
நாங்கள் ‘விடுவிக்கப்பட்டதாக’
அரசு உலகுக்கு அறிவித்தபோது
சாவின் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த
துப்பாக்கிக் கருந்துளைகளின் முன்
கைகளை உயர்த்தியபடி
‘ஆமென் சுவாமி’என்றோம்.
பிறகு
முட்கம்பி வேலிகளுள்
விடுதலையானோம்.
கூரைகளைப் பிடுங்கிக்கொண்டு
வழங்கப்பட்ட கூடாரங்களுள்
ஒன்றுபோலவே நெளிந்துகொண்டிருக்கிறார்கள்
புழுக்களும் குழந்தைகளும்
‘விடுவிக்கப்படுவதன்’முன்
போராளிகளாக இருந்த பெண்களை
நகக்குறிகளுடனும் பற்தடங்களுடனும்
முகாமின் மூலைகளில்
சடலங்களாகக் கண்டுபிடிக்கிறோம்
ஆயினும்
புத்தர் சாட்சியாக
எதையும் நாங்கள் பார்க்கவில்லை!
எங்களது விடுதலையை
எப்போதும்போல சளைக்காமல்
பிரகடனம் செய்துகொண்டிருக்கிறது அரசு.
வதைமுகாம்களின் சுவர்களில்
தெறிக்கிறது அலறலும் குருதியும்
மலமும் மூத்திரமும்.
முன்னாள் போராளிகள்
பற்கள் பிடுங்கப்பட்டு வீங்கிய உதடுகளால்
இசைத்துக்கொண்டிருக்கிறார்கள்
புனர்வாழ்வின் பாடலை.
‘சகோதரர்களே…!’என்று
தேர்தல்கள் திடீரெனக் கூவியழைக்கின்ற ஓசையில்
இறந்துபோன குழந்தையின்
சின்னஞ்சிறு காலணியை
தவறவிடுகிறாள் தாயொருத்தி.
தசைத்துண்டுகளாகச் சிதறிவிழுந்த மகளை
அகதி முகாமின் அழுக்கடைந்த தரையில்
இன்னமும் நிதானமாகப் பொறுக்கிக்கொண்டிருக்கிறாள்
இன்னொரு பெண்.
ஏ-9 வீதிவழி
‘பைலா’வும் றபானும் அதிர அதிர
யாழ்ப்பாணம் போகும் சிங்களவர்களை
குருதிவாடை நீங்காத ஆடைகளும்
பசியில் ஒளிமங்கிய விழிகளுமாய்
அகதிகளாக விதிக்கப்பட்டவர்கள்
வெறித்தபடியிருக்கிறார்கள்
கதவுகளும் பாதிச் சுவர்களுமற்ற வீடுகளிலிருந்தபடி.
இறந்தவர்களின் ஞாபகங்கள்
உடலினுள் தங்கிவிட்ட
எறிகணை துண்டுகளினையொத்து
வருத்தும் இரவுகளில்
அறியப்படாத போராளியைப் போல
ஒளித்துவைத்திருக்க வேண்டியிருக்கிறது
கசிந்துவிட அனுமதியற்ற துயரத்தையும்.
ஒரு பசுந்தளிருமிலாமல்
அறுத்துப்போட்ட பாழ்வெளியில்
நெட்டுக்குத்தாய் நின்றிருக்கின்றன
தலையறுந்த பனைமரங்கள் மட்டும்.
‘ஒரே நாடு… ஒரே மக்கள்’
‘கட் அவுட்’களில்
இன்னமும்
எங்களைப் பார்த்து
சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருக்கிறார்
மேதகு சனாதிபதி.
அவர்கள் மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்
எங்களை ‘விடுவித்துவிட்டதாக’
நாங்கள் மறுத்தொரு சொல்லும் சொல்லோம்
துப்பாக்கிச் சன்னங்கள்
வாய்க்குள் பிரவேசித்து
பிடரிவழியாக வெளியேறுவதை
நீங்களும் விரும்பமாட்டீர்கள்தானே…?
….
கவிஞர் குட்டி ரேவதியால் தொகுக்கப்பட்ட ‘முள்ளிவாய்க்காலுக்குப் பின்’கவிதைத் தொகுப்பிலிருந்து….
றபான் – சிங்களவர்கள் கொண்டாட்டங்களின்போது அடிக்கிற தோல்வாத்தியம்.
பைலா – ஒருவகையான துள்ளல் இசை.
தமிழ்நதி, எழுத்தாளர். தமிழ்நதியின் சமீபத்திய படைப்பு ‘பார்த்தீனியம்’
முகப்புப் படம்: ஓவியர் புகழேந்தி