புனித திரு உரு’ பிம்பங்கள்!

அ. மார்க்ஸ்
அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

நமது அரசியல் தலைவர்கள் பற்றிய ‘திரு உரு’பிம்பங்களைக் கட்டமைப்பது, அப்பழுக்கற்ற iconic images உருவாக்குவது முதலியன ஆபத்தானது என அருள் எழிலன் கூறியுள்ளது முக்கியமான ஒன்று. காமராசர் பற்றிக் கிட்டத் தட்ட ஒரு குட்டிக் கடவுள் என்கிற அளவு பிம்ப உருவாக்கம் நடதுள்ளதை அவர் குறிப்பாகக் கூறியுள்ளார்

காமராசர் குறைகளே இல்லாதவர் என்பதல்ல. ஆனால் காமராசர், கக்கன் முதலானோருக்கு இத்தகைய பிம்பம் உருவானது எப்படி என்பது பற்றியும் நாம் ஆராய வெண்டும். இன்றைய தலைவர்களுடன் ஓப்பிட்டு அது உருவாகிறது. மூன்று முக்கிய அம்சங்களில் அவர்கள் இன்றைய தலைவர்களிடமிருந்து வேறுபடுத்தப் படுகிறார்கள்.

1..எளிமை 2. ஊழலின்மை 3. தன் குடும்பத்தினரை வாரிசுகளாக உருவாக்காமை. குறிப்பாகத் தன் அம்மாவைக் கூட அவர் தன்னுடன் கொண்டு வைத்துக் கொண்டால் அவரோடு சில உறவினர்களும்கூட வந்துவிடுவார்கள், அதன் மூலம் சில தவறுகள் நடக்கலாம் என அதை அவர் தவிர்த்தார் என்கிற செய்திகள் எல்லாம் காதில் விழும்போது இன்றைய தலைவர்களுடன் ஒப்பிட்டு அவர்கள் கடவுளர் ரேஞ்சுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

இது பிரச்சினை இல்லை. பிரச்சினை எங்கு வருகிறது எனால் அவர்கள் மீது விமர்சனகளே கூடாது என்கிற அளவிற்குப் போகும்போதுதான். காமராசரிடமும் பல தவறுகள் இருக்கத்தான் செய்தன. அரசியல் ரீதியாகவும் இருந்தன. முதுகுளத்தூர் கலவரத்தைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன். கலவரத்தை நிறுத்தணும்னா அவங்க ஆட்களில் நாலுபேரைச் சுட்டுத் தள்ளுங்க என காமராசருக்குப் பெரியார் அறிவுரைத்ததாகவும் உடனே காமராசர் உத்தரவிட 5 அப்பாவித் தேவரினத்தவர் பிடித்துச் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் கலவரம் நின்றதெனவும் இங்கு ஒரு கதை உண்டு. அப்படி காமராசரிடம் பெரியார் சொன்னாரா என்பது ஒரு பக்கம். ஆனால் அப்படி ஐந்து அப்பாவிகள், கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பிடித்து வரப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டது உண்மை. காமராசரின் இந்தச் செயலை எப்படிச் சரி எனச் சொல்ல இயலும்? இப்படி நான் சொல்வதை ஒரு வேளை அருள் எழிலனே கூட ஏற்காமல் போகலாம். இப்படி நான் சொல்வதற்காக் என்னை ஒரு தலித் விரோதி என்றும் கூட யாரும் சொல்லலாம்.

எல்லோரிடமும் நல்லவைகளும் உண்டு, எதிர்மறை அம்சங்களும் உண்டு. தந்தை பெரியாரை நான் முழுமையாகக் கொண்டாடுகிறேன். ஆனால் அதற்காக அவர் குத்தூசி குருசாமியை நடத்திய விதத்தை ஏற்றுக் கொள்ள இயலுமா?அதேபோல சினிமா என்கிற கலைவடிவத்தை 5 தீமைகளில் ஒன்று என முற்றாகப் புறக்கணிக்கச் சொன்னதையும் வீட்டில் கூடத் தமிழிலேயே பேசாதீர்கள் எனச் சொன்னதையும் மிகவும் ஆழமாகப் புரிந்து கொள்ளாமல் அப்படியே எடுத்துக் கொள்ள இயலுமா?

கார்ல் மார்க்சைவிடச் சிறந்த அறிஞர் ஒருவர் உலக வரலாற்றில் காண்பது அரிதுதான். அதற்காக அவர் அரசியல் ரீதியாக பகூனினை எதிர் கொண்ட விதத்தையும் சொந்த வாழ்க்கையில் ஹெலன் டெமூத்திடம் நடந்து கொண்டதையும் எப்படி விமர்சிக்காமல் இருக்க இயலும்

சோஷலிசக் கட்டுமானத்தில் தவறுகள் லெனின் காலத்திலிருந்தேதான் தொடங்குகின்றன.

