாத கற்பிதத்தை எதிர்த்து கருத்தியல்தளத்திலும் களங்களிலும் நீடிக்கும் போராட்டத்திற்கு நியாயம் சேர்த்து வலுப்படுத்துகிறது டினாவின் தேர்ச்சி.
சமத்துவத்திற்காகவும் மனித மாண்புகளுக்காகவும் களமாடிய அம்பேத்கர் என்கிற வெல்லற்கரிய போராளியின் தோள்மீது ஏறி நிற்பதாலேயே தன்னால் இன்று சமுகத்தின் கண்களுக்கு உயரமாகத் தெரியமுடிகிறது என்பதை டினா அறிந்தேயிருக்கிறார். அதனாலேயே அவரை ஒரு தலித்தாக அடையாளப்படுத்தி வெளியாகும் பாராட்டுதல்களை மறுப்பின்றி ஏற்பவராகயிருக்கிறார்.
யாரோ எவரோ போல காட்டப்படாமல் டினா ஒரு தலித் என்றும் சேர்ந்தே பரவும் செய்தி, ‘உயர்த்திக்கொண்ட சாதி’யினரால் மட்டுமே டாப்பராக வர முடியும் என்று கட்டப்பட்டிருந்த பிம்பத்தை சிதறடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் எரிச்சலடைந்த மெரீட்மினுக்கிகளாகிய மோடியடிப்பொடியர்கள், அவரை ஏன் சாதிரீதியாக அடையாளப்படுத்தவேண்டும் என்று வினோதமாக கேட்கிறார்கள். தலித்துகளால் டாப்பராக வரமுடியாது என்று தாங்கள் சொல்லிவந்த வந்த பொய் அம்பலப்படுவதை தடுக்கவே இப்படி கேட்கிறார்கள். இவர்கள் இதற்காகவே முகநூலில் டினா டபி பெயரில் 35 போலிக் கணக்குகளைத் தொடங்கி மோசடியான பதிவுகளை எழுதிவருகிறார்கள்.
அப்படியான பதிவுகளில் ஒன்று – ‘என்னைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து நான் உண்மையில் வருத்தப்படுகிறேன். நானறிவேன், எனக்கு ஆதர்சமளிக்கக்கூடியவர் யாரென்று- அவர் நமது பிரதமர் நரேந்திரமோடிதான். நான் ஒரு எஸ்.சி என்பதாலேயே அம்பேத்கர்தான் எனது ஆதர்சம் என்று ஒப்புக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட வேண்டுமா? ஏன் எங்கு பார்த்தாலும் இந்த ‘ஜெய்பீம்’ வாசகங்கள்? நான் அம்பேத்கரை பெரிதும் மதிப்பவள். அவர் பின்தங்கிய பகுதியினருக்காக நிறைய செய்திருக்கிறார். தலித்துகளை முன்னேற்ற அவர் பாடுபட்டிருக்கிறார். ஆனால் அவர் ஒருபோதும் இடஒதுக்கீட்டை ஆதரித்தவரில்லை. நமது அரசியல் சட்டத்தால் மிகக்குறைந்த காலத்திற்கே பரிந்துரைக்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை வாக்குவங்கியைத் திரட்டும் கருவியாக அரசியல்வாதிகள் மாற்றிவிட்டார்கள்…’’
இந்த மோசடியைக் கண்டு மனம் வெதும்பிய டினா டபி, தனது பெயரில் 35 போலிக்கணக்குகளைத் தொடங்கி சில சமூகவிரோத சக்திகள் பரப்பிவரும் இத்தகைய அருவருக்கத்தக்க கருத்துகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தனது உண்மையான முகநூல் பக்கத்தில் விளக்கமளித்திருப்பதை அகில இந்திய மாணவர் சங்கம் மறுபதிவு செய்துள்ளது (https://www.facebook.com/officialaisa/photos/a.654051061305057. 1073741826.537869562923208/1107732979270194/?type=3&theater)
மோடியால் ஆகர்ஷிக்கப்பட்ட ஒருவர் போட்டோஷாப்பிலும் பொய்ச்சான்றிதழ் தயாரிப்பதிலும் கூட வல்லவராக முடியாது என்பது தொடர்ந்த அம்பலமாகி வருகிறது. ஆகவே டினா அம்பேத்கரால் ஆகர்ஷிக்கப்பட்டாரோ இல்லையோ, நிச்சயமாக மோடியால் ஆகர்ஷிக்கப்பட்டவராக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்ற உறுதிபட சொல்லலாம்.
இந்த மோடியடிப்பொடியர்கள் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் தங்களது குரூர ஆசைக்கு அம்பேத்கரையும் டினாவையும் பயன்படுத்தப் பார்த்திருக்கிறார்கள். சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடஒதுக்கீட்டுக்குதான் பத்தாண்டு காலக்கெடுவை அரசியல் சட்டம் விதித்ததேயன்றி, கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எவ்வித காலக்கெடுவையும் அது விதிக்கவேயில்லை. இந்த உண்மையை மறுப்பதற்கான ஆதாரத்தை அரசியல் சட்டத்திற்குள் போலியாக உருவாக்கும் போட்டோஷாப் வேலையை அவர்கள் இந்நேரம் தொடங்கியிருக்கக்கூடும்.
நன்றி: AISA – All India Students’ Association
நன்றி: ஆதவன்விசை.பிளாக்ஸ்பாட்.இன்