“தலித் தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்”: திருமாவளவன் குறித்து ஜெயமோகன்

ஜெயமோகன்

ஜெயமோகன்
ஜெயமோகன்

சமீபத்தில்  தமிழக அரசியல் சூழலைப்பற்றி மலையாளத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் இன்றைய தமிழக அரசியலில் முதன்மையான தலைவர் என்று தொல்.திருமாவளவன் அவர்களைக் குறிப்பிட்டிருந்தேன் [ஆனால் தமிழகச் சாதியமனம் அவரை பொதுத்தலைவராக எளிதில் ஏற்றுக்கொள்ளாது என்றும்]. எல்லா தலைவர்களைப்பற்றியும் அவதானிப்புகளும் விமர்சனங்களும் கொண்ட கட்டுரை அது.

மலையாளத்தில் திருமாவளவன் பரவலாக அறியப்படாதவர் என்பதனாலும், நான் கடுமையான விமர்சகன் என அறியப்பட்டவன் என்பதனாலும் அவரைப்பற்றி முழுமையான ஒரு கட்டுரை தரமுடியுமா என பல ஊடகங்கள் கோரியிருக்கின்றன. ஒரு நீள்கட்டுரை எழுதும் எண்ணம் உள்ளது

சமூகத்தின் உள்நீரோட்டங்களின் விளைவாகவே எப்போதும்  புதிய அரசியல்தலைவர்கள் உருவாகி வருகிறார்கள். நாமும் அந்தப் பின்னணியில் வைத்தே அவர்களை எப்போதும் புரிந்து மதிப்பிடுகிறோம். ஆனால் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் அரசியல்தலைவர்கள் அந்த நாற்றங்காலில் இருந்து தங்கள் ஆளுமைத்திறனால் மேலெழுந்து வேரோடி கிளைவிரிக்கிறார்கள். நாம் அறிந்த அத்தனை பெருந்தலைவர்களின் வளர்ச்சிக்கோடும் இப்படிப்பட்டதுதான்

திருமாவளவன் எண்பதுகளில் தமிழக அரசியலில் உருவான தலித் எழுச்சியின் விளைவாக உருவான தலைவர். இந்திய அரசியலில் முற்பட்ட வகுப்பினரின் ஆதிக்கத்திற்கு எதிராக பிற்படுத்தப்பட்டோர் அரசியல் எழுந்து அதிகாரத்தை அடைந்தது. அதற்கு அடுத்தபடியில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் அதிகாரம் உருவாகவில்லை என்று உணர்ந்தனர். அதை அடையும்பொருட்டு மகாராஷ்டிரத்திலும் குஜராத்திலும் கர்நாடகத்திலும் தலித் அரசியல் உருவாகி தமிழகத்தை வந்தடைந்தது. திருமாவளவன் அவ்வரசியலின் விளைகனி

ஆனால் சென்ற ஆண்டுகளில் திருமாவளவன் தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் தலைவர்களில் ஒருவராக மலர்ந்திருப்பதைக் காட்டுகிறது அவரது சமீபத்திய செயல்பாடுகள். பொறுமையின்மையுடன் எழுந்து வந்தவர் அவர். வெறுப்பு கலந்த குரலில் அவர் பேசிய காலங்கள் உண்டு. எதிர்மறை அரசியலையும் வன்முறை அரசியலையும் அவர் முன்வைத்ததுண்டு என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கான நியாயங்களும் அவருக்கிருந்தன. உண்மையில் எவருக்கேனும் அதற்கான நியாயம்  இங்கு உண்டென்றால் அவருக்கு மட்டுமே.

ஆனால் காலப்போக்கில் அவர் கனிந்து நிதானமான அரசியல்வாதியாக உருவாகியிருக்கிறார். சென்ற பல கொந்தளிப்பான நிகழ்வுகளில், அவரது சாதி நேரடியான ஒடுக்குமுறைக்குள்ளானபோதுகூட, அவர் காட்டிய நிதானமும் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் முன் நின்று பேசிய ஜனநாயக உணர்வும் பலவகையிலும் முன்னுதாரணமானது.  அவரை ஒரு ‘தலித்’ தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்.

சமீபத்தில் தமிழ் இந்துவில் வெளியான சமஸின் நீண்ட பேட்டி திருமாவளவனின் சமூக, அரசியல் பார்வைகளை வெளிக்கொணர்வது. இன்று தமிழக்த்தில் இத்தனை தெளிவான சிந்தனை கொண்ட இன்னொரு தலைவர் இல்லை. பலரை பற்றி நான் மேலும் தனியாக அறிவேன் என்பதனல் உறுதிபடச் சொல்லமுடியும்.  மிக எளிய அளவில்கூட வாசிப்போ பொதுவான புரிதலோ இல்லாத பாமரர்களே பலர்.அரசியல், சமூகவியல் என பல தளங்களில் தெளிவான கருத்துக்களும் செயல்திட்டங்களும் கொண்டவராக திருமாவளவன் அப்பேட்டியில் தெரியவருகிறார். தன் பலத்தை மட்டுமல்லாது பலவீனங்களையும் அறிந்திருக்கிறார். தன் சாதனைகளை மட்டுமல்லாது பிழைகளையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.

திருமாவளவன் என்னும் தலைவரை அவரது ஆளுமையின் அனைத்து இழைகளையும் தொட்டு எடுத்து அடையாளப்படுத்துகிறது அந்த பேட்டி.  எதிர்காலத்தில் அப்பேட்டியிலிருந்து நாம் மேலும் விரிவாக்கி அவரைப்பற்றிப் பேசவிருக்கிறோம் என்று எண்ணிகொண்டேன். அதை சமஸுக்கு எழுதினேன்

திருமாவளவனின் அரசியலுக்கும் பிற அத்தனை அரசியல்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? முதன்மையாக, பிற எவருக்கும் எந்தவகையான பொதுநல நோக்கமும் இல்லை. பதவி, அதிகாரம், பணம் அன்றி. இதை அறியாத அப்பாவிகள் எவரும் இன்று தமிழ்நாட்டில் இருப்பார்கள் என நான் நம்பவில்லை. திருமாவளவன் ஒருவரே தன் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைகண்டு கொதித்து, அவர்களின் நலனுக்காக அரசியலுக்கு வந்தவர். அந்நோக்கத்தை மேலும் தமிழகம் சார்ந்து விரிவுபடுத்திக்கொண்டு வருபவர்

திருமாவளவன் வெல்லவேண்டுமென விழைகிறேன்.

நன்றி: ஜெயமோகன்.இன்

One thought on ““தலித் தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்”: திருமாவளவன் குறித்து ஜெயமோகன்

  1. To get accepted as a leader one has to shun partician and sectarian attitude .He has to have concern for all irrespective_of cast , religion .He must not only preach but practice .

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.