இதையெல்லாம் சொல்லித்தான் ஆக வேண்டும். சோல்லாமல் இருப்பதுதான் பல மிகைப்படுத்தப்படல்களுக்கும், அசட்டு அரசியல் களுக்கும் பல தவறுகளுக்கும் காரணமாகின்றன.

2. இப்படித் தெய்வத் திரு உருக்களையும் கூட விமர்சனத்திற்குள்ளாக்கும் நெஞ்சுரம் இன்றைய காலத்தின் தேவை என அருள் எழிலன் சொல்வது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் இங்கே முற்றிலும் எதிர்மறைத் திரு உருக்களாகக் கட்டமைக்கப்பட்டவர்கள் குறித்த சில மறுபார்வைகளும் அவசியம்.

இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படிக் காமராசரின் எதிர்மறை அம்சங்களைப் பேசுவது என்பது அவரை முற்றாக மறுப்பது ஆகாதோ அவ்வாறே எதிர்மறை icon ஆகக் கட்டமைக்கப்பட்ட ஒருவரின் ஏதேனும் ஒரு சரியான அம்சத்தைச் சொல்வது என்பது அவரை முழுமையாக ஏற்றுக் கொள்வதோ கொண்டாடுவதோ ஆகாது.

வைகோ சமீபத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலையிடப் போனதை அவரை திரு உருவாகக் கொண்டாடுபவர்கள் எதிர்த்தது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் அவரை எதிர்மறை திரு உருவாக நினைப்பவர்கள் எதிர்த்ததும் அத்தனை அபத்தம்தான். ஒரு வெகுஜன அரசியலைச் செய்யும் அரசியல்வாதி தேவர் சிலைக்கு மாலையிடப் போனதைப் புரிந்து கொள்ள வெண்டும் என நான் எழுதியதற்காக ஏன்னைத் திட்டி இடப்பட்ட பின்னூட்டங்களைப் பாருங்கள்.

முத்துராமலிங்குருக்கு இம்மானுவேல் சேகரன் அவர்களின் கொலை அதை ஒட்டிய கலவரங்கள் ஆகியவற்றில் உள்ள பங்கிற்காக அவரை நாம் கண்டிப்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் அவருக்கு வேறு வரலாறுகளுமுண்டு. தேவர் சாதி ஒர் பக்கம் ஆதிக்க சாதி.இன்னொரு பக்கம் அது ஒடுக்கப்பட்ட சாதியும் கூட. குற்றப்பரம்பரையாக கடும் ஒடுக்கு முறைகளுக்கு ஆளானவர்களுக்கு அந்தக் கொடுமையிலிருந்து விடுதலைபெறப் போராடியவர் அவர்.

சுதந்திரப்போராட்டத்திலும் அவருக்கு ஒரு பங்குண்டு. சுதந்திரப் போராட்டத்திலும் நெல்லைச் சதிவழக்கிலும் பத்தாண்டுகளுக்கும் மேல் சிறைப்பட்டிருந்த தியாகி தோழர் ஐ.மாயாண்டி பாரதி அவர்களை நானும் சுகுமாரனும் கடைசியாகச் சந்தித்த போது அவர் சில பழைய புகைப்படங்களைக் காட்டினார். அதில் ஒன்றில் முத்துராமலிங்கர் ஒரு நாற்காலியில் அமர்ந்துள்ளார். காலடியில் ஐ.மாபா. அந்தப் படத்தின் ஒரு பிரதி சுகுமாரனிடம் உள்ளது. இதையேலாம் கணக்கில் எடுத்துக் கொள்வதென்பது அவரின் பெயரால் இன்று நடக்கும் அரசியலை ஏற்றுக் கொள்வதென்பதாகாது.

3. அரசியலில் மட்டுமல்ல அரசியலுக்கு அப்பால் இவ்வாறு உருவாக்கப்படும் திரு உருக்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. நீதியரசர் சந்துரு போன்றோர் இன்று அவ்வாறு விமர்சனத்திற்கு அப்பா்ற்பட்டு ச் சிலரால் திரு உருக்களாகக் கட்டமைப்பதிலும் ஆபத்துகள் உண்டு. அவர்களிடம் உள்ள பிரச்சினைகளையும் நாம் பேசித்தான் ஆக வேண்டும்.

******************************************************************************

இந்த விவாதத்தில் நான் தலையிடுவதில் உள்ள பிரச்சினைகளை உணர்ந்துதான் நான் இந்த ரிஸ்கை எடுத்துள்ளேன். இன்று இந்த “iconisation” என்பது எத்தனை மிகை எளிமைப்படுத்தப்பட்ட புரிதல்களுக்கும், அசட்டு அரசியல்களுக்கும், ஆபத்தான போக்குகளுக்கும் காரணமாகி உள்ளது என்பது குறித்து விரிவாகவே எழுத உள்ளேன்.

அ.மார்க்ஸ், ஓய்வுபெற்ற பேராசிரியர்; எழுத்தாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.